Saturday, February 15, 2020

ட்விட்டரைக் கலக்கும் ‘வீதிக்கு வாங்க ரஜினி’!


வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் சமூகவலைதளவாசிகள் ரஜினியை வீதிக்கு வாருங்கள் என அழைத்து வருகின்றனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலில் உயிர்ப்பித்திருக்கும் கேள்வி ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கருணாநிதி முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஒதுங்கிய நிலையில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும்போது வருவேன் என்றும் ரஜினி கூறினார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் காத்துக்கொள்ள எத்தனை எத்தனையோ போராட்டங்களை தினமும் முன்னெடுத்துவரும் போது வராத ரஜினி 2021 தேர்தலில் போட்டியிடத்தான் வீதிக்கு வருவாரா என்று சமூக வலைதளங்களில் சாமானிய மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர்.


நள்ளிரவில் விழித்துக் கொண்ட தமிழ்நாடு: பற்றி எரியும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்!

அதன்பின் நடைபெறும் ஒவ்வொரு போராட்டங்கள் போதும் போர் வந்துவிட்டது ரஜினி, இப்போது வாருங்கள் என சமூகவலைதளங்களில் மீம் போட்டு அழைத்தனர். ஆனால் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டம் குறித்தும், அரசின் அறிவிப்புகள் குறித்தும் ரஜினி கருத்து சொல்லாமலே இருந்தார்.

இருப்பினும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து அதை விவாதமாக மாற்றிவிட்டவர், அது முடிந்ததும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசினார். அப்போது குடியுரிமைச் சட்டத் திருத்தமோ, தேசிய குடிமக்கள் பதிவேடோ இஸ்லாமியர்களைப் பாதிக்காது என்றார். இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் குரல் இந்த ரஜினிகாந்தின் குரலாகத்தான் இருக்கும் எனப் பேசினார். இந்தப் பேச்சும் விவாதத்தைக் கிளப்பியது.

வண்ணாரப்பேட்டையில் காவல்துறை நடத்திய கோர தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று வண்ணாரப்பேட்டையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் போலீஸார் நடத்திய தடியடியில் பலர் காயமடைந்தனர். முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தில் ஆண் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் பலமாக தாக்கியுள்ளனர். ஆண்கள் சிலரைத் தனியாக அழைத்துச் சென்று பல காவலர்கள் சேர்ந்து கூட்டமாக தாக்கியுள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

சென்னையில் தடியடி எதிரொலி... இராமநாதபுரத்திலும் சாலை மறியல்...

தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டரில் #வீதிக்குவாங்க_ரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது. இஸ்லாமியர்கள் தாக்கப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள், உயிரிழப்பு செய்திகளும் வருகின்றன. இஸ்லாமியர்களுக்குப் பிரச்சினை என்றால் முதல் குரல் எனது குரல் என்று சொன்ன ரஜினி இப்போதாவது வீதிக்கு வாருங்கள் என்று அழைக்கும் விதமாக இந்த பதிவுகள் அமைந்துள்ளன.
https://tamil.samayam.com/

No comments: