Saturday, February 22, 2020

தாயைத் தந்து மொழியையும் தந்தவன் இறைவனல்லவா !

Abu Haashima
எனக்கொரு தாயைத் தந்து
மொழியையும் தந்தவன்
இறைவனல்லவா !
அவன் தந்த தமிழால்
அவனை வாழ்த்துவது
என் தமிழுக்கு அழகல்லவா !

இறைவா ...
யா அல்லாஹ் !

மகாக் கவிஞன்
நீதான் !

மனிதர்கள்
கவிதை எழுதினால்
சிலருக்கு
சிரிப்பு வரும்
பலருக்கு
அழுகை வரும்
இதுவெல்லாம்
கவிதையா என்று
தர்க்கம் வரும் !


இலக்கணக் குற்றம்
இலக்கியக் குற்றமெல்லாம்
குடை பிடிக்கும் !
விவாதங்கள் நடக்கும்
சட்டைகள் கூடக் கிழியும் !

ரஹ்மானே ...
மழையால்
நீ
கவிதை எழுதினால்தான்
உன் கவிதை
நீரோட்டத்தில்
அழுக்குகளும்
வழக்குகளும்
அடித்துச் செல்லப்படும் !

உன் கவிதை நதியில்தான்
உலகமே
குளிக்கிறது
உள்ளங்களெல்லாம்
உவகையில்
குதிக்கிறது !

கவிதையை ரசிக்காதவனும்
உன் கவிதை வந்தால்
ஒதுங்கி நின்றாவது
பார்க்கிறான்
நனைய விரும்பாவிட்டாலும்
கையாவது நனைக்கிறான் !

உன் கவிதைதான்
மலர்களையும்
மகிழ்விக்கிறது !
மலைகளையும்
குளிப்பாட்டுகிறது !
பயிர் பச்சைகளை
பாட வைக்கிறது
கடல் அலைகளை
ஆட வைக்கிறது !

உன் கவிதை
பிரசுரமாகும் போதெல்லாம்
உலகம்
உற்சாகமாய்
அதை
வாங்கிக் கொள்கிறது !
படித்து முடித்த சந்தோசத்தில்
ஒழுவெடுக்கிறது !

என் கவித்தலைவனே ...
உன் கவிதைத் துளிகளை
சிந்த விட்டு
நீ படைத்த மண்ணை
சஜ்தா செய்ய வைக்கிறாய் !
இப்லீசின்
ஆணவத்தை
அடங்கிப்போக வைக்கிறாய் !

உன் கவிதையின்
ஒவ்வொரு துளியும்
உன் அருளாய்
இறங்குகிறது
உன் அன்பாய்
எங்களைத் தழுவுகிறது !

என்னையும்
கவிதை எழுத வைத்த
என் ஆசிரியனே
நீ அனுப்பும் கவிதையின்
ஒருதுளி
கவி எடுத்து
உன் கருணையைப் புகழ்ந்து
நானும்
எழுதிவிட்டேன்
ஒரு கவிதை !

பொருந்திக் கொள்வாய்
வல்லோனே
எனை ஆளும் நல்லோனே !

எப்போதும்
எங்கள் தாகம் தீர்க்க
குன்றாது
குறையாது
வான் மழையாய்
அனுப்பி வைப்பாய்
உன் கவி
மழையை
ரப்புல் ஆலமீனே !

Abu Haashima

No comments: