Wednesday, June 4, 2014

புவியுள்ளவரை பொருளியல் - 1

  ஒருத்தரைப் பத்தி நாம முழுசாத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி குறைந்தபட்சமா அவரோட பேரு என்ன? ஊரு என்ன? என்ன தொழில் செய்யிறாரு? இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்குவோமில்லையா? அதுமாதிரி பொருளாதார அறிவியலின் பல்வேறு பிரிவுகளை நாம பாக்குறதுக்கு முன்னாடி இதுக்கு முன்னோடியா இருந்த சில அறிஞர்கள், அவர்கள் சொன்ன கருத்துகள் இதையெல்லாம் பாத்துருவோம், பொண்ணை நேர்ல பாக்குறதுக்கு முன்னாடி ஃபோட்டோல பார்த்துட்டு போற மாதிரி.

  ஆரம்ப காலத்துல பல பேரு பொருளாதாரத்துக்குப் பல்வேறு இலக்கணங்கள் தந்திருந்தாலும் ஒரு நாலு பெரிய மனுஷனுங்க சொன்ன இலக்கணம்தான் இன்னிக்கி வரைக்கும் ரொம்ப முக்கியமா கருதப்படுது. அப்பேர்ப்பட்ட மனுஷனுங்க யாராரு?

  ஒருத்தரு ”செல்வ இலக்கணம்” தந்த திரு.ஆடம்ஸ்மித். இவர்தான் பொருளாதார அறிவியலின் ஓப்பனிங் பேட்ஸ்மென். இன்னோருத்தரு “பொருள் சார்ந்த இலக்கணம்” தந்த திரு.மார்ஷல். மற்றொருவர் “பற்றாக்குறை இலக்கணம்” தந்த திரு.லயனன் ராபின்சன். பிறிதொருவர் ”வளர்ச்சி இலக்கணம்” தந்த திரு.சாமுவேல்சன்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்துவகுத்தலும் வல்லது அரசு”

  அப்படின்னு ஒன்னே முக்காலடில மொத்த பொருளாதாரத்தையும் ஒடுக்குனாம்பாரு ஒருத்தன் அவந்தான் என்னளவில் பெரிய மற்றும் உலகின் முதல் பொருளியல் அறிஞன். சரி அதை விடுவோம். அந்த நாலு பெரிய மனுஷனுங்க என்னென்ன சொன்னாங்க? அதன் நிறை,குறைகள் என்னென்ன? இதையெல்லாம் முதலில் பார்த்துருவோம்.

ஆடம்ஸ்மித்தின் செல்வ இலக்கணம் (wealth definition) :


  இந்த ஆடம்ஸ்மித் இருக்காரே இவரைத்தான் பொருளியல் அறிஞர்கள் “பொருளாதாரத்தின் தந்தை” அப்படிங்குறாங்க. ”ஓ.. அவ்வளவு தெளிவான இலக்கணம் குடுத்துருக்குறாரா” என ஆச்சிரியப்படுறீங்களா!! அதெல்லாம் ஒண்ணுமில்லை.. முதன் முதலில் சொன்னதால் தந்தையாகிட்டாரு. .தட்ஸ் ஆல். சரி, அப்படி என்ன சொன்னாரு?“மனிதனின் எந்த ஒரு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் செல்வத்தைத் திரட்டுதலே. அந்தச் செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை அறிவது மிகவும் அவசியமானது, ஆர்வமானது. நாடுகளின் செல்வத்தின் தன்மை, செல்வத்தை உருவாக்கும், பெருக்கும் காரணிகள் ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தரும் அறிவியலே பொருளியல்” அப்படின்னாரு. அதை 1776 ல “நாடுகளின் செல்வ இயல்பும்,காரனங்களும் பற்றிய ஒரு ஆய்வு” அப்படின்னு அவரு எழுதுன ஒரு பொஸ்தகத்துலதான் சொல்லியிருக்காரு. இவரு செல்வம் என்ற வார்த்தையைப் பணத்தைக் குறிக்க மட்டுமில்லாமல் பண்டங்களைக் (பொருட்களை, சொத்துகளை) குறிக்கவும் பயன்படுத்தினார். ”ஒவ்வோரு தனிமனிதனும் தன்முனைப்பில் பொருளை ஈட்டும்போது மொத்த அளவில் நாட்டின் செல்வமும் உயர்கிறது. தனி மனிதன் பொருள் ஈட்டும் வாய்ப்பை உருவாக்குவதும் நிர்வகிப்பதும் நாட்டின் கடமை. பொருளியல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அடிநாதமாக இருப்பது செல்வமே. சுருங்கக்கூறின் பொருளியல் செல்வத்தைப் பற்றிய அறிவியல்” என்றார்.

  ஆடம்ஸ்மித் காலத்தில்தான் இங்கிலாந்து நாட்டில் தொழிற்புரட்சி ஏற்படத் துவங்கியது. அண்டாக்காகசம் அபூக்காகசம் மாதிரி கபால்னு பணம் குவிய ஆரமிச்சிருச்சு. அதுனால செல்வத்தைப் பற்றி ஆராய வேண்டிய அவசியம் உண்டாயிருச்சு. இதுனாலதான் ஆடம்ஸ்மித் செல்வத்தை அடிப்படையா வச்சு பொருளியலை விளக்கினார்.

  நம்மூருல ஒரு படம் ஹிட்டான மத்தவங்களும் அதே கதையை மாத்தி மாத்தி டிகால்ட்டி விடுவாங்கல்ல, அதேமாதிரி ஆடம்ஸ்மித்தின் இலக்கணத்தை அப்படியே பின்பற்றி செல்வத்தை அடிப்படையாக வைத்து அன்றைய பொருளியல் அறிஞர்களான ஜே.எஸ்.மில், ரிக்கார்ட்டோ, வாக்கர், மார்த்தஸ் போன்றோர் அவங்க கருத்துகளைச் சொன்னாங்க. அதாவது புது மொந்தையில் பழைய கள். இன்னும் சொல்லப்போனால் நான் இந்தக் கட்டுரையை இவங்க சொன்னதையெல்லாம் சுட்டு எழுதிகிட்டு இருக்குற மாதிரி.

  ஆடம்ஸ்மித் இலக்கணம் சொன்ன அந்தக் காலம் நல்ல மனுஷனுங்க வாழ்த்துகிட்டு இருந்த காலம். அப்பல்லாம் மக்கள் மதம், கலாச்சாரம், இலக்கியம், நன்னடத்தை, மனசாட்சி இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து வாழ்ந்துகிட்டு இருந்த காலம். அதுனால இவரோட இலக்கணம் செல்வத்தைப்பற்றி இருந்தாலும் செல்வாக்கில்லாம இருந்துச்சு. செல்வம் அப்படின்னா பணம் சேக்குறதுன்னு ஒரு சின்ன வட்டத்துக்குள் மக்கள் இதை தவறாப் பாத்துட்டாங்க. என்னது பணம் சம்பாதிக்கிறதா? அதெல்லாம் ரொம்பத் தப்புன்னு மக்கள் ஆடம்ஸ்மித்தின் இலக்கணத்தைத் தாக்க ஆரமிச்சிட்டாங்க. அன்றைய இலக்கிய மேதைகளான ரஸ்கின், கார்லைஸ் போன்றோர் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் இழிவாக எழுதத் துவங்கினர். ”பண்பாளர்கள் படிக்கத் தகுதியற்ற பாடம்”, ”தன்னலத்தையும், பண மோகத்தையும் தூண்டி பண தெய்வத்தை வழிபடவைக்கும் செயல்” என்றெல்லாம் எழுதினர்.

  உலகின் உயரிய படைப்பான மனிதனுக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை இது தரவில்லை. செல்வம் சேர்ப்பது ஒன்றே குறிக்கோளாய் இவ்விலக்கணம் கூறுகின்றது. ஆனால் மனிதனுக்கு செல்வம் சேர்ப்பதையும் தாண்டி வாழ்வில் பிற நோக்கங்களும் உண்டு. அதேபோல இந்த இலக்கணம் பொருளியலின் பல பிரிவுகளில் உற்பத்தியை மட்டுமே குறிக்கிறது. பொருட்களை வாங்குவது, பொருட்களின் பரிமாற்றம், பொருட்களின் பங்கீடு போன்ற பிற பகுதிகளின் முக்கியத்துவத்தை இந்த இலக்கணம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மேலும் பொருளியலின் பரந்த எல்லையை மிகவும் சுருக்கிவிட்டது. அதேபோல தனி மனிதர்கள் சுய உழைப்பில் அரசு தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இந்த இலக்கணம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் அரசின் தலையீடு அசியமாகிறது என்றெல்லாம் ஆடம்ஸ்மித்தின் கோட்பாடு மீது விமர்சனங்கள் எழுந்தன.

  இந்தக் குறைபாடுகளால் இவரின் இலக்கணம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தனது செல்வாக்கை பெருமளவில் இழந்தது. இந்த இலக்கணம் குறைபாடு உடையதாகக் கருதப்பட்டதால் புது இலக்கணம் ஒன்று உருவானது

தொடரும்....
புவியுள்ளவரை பொருளாதாரம்


                                            (புதுகை அப்துல்லா )M.m. Abdulla

No comments: