Saturday, June 14, 2014

இதயத்தில் இருந்து எழுதுகிறேன்...

இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது.

அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். அசிங்கமாக பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது.

அதனால்தான், பொறுத்தது போதும் என்று துணிந்து விட்டேன். இந்த முறை இதை இப்படியே விடுவதாக இல்லை. இத்தனை பேர் கண் முன்னால் இப்படி நடந்து கொள்ளும் அசட்டு துணிச்சலுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நானும் துணிந்து விட்டேன்.

எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் அசிங்கமாக நடப்பதாக நான் நினைக்கவில்லை. என்னை போன்ற ஏராளமான பெண்கள் தினம் தினம் இப்படிப்பட்ட அவமானத்தை சந்திக்கிறார்கள். அப்போது உண்டாகும் மன உளைச்சலை விவரிக்க முடியாது. ரியாக்ட் செய்யவே தோன்றாது. மாறாக, ’ம்ம்.. எத்தனை பேர் பார்த்திருக்க போகிறார்கள்..?’ என்ற மடத்தனமான எண்ணம் தோன்றும். நம்மை நாமே சமாதானம் செய்து கொள்வோம். அது சமாதானம் அல்ல. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

ஏனென்றால், நம்மை சுற்றி இருக்கிற எல்லோருமே நமக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்வது இல்லை. அசிங்கப்படுவதை விடுங்கள், அந்த இடத்தில் அவர்களின் கண் முன்னால் நாம் ரத்தமும் சதையுமாக கூனிக்குறுகி நிற்கிறோம் என்பதுகூட மற்றவர்களுக்கு உறைப்பதில்லை. எதுவுமே நடக்காதது போலவும், நடந்த எதற்குமே தாங்கள் சாட்சி இல்லை என்பது போலவும் அவர்கள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்கிறார்கள். அநியாயத்தை தட்டிக் கேட்கும் தைரியம் இங்கே எவருக்கும் இல்லை.

வாங்கிடே ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் சித்தரிக்க என்னவெல்லாம் கதை கட்டுகிறார்கள்! என்னுடைய நடத்தையை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். ஒரு பெண்ணை மட்டம்தட்ட உடனடியாக அவர்களுக்கு கிடைப்பது அந்த ஆயுதம்தானே. ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள். எல்லோரும் சாட்சிகள். அவர்கள் இந்த வழக்கில் உண்மையை சொல்வார்கள் என்று நம்புகிறேன். போலீசும் யாருக்கும் பயப்படாமல் வேகமாகவும் நியாயமாகவும் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

பாலியல் தொல்லை குறித்த சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று அத்தனை பேரும் ஆளுக்கொரு கல்லெடுத்து அவள் மேல் எறிய அதுதானே வாய்ப்பு அளிக்கிறது?

சினிமா துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுகிறேன். இப்படிப்பட்ட கேவலமான செயலை இதுவரை எதிர்கொண்டதே இல்லை. இதற்காக என்னுடன் இதுவரை வேலைசெய்த அத்தனை ஆண்களுக்கும் மனமார நன்றி சொல்ல தோன்றுகிறது. என் படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் நான் தலைநிமிர்ந்து நடக்க அதுதான் உதவியது.

வலியோ அவமானமோ இவ்வளவுதான் தாங்க முடியும் என்று நம் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒரு மீட்டர் இருக்கிறது. அளவு தாண்டும்போது அது உடைந்துவிடும். அதுதான் - அந்த தாங்கும் சக்திதான் - நமது பலம் என்று சிலர் அறியாமல் கூறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் இது போன்ற காயங்கள் ஏற்படும்போது, வாழ்க்கை நமக்கு அளித்த வசதிகள் வாய்ப்புகளை நினைத்துப் பார்த்து ஆறுதல் அடைகிறார்கள். பாசிடிவ் சிந்தனைகளால் வலியை மறக்க முயற்சி செய்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக நானும் அவரை பற்றி எதுவும் சொன்னதில்லை. இன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. சொல்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

மீடியாவுக்கும் என் ஆதரவாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள்: தயவு செய்து, வாங்கிடே ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். உண்மைகள் வெளிச்சத்துக்கு வர உதவி செய்யுங்கள். அந்த சம்பவத்தை தவிர்த்து வேறு விஷயங்களை இழுத்துப் போட்டு அலசி விவாத மேடை நடத்தி இதை ஒரு டீவி சீரியலாக மாற்றி விடாதீர்கள்.

இந்த சோதனை எனக்கு சுலபமாக இருக்காது என்பதை அறிவேன். யாரையும் காயப்படுத்துவது அல்ல என் நோக்கம். தற்காத்துக் கொள்வதும், எனது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதும்தான் என் நோக்கம். யாருடைய அனுதாபத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மானம் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஒரு பெண்ணின் போராட்டம்தான் நான் தொடங்கி இருப்பது. இதில் வேறு விஷயங்களை திணித்து என் கண்ணியத்தை குலைக்கும் முயற்சிக்கு யாரும் துணைபோக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த சமூகத்திடம் அதை எதிர்பார்க்க எனக்கு தகுதி இருப்பதாக நம்புகிறேன். ஏனெனில், நான் ஓவராக ஒன்றும் கேட்கவில்லை.

நன்றி.

ப்ரீத்தி ஜிந்தா

14.06.201

                       நன்றி கதிர்வேல் Kathir Vel அய்யா அவர்களுக்கு

No comments: