படைப்பாளனின் பதிவேடு..!
இதுவரை இல்லாத ஒரு புது தைரியம்
கடந்த 4 ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கின்றது.
செலவு செய்யும் தைரியம்..!
சம்பாதிக்க ஆரம்பித்ததும் செலவு செய்யும் தைரியமும்
கூடவே சேர்ந்து bonus-ஆக வந்து விட்டது.
அடிக்கடி ஆட்டோவில்தான் காலைப் பயணம் அலுவலகத்திற்கு.
அப்படி ஒரு நாள்,
எதை பார்க்கின்றேன், என்ன யோசிக்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்
சென்று கொண்டு இருந்தேன்.
திடீரென்று காற்று வழியாக வந்த ஒரு சிறிய கரிய கோழி சிறகு
தொடுதல் என்று கூட சொல்ல முடியாத அளவிற்கான
ஒரு ஸ்பரிசத்தை என் துப்பட்டாவுடன் நிகழ்த்திவிட்டு,
என்னையும் உணர்த்திவிட்டு சென்று விட்டது வந்த வழியே...!
இது போன்ற சில ஸ்பரிசங்களுக்காகச்
செலவு செய்யும் தைரியமும் அவசியப்படத்தான் செய்கிறது.
அச்சிறிய சிறகின் இன்றைய பயணத்தில்
என்னுடனான சந்திப்பும் எழுதப்பட்டுள்ளது
லவ்ஹுல் மஹ்பூளில் (படைப்பாளனின் பதிவேடு )..!
"விளையாட்டாக இவ்வுலகை படைக்கவில்லை",
"காரணம் இன்றி எதுவும் நடப்பதில்லை"
----- இறை வாக்கு .
எந்தக் காரணத்திற்காக?.. எந்தத் தொடர்பிற்காகச்
சந்தித்துக் கொண்டோம்.. நானும் அச்சிறகும் ...!!
இந்த சந்திப்பிற்கான பயணத்தை ஒரே புள்ளியில் இருந்து தொடங்கினோமா நாங்கள் இருவரும்?..
லவ்ஹுல் மஹ்பூளில், எழுதப்பட்ட
அந்த நொடியில் இருந்து சந்தித்தோமா?..
இதற்கான திட்டம் இறைவனால் தீட்டப்பட்ட பொழுதில் இருந்தேவா?..
இந்த அற்புதப் பயணத்தில்
சந்தித்த, சந்திக்காத,
பேசிய, பேசாத,
பழகிய, பழகாத
என் சக பயணிகளுடன் சேர்ந்து பயணத்தின் எல்லையை எட்டுவதற்குள்
பயணத்தின் அர்த்தம் புரியுமா.. காரண காரியங்களுடன்?...!
அனைவரும் ஒன்றாகவே ஆரம்பித்து, ஒன்றாகவே பயணிக்கின்றோம்...
வேறு வேறு பாதைகளில் ஒரே இலக்கை நோக்கி.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பாதையில்,
அடுத்த நொடியைக் குறித்த அறிவு கூட இல்லாத ஆச்சரியங்களைச்
சுமந்து செல்லும் ஒரு அற்புதப் பயணம்...!
அடுத்த நொடியைப் பற்றி ஞானம் பெற்றவர்களின் பயணம்
வேறு ஏதோ ஆச்சரியங்களுடன் பயணப்படுகிறது...!
காரண, காரியங்களுக்கான தேடலில் தொடர்புகளின்
நூலிழைகளைப் பிடித்துக் கொண்டு,
இரு கைகளையும் விரித்து, வரும் ஆச்சரியங்களை எல்லாம்
புரிதலுடன் கூடிய புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டுப்
பயணப்படுவோம்
நமது ஆதி அந்தம் புலப்படாத நீண்ட பயணத்தில்...! அந்த ஒருவனின் துணையுடன் ..!
ஒரு வேளை நானும், அச்சிறிய சிறகும் மீண்டும் சந்தித்துக்கொள்ளலாம்,
எங்கள் பயணப் பாதையில், ஒரு பரிச்சையப் பாவனையுடன்...!
லவ்ஹுல் மஹ்பூளில்
இப்படித்தான் எழுதப்பட்டுள்ளதோ...
Hilal Musthafa
No comments:
Post a Comment