Friday, May 11, 2018

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?
ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?
கடலையும் வானத்தையும் விட
வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...

" தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம்" என இறைவன் சொன்னதாக
நபிகள் ( ஸல் ) சொன்னார்கள் .
உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"


அப்போதும் நபிகள் " ஆம்.. இறைக்கருணைதான் உயர்ந்தது .."
என பதிலளித்தார்கள்.

தாயைப் படைத்து அவள் இதயத்தில் கருணையை வைத்தவனே இறைவனல்லவா ?
உலகத்தில் எத்தனைக் கோடி தாய்மார்கள்?
அவர்கள் உள்ளங்களில் எவ்வளவு கோடி கருணை ?
அவை அத்தனையையும் தாய்மார்களின் உள்ளங்களில் வைத்தவன் இறைவன்தானே.. !

அப்படியென்றால் ...
அவன் எத்தனை கோடி கருணைகளின் சொந்தக்காரன்.!
எனவேதான் இணையற்ற இறைவனை
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அழைக்கிறோம்.

இத்தனை கருணை உள்ள இறைவனின் திருத்தூதர் திருவாய் மலர்ந்தார்கள்...
" தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது. "
இதைவிட உயர்வான வாழ்த்து எந்தத் தாய்க்கும் யாராலும் கொடுக்க முடியாது.

ஒருநாள் பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. நபிகளார் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
எப்போதும் முதல் வரிசையில் முதல் ஆளாக நிற்கும் அபூபக்கர் ( ரலி ) அவர்களைக் காணவில்லை. நிலையிலிருந்து ருக்கூஹ் போகும் பொது அபூபக்கர் ஓடோடி வந்து தொழுகையில் கலந்து கொண்டார்.
தொழுகை கிடைத்த சந்தோஷத்தில்
அவர் வாயிலிருந்து இயல்பாகவே இறைவனுக்கு நன்றி தெரிவித்து
" அல்ஹம்துலில்லாஹ் " என்று யாருக்கும் கேட்காத அளவுக்கு மெதுவாகக் கூறுகிறார்.
பெருமானார் ( ஸல் ) அவர்கள் ருக்கூஹ் விலிருந்து நிலைக்கு வரும்போது எப்போதுமில்லாமல் புதிதாக
" சமியல்லாஹு லிமன் ஹமிதா "
என்று கூறுகிறார்கள்.
சஹாபாக்களுக்கு ஆச்சரியம் .
தொழுகை முடிந்து விளக்கம் கேட்கிறார்கள்.
அதற்கு நபிகள் சொன்னார்கள்...
" புகழ்ந்தவரின் புகழ்ச்சியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் என்று சொல்ல எனக்கு இறைவனின் ஆணை வந்தது. சொன்னேன்" என்றார்கள்.
" உங்களில் யாராவது அந்த நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்தீர்களா ?"
என நபிகள் கேட்க... அபூபக்கர்,
" நான் புகழ்ந்தேன் நாயகமே " எனச் சொன்னார்.
அதன் விளக்கமும் சொன்னார்...
அது... " யா ரசூலல்லாஹ்.. வயதான என் தாயாருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தேன். தொழுகை நேரம் வந்து விட்டது. எங்கே உங்கள் பின்னால் நின்று தொழும் வாய்ப்பை இழந்து விடுவேனோ என்று பயந்தேன். பணிவிடை முடிந்து ஓடோடி வந்தேன்.. இறை அருளால் எனக்குத் தொழுகை கிடைத்து விட்டது. அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தேன் " என்றார். கூடியிருந்த சஹாபாக்கள் எல்லோரும் கண் கலங்கி விட்டார்கள்.

அப்போது நபிகள் சொன்னார்கள்...
" தன் தாய்க்கு பணிவிடை செய்த ஒருவரின் புகழ்ச்சியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அதை தொழுகையிலே அறிவித்திருக்கிறான் என்றால்
தாயின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள் "

@ ஒவ்வொருமுறை
" சமியல்லாஹு லிமன் ஹமிதா "
என்று சொல்லும்போதும் அது தாய்மைக்கு அல்லாஹ் கொடுத்த வாழ்த்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு உலகம் முழுதும் எத்தனைக் கோடி "சமியல்லாஹு லிமன் ஹமிதா " .

தாயை பராமரித்தவரின் புகழ்ச்சியை ஏற்று இறைவனே அங்கீகரிக்க காரணமாக இருக்கும்
அந்த தாயைத்தான்
ஏறெடுத்தும் பார்க்காமல்
எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று சிலர் எடுத்தெறிந்து விடுகின்றார்கள்.
தாயை பராமரிப்பவன்
புண்ணியம் பெறுகிறான்.
அதைத் தவிர்ப்பவன்
பாவத்தின் புண்ணைப் பெறுகிறான்.

பாவம் ....
சோர்க்கத்தின் வழி தெரியாமல் பலர்
பள்ளிவாசல் முசல்லாக்களிலும்
தர்கா வாசல்களிலும்
சொர்க்கத்தின் சாவியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இறைவனால் ஏராளமான அந்தஸ்து கொடுக்கப்பட்ட தாய்க்கு வருசத்தில் ஒரு நாள் மட்டும் பாத்தியா ஓத நினைப்பவர்கள்
யோசிக்க வேண்டும்.

Abu Haashima

No comments: