Thursday, May 10, 2018

தாய் என்னும் நினைவு

தாயின் தினம்
புனிதத் தினம்....!

தக்கலை ஹலீமா இன்று முகநூலில், தாயர் தினத்திற்காகப் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவின் பாதிப்பால் நானும் தாயர் தினத்தை நினைவுகூர்கிறேன்.

தாய் என்னும் நினைவு நம் உணர்வில் எழும்போதே அத்தாய் நம்மைத் தாங்கிய வயிறுதான் முதல் நினைவாகிறது.

தாயின் கர்ப்பை நிகழ்த்தும்
ரசாயன மாற்றங்களும் ரசவாதப்
பரிமாணங்களும் பிரமிக்க வைக்கின்றன.



இதைத்
தக்கலை ஹலீமா அவர் பதிவில் முன்வைத்தார்.

ஓர் மகத்தான சூஃபி ஞானி பாடலை எடுத்துவைத்தார்.

அந்தத் தாய் தானே எதையும் சாதித்து விடவில்லை.

அந்தத் தாயில்லாமல் இறைவனும் அதனை நிகழ்த்தி விடவில்லை.

உலகத் தொடர்ச்சிக்கு மனிதப் பிறப்புகளே மூலக் கூறுகள்.

இப் பிறப்புகளுக்குத் தாயே தளகர்த்தா.

தாய்மையிலிருந்தே பிரபஞ்ச நகர்வுகள் நிகழ்கின்றன.

இதனை நிகழ்த்த ஒரு பேராற்றல் ஏற்கனவே காத்திருக்கிறது.

இப்படிச் சொன்னால் பிழையாகிவிடாது.

அந்தப் பேராற்றல் இந்தப் பணிக்குக் காத்திருக்கிறது.

இந்த அடிப்படையில் அந்த சூஃபி ஞானி பாடல்
எனக்குப் பொருள் விரிக்கிறது.

படைத்தவனை
உலக முடிவின் எல்லையளவும் காத்திருக்க வைக்கும் வல்லமை
தாயின் கர்ப்பப் பையில் அல்லவா கனிந்திருக்கிறது.

ஆணிலிருந்து வெளியேறிய
ஆனந்த மயமான
அற்ப நீரைக்,
கர்ப்பப்பை தான்தாங்கிக் கொண்டது.

அந்த
அற்ப நீர்,
கர்பப் பையின் கொதிநிலையால் ஆவியாகி அழியாமல்
காக்கிறது.

அந்த அற்ப நீரைத்
திடப் பொருளாக்கி உருவம் சமைக்கிறது. அதை உயிர்ப்போடு வளர்க்கிறது.
குறித்த நாளில் உலக வெளிக்கு
வாரி வழங்குகிறது.

இத்தனைப் பணிகளைக் கர்ப்பப் பையா நிகழ்த்துகிறது?

படைப்பாளன்
அங்கே தன்னையுமல்லவா வெளிப்படுத்துகிறான்.

ஆண்
ஒற்றைநாள்
ஒரு துளிப் பொழுதில் ஆனந்தத்தோடு கடந்துவிடுகிறான்.

மீதைய நாள்களில் தாயே தன்னை இறைவனில் சமர்ப்பித்து எல்லாமாகிறாள்.

அந்தத் தாய்மார்கள் தினம் இன்றாக நினைவு கூரப்படுகிறது.
இத் தினமும் புனிதத் தினமாகிவிடுகிறது.

ஓர் தாயைப் பலநேரங்களில்
புறக்கணித்த
ஒரு தனையனின்
உருகல் பதிவு இது.

சூஃபி பாடல்.

"அற்பஜலம் அக்கினியால் அழியாமற்
காவல்செய்து
கர்ப்பமதில் வைத்துருவாய் கிளர்ந்ததற்பின்
தாரணியில் மெய்யுடனே
தான்வளர்த்துக் காத்தவொரு
காரணனே நீஇதற்குக்
காப்பு.
தக்கலை
பீர் முஹமது அப்பா.

Hilal Musthafa

No comments: