புவியின் பிரதான படைப்பினமாகிய மனிதன் தனக்கு இன்பம் வரும் வேளையில் இன்புற்று துள்ளுவதும், துன்பம் சிறிதே தொடும்போது துவண்டு உழல்வதும் இயற்கையான அனிச்சைகள்! ஆனாலும் அந்த இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் சமமாக பாவித்து சாந்தம் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதென்பது ஒரு ஞானியின் நிலைக்கு ஒப்பாகும்!
அப்படிப்பட்ட மனப்பக்குவத்தை படிக்க வேண்டிய ஒரு மனிதன் அதன் அடிப்படையில் தன் வாழ்க்கையை நடத்தி அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரியவரை காணச்சென்றான்! சென்றவன் அந்த பெரியவரை நோக்கி... ஐயா உங்களைப்போலவே எனக்கும் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக கருதி அமைதியாய் வாழ ஆசை! ஆகவே அதை நீங்கள்தான் எனக்கு கற்றுத்தர வேண்டும் என்று மிக பவ்யமாய் வேண்டி நின்றான்!
அதற்கு அந்த பெரியவர்... தம்பி அதை உனக்கு கற்றுத்தருவதை விடவும் நான் யாரிடம் கற்றேனோ அங்கே கூட்டிச்செல்கிறேன் வா...! வந்து நான் சொல்லும் இடத்தில் காலையில் தொடங்கி மாலைவரை அமர்ந்திரு...! பிறகு அதை நீயும் கற்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி ஒரு ஆற்றிற்கு அருகிலுள்ள சமவெளி பிரதேசத்திற்கு கூட்டிச்சென்றார்!
இருவருமே அந்த சமவெளிப்பகுதிக்கு சென்று அமர்ந்தனர்! அப்போது ஒரு சலவைத் தொழிலாளி அழுக்கு துணிகள் நிறைந்த ஒரு பெரும் பொதியை ஒரு கழுதை மீது வைத்து ஓட்டிச்சென்றார்.
அப்போது அந்த பெரியவர் தன்னுடன் வந்த மனிதனை நோக்கி... இதோ பார்த்துக்கொள் அந்த கழுதையை... இப்போது சலவைக்காக அழுக்கு துணிகளை சுமந்து செல்கிறதே இந்த நிலையை நன்றாக கவனி... துணிகள் துவைக்கப்பட்டு உலர்த்தி சுத்தமாக மாலையில் அது திரும்பி வரும் வேலைவரை நாம் இங்கேயே இருந்து அதன் நிலையை மீண்டும் கவனிக்க வேண்டும் என்று சொன்னார்.
மாலையும் வரவே, கழுதையும் தன் எசமானனுடன் துவைத்து உலர்த்தி சுத்தப்படுத்தப்பட்ட துணி பொதிகளை தூக்கிக்கொண்டு அமைதியாக வந்து கொண்டிருந்தது! இப்போது பெரியவர் அந்த மனிதனை பார்த்து கேட்டார்! அந்த கழுதை காலையில் அழுக்கு துணிகளை சுமந்த சென்றபோதும் மாலையில் சுத்தப்படுத்தப்பட்ட தூய்மையான துணிகளுடன் வரும்போதும் ஏதாவது வித்தியாசம் கண்டாயா...? என்று கேட்டார்!
அதற்கு அந்த மனிதன்... இல்லை ஐயா..! காலையில் எப்படி சென்றதோ அதுபோலவே மாலையிலும் அதே நிலையில்தான் வந்து கொண்டிருக்கிறது எந்த வித்தியாசமும் இல்லையே...! என்று கூறினான். உடனே பெரியவர் சொன்னார் இதுதான் உனக்கான பாடம்...! நான் கற்றதும் கூட இந்த கழுதையிடம்தான் என்று சொன்னார்.
அதற்கு கூட வந்த மனிதன் மிகவும் வியப்பாக... எனக்கு புரியவில்லை ஐயா..! சற்று விபரமாக கூறுங்கள் என்று கூற!
பெரியவர் விளக்கினார்.
அந்த கழுதை காலையில் சுமந்து சென்றதென்னவோ அழுக்கு துணிகளை, ஆனால் மாலையில் கொண்டு வந்ததோ துவைத்து சலவை செய்த சுத்தமான துணிகள்! அழுக்கை சுமந்து சென்றபோது என்னடா இது...? அழுக்கு துணிகளை சுமந்து செல்கிறோமே என்று அது வறுத்தப்படவுமில்லை! அதையே துவைத்து சுமந்து வந்தபோதும் ஆகா.. நான் சுத்தமான துணிகளை அல்லவா எடுத்து வருகிறேன் என்று மகிழ்ந்து துள்ளி குதிக்கவும் இல்லை!
இரு சமயங்களிலும் அதன் மனநிலை மாறவே இல்லை பார்த்தியா...? என்று சொன்னார்!
இன்பத்திலும் துன்பத்திலும் மனநிலையை சமன்படுத்தும் வித்தையை அந்த கழுதையிடமிருந்து கற்றார்கள் அவர்கள்!
நாம் வசிக்கும் அண்டப் பெருவெளியே ஒரு பிரமாண்ட பிரதான பாடசாலை! இங்கேயுள்ள ஒவ்வொரு இயற்கையின் வெளிப்பாடும் ஒரு ஆசிரியருக்கு சமம்.....!
அந்த கழுதையும் அப்படித்தான்....! 🙏
@சாம் ஹமீதானந்தா...✒
No comments:
Post a Comment