சுலைமான் எறும்பு...!
மாலை,
அலுவலகம் விட்டு
கிளம்பும் முன்
அலுவலகச் சாளரம்
வழியே
காணும் ஒரு
தினசரிக் காட்சி..!
நான்கு, ஐந்து கிளிகள் கொண்ட
ஒரு கிளி கூட்டம்..!
கிழக்கிலிருந்து மேற்காக,
விருட்டென்று பெரிய சத்தத்துடன்
பறந்து செல்லும்..!
மிகச் சில நொடி இடைவெளியில்மீண்டும்,
மேற்கிலிருந்து கிழக்காக
அதே 'விருட்',
அதே சத்தத்துடன்
பறந்து திரும்பும்.
அதை ஒரு காக்கா
மர உச்சியில் அமர்ந்து
கண்காணித்துக் கொண்டு இருக்கும்..!
அவ்வளவு சிறிய,
நுண் இடைவெளியில்
அந்நாளின்,
எந்தக் கடைசிப் பணியை
ஆற்றிவிட்டு வந்திருக்கும்
அவை..!
கிளம்பும் நேரத்தில்,
எனது கண்கள் தன்னிச்சையாக,
எனது மர அலமாரி சரியாக பூட்டப்பட்டுள்ளதா?..
என்பதை சரிபார்ப்பது போல்
அவையும்,
தங்களது ரகசியம்
சரியாகப் பாதுகாக்கப்படுகிறதா,
என்று சரிபார்த்து வந்திருக்குமோ..?
புதிய கட்டிடம் எழுப்புவதற்கு,
மரங்கள் வெட்டப்பட்டு,
அகற்றப்பட்டதால்
இப்பொழுதெல்லாம்,
அக்கிளிக்கூட்டத்தையும்;
அவ்வொற்றைக்
காக்கைக் கண்காணிப்பாளரையும்;
காணக்கிடைக்கவில்லை..!
எனக்கு,
மீண்டும்
அவ்வற்புதக் கூட்டத்தை
காணும் வாய்ப்பு கிட்டுமா..?
கிட்டினாலும்...
என்னால்,
அவைகளை அடையாளம்
காண இயலுமா..?
ஏனெனில்,
சுலைமான் நபியின்
எறும்பு போல் - நம்மைப்
பற்றிய அறிவு,
அவற்றிற்கு
அளிக்கப்பட்டு இருக்கலாம்...!
எனக்கு,
அவையெல்லாம்,
ஒன்று போல் அல்லவா
தோற்றமளிக்கின்றன...!
Hilal Musthafa
No comments:
Post a Comment