“
இஸ்லாமிய நண்பர்கள் யாராவது எனக்கு அராபிய நாட்டில் குடியுரிமை வாங்கி தர முடியுமா?”// என்று செல்வம் யாதவ் என்ற ஒரு நண்பர் கிண்டலாக முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார்.
நண்பரே ! நான் பஹ்ரைன் நாட்டில் கடந்த42 ஆண்டுகளாக வசித்து வருபவன், உங்களுடைய இந்த கேள்விக்கு நான் வசிக்கும் இந்த இஸ்லாமிய நாட்டை வைத்து உங்களுக்கு உதாரணம் காட்ட முடியும். நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை இங்கு வசிக்கும் என் தொப்புள் கொடி உறவுகள் அனைவரும் சாட்சி கூறுவார்கள்.
பஹ்ரைன் நாட்டு பிரஜைகளாக மாறிய எண்ணற்ற இந்து சகோதரர்களை இங்கு நாம் காண முடியும். அரபு நாட்டவர் 15 ஆண்டுகள், மற்றும் அரபு மொழியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் 25 ஆண்டுகாலம் இங்கு வசித்தால் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.
கேவல்ராம், பாட்டியா, கஜ்ரியா, சோனி (குஜராத்தி பொற்கொல்லர் வகுப்பினர்) போன்ற குடும்பத்தினர், ஹிந்து தட்டாய் சமூகத்தைச் சேர்ந்த இங்கு பலகாலமாக வசித்து வரும் இன்னும் பல குடும்பத்தினர் இங்கு பஹ்ரைன் பிரஜைகளாக குடியுரிமை பெற்று அனைத்து சலுகைகளும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
பஹ்ரைன் கடவுச்சீட்டு பெற்ற பாகிஸ்தானிய கிறித்துவர்கள், மற்றும் இந்திய தமிழர்களும் உண்டு.. குடியுரிமை விண்ணப்பித்து கிடைக்காத இந்திய முஸ்லீம்கள் உண்டு. குடியுரிமை பெற்ற இந்திய இந்துக்கள் உண்டு. இந்நாட்டு அரசாங்கம் மத பாகுபாடு பார்ப்பதில்லை.
இங்கு நிரந்தர குடியுரிமை பெற்ற கேரளம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து சகோதரர்கள் நிறைய இருக்கிறார்கள். (பெயர் குறிப்பிட விரும்பவில்லை. இதைப் படிக்கும் இங்குள்ள தமிழன்பர்களுக்கு புரியும்)
நெடுஞ்சாலைகளில் அடுத்தடுத்து மசூதிகளும் உயர்ந்து எழுப்பப்பட்டிருக்கும் கிறித்துவ தேவாலயங்களும் காணலாம். இங்கு சுகி சிவம் அவர்கள் வந்தபோது “நோன்பு காலங்களில் இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் ஒளிந்து ஒளிந்து கழிவறையில் மறைந்துதான் உணவருந்த வேண்டும் என்று ஒரு பிரசங்கத்தில் கூறினீர்களே, இங்குள்ள இந்து முஸ்லிம் ஒற்றுமையை பாருங்கள். இதுதான் இங்குள்ள உண்மை நிலை” என்று விளக்கிச் சொன்னேன். “எனக்கு தரப்பட்ட தவறான தகவல் அது. அதற்காக வருந்துகிறேன்” என்று உயர்ந்த மனப்பான்மையோடு அவர் கூறியது மகிழ்வைத் தந்தது.
ஐயப்பன் கோயில் (மூன்று), ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயில் (5 பிரிவுகள்), குருவாயூரப்பன் கோயில் (இரண்டு), ஆஞ்சநேயர் கோயில், காளி கோயில், ஷிர்டி சாய்பாபா கோயில், புட்டபர்த்தி சாய்பாபா கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில், முருகன் கோயில் (இரண்டு), குருத்வாரா சீக்கிய கோயில் (இரண்டு) உள்ளன, 200 வருட பிரமாண்டமான கிருஷ்ணன் கோயில் இங்குள்ள முன்னால் அரசர் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதுபோல்தான் ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 2008 முதல் 2013 வரை பஹ்ரைன் நாட்டின் அமெரிக்கத் தூதராக இருந்தவர் ஹுதா நூனூ. இவர் ஒரு யூதப் பெண்மணி. அதனைத் தொடர்ந்து 2013 முதல் தற்காலம் வரை பஹ்ரைன் நாட்டு அமெரிக்கத் தூதராக இருப்பவர் நான்ஸி கெதூரி. இவரும் யூதப் பெண்மணி. இங்கு யூதர்களின் வழிபாட்டுத்தளம் (Synogogue) இருக்கிறது. மற்றும் யூதர்களுக்கான அடக்கஸ்தலம் (கல்லறை). இந்துக்களுக்கான் எரி மயானம் உண்டு.
கிறித்துவ தேவாலயங்கள் ஏறக்குறைய 17 இருக்கிறது. கத்தோலிக், ரோமன் கத்தோலிக், சிரியன் கத்தோலிக், பெந்தேகொஸ்தே, Protestant, Four Square Church இப்படி எல்லா பிரிவினர்களுக்கும் தேவாலயங்கள் தனித்தனியாக உள்ளன, தமிழில் உபதேசங்கள் நடைபெறும் கிறித்துவ வழிபாட்டுத்தலங்கள் மாத்திரம் சுமார் 6 உள்ளன,
முஸ்லீம் பெண்மணிகள் என்றாலே பிற்போக்கானவர்கள் என்ற ஒர் அபிப்பிராயம் பொதுவாகவே நிலவுகிறது. இங்கு கடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 293 வேட்பாளர்களில் 41 வேட்பாளர்கள் பெண்கள்.
பஹ்ரைன் நாடு வெறும் 765.3 சதுர கிலோ மீட்டர் கொண்ட மிகச் சிறிய குட்டி நாடு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
(இப்பதிவு நண்பர் Rajini Arupathy அவர்களின் வேண்டுகோளின்படி உண்மையை உரக்கக் கூற எழுதப்பட்டது)
NB: இந்திய தூதுவரகத்தின் கணக்குப்படி இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 0.5% இந்தியர்கள் பஹ்ரைன் பிரஜைகளாக உள்ளனர். இதில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், இந்துக்கள் அனைவரும் அடக்கம். மத வேற்றுமை அறவே கிடையாது.
#அப்துல்கையூம்
No comments:
Post a Comment