Wednesday, June 4, 2014

புவியுள்ளவரை பொருளாதாரம்

  கேப்டன் விஜயகாந்த் ஒரு படத்துல சொல்வாரு “மன்னிப்பு..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”. அதே போல தமிழர்கள் அனைவருக்கும் விருப்பு வெறுப்பின்றி தமிழில் பிடிக்கும் ஒரு பழமொழி இருக்குமென்றால் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றால் பொருளாதாரத்திற்கு வயிறே பிரதானம். உணவிற்காகத் துவங்கிய மனிதனின் பொருளியல் நடவடிக்கை துளியாய், மழையாய், பெரு மழையாய், வெள்ளமாய், ஆறாய், கடலாய் ஆனது போல இன்று ஒரு தனி அறிவியலாக உருவாகிவிட்டது. வாரிசுச் சண்டையில் இருந்து வல்லரசுச் சண்டைவரை, ஆன்மீகத்தில் இருந்து நாத்தீகம்வரை, சுயமரியாதையில் இருந்து சகிக்கும் அவமானம்வரை, உழைப்பில் இருந்து சோம்பேறித்தனம்வரை அத்தனைக்கும் இறைவனுக்கு அடுத்தபடியாய் ஒரே காரணமாய் இருப்பது பொருளாதாரம் மட்டுமே.

   பொருளாதாரக் கோட்பாடுகளைப் படிப்பதும் சரி, புரிந்து கொள்வதும் சரி அதை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கே சற்று போரடிக்கும் விஷயம். இந்நிலையில் சாமானியர்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ஆனால் நமது வாழ்வின் ஒவ்வோரு நிலையிலும் நம்மையும் அறியாமல் நம்மோடு கடந்து வரும் நிழல் பொருளியல் அறிவியல். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் எவராலும் தாங்கள் இருக்கும் நிலையில் இருந்து இன்னும் ஒருபடி நிச்சயமாய் உயர்வடைய முடியும்.

  இதை எழுத எனக்கு என்ன தகுதி இருக்கிறது? முதுகலை வணிக ஆட்சியியலில்(எம்.பி.ஏ.,) நிதியியலை விருப்பப் பிரிவாகப் படித்தவன். நிதியியல் என்பது பொருளியலின் ஒரு பிரிவுதானே தவிர அதுவே முழு பொருளாதாரப் பாடம் அல்ல. ஒரு ஆர்வத்தில் நான் தனிப்பட்ட முறையில் கற்றறிந்த பொருளியல் கோட்பாடுகளை எளிய தமிழில் என்னால் தர முடியும் என்ற எனது நம்பிக்கை ஒன்றேதான் எனது தகுதி. இந்த நம்பிக்கையில் ஒருவேளை நான் தோற்றும் போகலாம். இருப்பினும் முயற்சிகள் தோற்கலாம்.. முயற்சிக்கத் தோற்கலாமா? என்ற முதுமொழிக்கேற்ப என்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் துவங்குகிறேன். இது ஒரு தனி மனிதனின் முயற்சி அல்ல. ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி. நான் சறுக்கும் இடத்தில் நண்பர்கள் திருத்தவும்,தெளிவுபடுத்தவும் முழு உரிமை உண்டு. வாருங்கள் ஆதாரத்தோடு பொருளை நோக்கிப் பயணிப்போம்
.தொடரும்... 

                                             (புதுகை அப்துல்லா )M.m. Abdulla

No comments: