Thursday, June 19, 2014
கவிதை எழுதுவது எப்படி ??
முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் படித்து முடித்தவுடன் காரி உமிழக் கூடாது.
கடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.
"பேனா திறந்து
பேப்பர் பிரித்து
விட்டம் வெறித்து
மூளை கசக்கி "................எழுத ஆரம்பிக்கிறேன்...
ஆனா ஒரு கண்டிசன்...
இந்த கவிதைய எழுதி முடிக்கற வரைக்கும் நம்ம புதியவன்,சரவணக்குமார்..அய்யனார் இந்த மாதிரி பெரியவா ஆத்துப்பக்கம் தல வெச்சி படுக்கப் படாது.மீறி படுத்தால் இவர்களின் பாதிப்பு நம்மையும் தொற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி,நம் மூளையும் செகண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.
எல்லாவற்றையும் மனத்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்....
எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......
கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.
கண்ணீர்.......oooo
அழுகை......(ஆஹா...)
பிரிவு.......
வலி.........(ஆஹா...)
வருது ..வருது....விடாத...( அதே பட்சி என்கரேஜ் செய்ய ஆரம்பித்தது )
வானம்...
நீலம்...ம்ம்ம்ம்ம்...
நாற்றம்....
....
...( கொடல பொறட்டுதுடா சாமி...!!!!!!!)
என்னாச்சு....யாருப்பா அது...எங்கோ பெருச்சாளி செத்த வாடை மூக்கினுள் உட்புகுந்து மூளையை கடித்து குதற ஆரம்பிக்க..அலுவலகத்தில் ஒரு கணவான் தன் காலுறையை கழற்றி வைத்ததால் ஏற்பட்ட விஷவாயு தான் அது என்று தெரிவிக்கப் பட்டு அதிருப்தி வெளியிடப்பட்டது.
நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, அவர் இட்ட சாபம் தான் பிற்பகலில் விளைகிறது என மனம் நொந்து கொண்டு....
மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்...
"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது"
அப்படினு அடுத்த லைன் எழுத, பக்கத்தில் அமர்ந்திருந்த பட்சியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.
சரி...முடிஞ்சி போன பத்தி எதுக்கு பேசுவானேன்..கொஞ்சம் கமர்ஷியலா யோசிங்க பாஸ்...எப்படி...நம்ம தர்மு சிவராமு எழுதியிருந்தாரே !!!
"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு"
இப்படி சிவராமு யோசிக்கலாம்..நாம் யோசித்தால் கமர்ஷியல் எந்த கோணத்தில் போகும் என்று உமக்கு தெரியாதா ?? ஆரம்பிக்கும்போதே ரிஸ்க் எடுப்பது உசிதமல்ல என்று அந்த சூனியக்கார பட்சிக்கு விடையளித்தேன்."வேண்டுமென்றால் ஒரு கண்காட்சி கவிதை எழுதலாம்."
கண்காட்சி கவிதையென்பது புதுக்கவிதையில் ஒரு வகை.இங்கு கவிதையின் கருத்தியலோடு அதன் உருவமும் முக்கியத்துவம் பெறுகிறது.கவிதையில் கூறவரும் பொருளும் உருவமும் இறுகிச் செறிந்திருக்க வேண்டும்.பொருளையும் உருவத்தையும்
பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்க வேண்டும்.
எடுத்துக் காட்டாக எஸ்.வைத்தீஸ்வரனின் "ஆசை" என்ற கவிதையைச் சொல்லலாம்.
"முதுகு வளர
நீ
ண்
டு
விட்ட
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன.."
ஆகவே, உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்.வெகு சமீபத்தில் நம் தேவா எழுதிய கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! கண்காட்சி வகை கவிதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
என்று நாம் அதன் சாராம்சங்களை விளக்க,(பட்சியின் புறத்திலிருந்து ஒரு ஆங்கில படத்தின் ட்ரெயிலர் ஓடிக்கொண்டிருந்தது..க்க்க்கொர்,...ர்ர்ர்ர்ர்....தூங்கிட்டானா ??)
ஆஹா..இது நமக்கு ஒத்துவரக்கூடும் என நானும் பட்சியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மீண்டும் நம் கற்பனை வண்டியின் ஆக்ஸிலரேஷனைத் திருக்கினோம்.டைரியை கக்கத்தில் இறுக்கிக் கொண்டு,ரத்த வெறியோடு யோசித்துக் கொண்டே சென்று என்னையறியாமல் லேடிஸ் ரெஸ்ட் ரூமின் கதவைத் திறந்து வைத்தேன்.
SORRY FOR THE BREAK !!!!!!!!!!!!!
நல்ல வேளை.அங்கே ஜீன்ஸ் போட்ட பைங்கிளி ஒன்று மட்டும் கண்ணாடி முன்பு சோப்பு போட்டு முகம் கழுவிக் கொண்டிருந்த படியால்,மயிரிழையில் நாம் உயிர் தப்பினோம்.( எங்க அந்த பட்சி பய புள்ள....எஸ் ஆயிட்டானா...)அதோடு அபசகுனம் கருதி அந்த கண்காட்சி கவிதை முயற்சியும் கைவிடப்பட்டது.
சரி..கடைசியாக யாருக்கும் புரியாமல்,உணர்த்தும் முறையில் வித்தியாசம் காண்பித்து..நிறைய காம்பிளக்ஸ் குறிப்புகளைச்செருகி, ஒரு படிமக் கவிதையெழுதலாம் என இறுதி முடிவு நானே எடுத்தேன்.சரவணகுமார்,அய்யனார் இவர்களெல்லாம் படிமக் கவிதையெழுதுவதில் கை தேர்ந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.எனவே,அவர்களின் பாதிப்பு வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.
ஸ்டார்ட் மீமீசிக்...
"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்
விழியோர பாசறையில்
தேடல் ஆயுதங்களில்
படிந்திருக்கும் கனவின் கறை।
ஏக்கம் ஆழ்ந்து
வெளிரிய இதழ்களில்
கீறல்கள் படர்ந்த
வடுக்களின் உதயம்।"
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
சரி கவிதையெழுதுவது எப்படி ??
அது தெரிஞ்சிருந்தாத்தான் ஒரு கவிதைய போட்டிருப்பம்ல..இவ்ளோ பெரிய விளக்கம் எதுக்குன்ன ??(போங்க..போங்க.போய் புள்ள குட்டிய படிக்க வைங்க..!!!!! )
by அ.மு.செய்யது
நன்றி http://amsyed.blogspot.in/
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஹாஹாஹா! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment