Thursday, May 3, 2018
இளைய தலைமுறை
by, DR HABIBULLAH
நல்லசிவன் தினேஷ்
17 வயது பிளஸ் டூ மாணவன்.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்
எனப்படும் நெல்லையின் மைந்தன்.
இளம் வயதில் தாயை இழந்தவன்
குடிகார தந்தையின் வன்முறை
அடி உதைகளுக்கு பயந்து,
வீட்டை துறந்து, மாமா மணியின்
நிழலில் சில காலம் வாழ்ந்து,
பின்னர் பிளஸ் டூ பாஸாகி,
நீட் தேர்வை எதிர் கொள்ள
தயாராகி வந்தவன்,
தேர்வு செலவுகளுக்காக..
சென்னையில், ஒரு சிறு
டீக்கடையில் பகுதி நேர
வேலை பார்த்து, சிறுக சிறுக
சேகரித்த பணத்தை எடுத்து
கொண்டு, பெற்ற தந்தையை
காண பாசத்துடன் வந்த மகன்,
நீட் தேர்வு எழுதி மருத்துவனாக
வேண்டும் என்ற உன்னத நோக்கம்,
அதை பெற்றெடுத்த
தந்தையுடன் பகிரும் ஆர்வம்!
ஆனால் கண்ட காட்சி...
தான் சிறுக சேகரித்த சிறு
பணத்தையும் தந்தை திருடி,
டாஸ்மாக்கில் மது வாங்கி
குடித்து விட்டு, பெற்ற மகனையும்
மகன் என்று பாராது அடித்து
உதைத்து, சித்திரவதை செய்தால்
நிலை என்னவாகும்!
குடிகார தந்தை முன்
நிலை குலைந்த இளம்
மாணவனை தேற்ற எவரும்
இல்லாத நிலையில்,
அந்த பிஞ்சு மனம் எடுத்த முடிவு
சற்று அசாதாரணமான ஒன்று
என்றாலும் அந்த முடிவு இன்றைய
இளைய தலைமுறையை
ஆட்டம் காண வைத்து விட்டது
எனலாம்.
காலை நேரத்தில், மாநில
நெடுஞ்சாலையில், ரயில்வே
பாலம் அருகில் அவன் எடுத்த
அந்த விபரீத முடிவு, அவன்
உயிரை பறித்து கொண்டது.
அவன் உயிர் போய் விட்டது..
ஆனால் அவன் எழுதி வைத்த
கடிதம், இந்த அவல உலகுக்கு
சில உண்மைகளை ஓங்கி
அறைந்து விட்டு சென்றிருக்கிறது.
“அப்பா..
நான் செத்து போனதுக்கு
அப்புறமாவது நீ குடிக்காம இரு
எனக்கு கொள்ளி வைக்காதே
மொட்டை போடாதே
ஓப்பனா சொன்னா நீ எனக்கு
காரியம் பண்ணாதே!”
தொடர்கிறது மாணவனின்
கடைசி கடிதம்....
இது ஒரு மாணவனின் கதை
அல்ல, நாம் வாழும் சமூகத்தின்
அவலம். எளிதில் கடந்து போகும்
விசயமாக தோன்றவில்லை.
கணவன் மனைவி,தாய் தந்தை
குழந்தைகள், குடும்பம், சமூகம்
என்பதெல்லாம் போலி தானா!
கண்ணதாசன் சொன்னது போல்
குழந்தை பிறப்பும் வளர்ப்பும் கூட
தந்தை தவறு செய்ய தாய்
அளித்த அநுமதியின் பிழை
தானோ!
குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்றால் தெய்வம்
கூட பிழை தானோ!
வெற்றி பெற நித்தமும் ஆயிரம்
வழி சொல்லும் நம் ஊடகங்கள்
இது போன்ற விஷயங்களில்
மட்டும் முழுமையான மவுன
விரதம் அனுஷ்டிக்கின்றன.
மதுவின் அவலம் பற்றிய ஒரு
general awareness கூட
இந்த நேரத்தில் வெளிப்படாத
நிலை ஆச்சரியமாக இருக்கிறது.
தாய் தந்தையே மகனுக்கு
பகையானால்..
குடும்பமே குழந்தைகளுக்கு
எதிரானால் குழந்தைகளை
காப்பாற்றுவது எப்படி?
மாதா பிதா குரு தெய்வம்
என்று நீதி போதித்தீர்கள்!
சான்றோனாக்குதல் தந்தையின்
கடன் என்று விதி சொன்னீர்கள்!
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
என்று தத்துவம் பேசினீர்கள்!
தன் மகனை அவையத்து முந்தி
இருப்பச் செயல் தான்,தந்தைக்கு
பெருமை தரும் செயல்
என்றெல்லாம் பொய் பெருமை
பேசி நம்ப வைத்தீர்கள்!
இனிமேல்.... மனிதர்களே!
காதல் செய்யுங்கள்
திருமணம் புரியுங்கள்
ஆனால் பெறப் போகும்
பிள்ளைகளை உங்களால்
பாதுகாக்க முடியுமா என்பதை
பலமுறை யோசித்து முடிவு
செய்யுங்கள்.
பெற்றுக் கொல்வதை
விட பெறாமலே
குழந்தைகளை
வாழ விடுங்கள்!
பிறப்பில்லா உலகில்
அவர்கள் நிரந்தரமாய்
வாழ அநுமதியுங்கள்.
வருங்காலங்களில் நவீன ரக
ரோபோ குழந்தைகளை
நீங்கள் விரும்பும் மாடல்களில்
தயார் செய்து தத்து எடுத்து
கொள்ளுங்கள்.
From the desk of a
Senior Paediatrician &
Adolescent Psychologist
DR HABIBULLAH
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment