Monday, June 16, 2014

How old are you?


‘How old are you?’

மலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின் கல்வி காரணமாக அயர்லாந்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். அங்கே வேலை கிடைக்காவிட்டால் பொருளாதாரரீதியாக சமாளிக்க முடியாது. ஒவ்வொரு முறை வேலைக்கு முயற்சிக்கும்போதும் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். ‘முப்பத்தியாறு’ என்று வயதை சொன்னதுமே எல்லா நேர்முகத் தேர்வுகளிலும் திருப்பி அனுப்பப்படுகிறார். இதனால் தன்னம்பிக்கை குலைந்து, மனவுளைச்சலுக்கு உள்ளாகி அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.

Life is stranger than cinema.

விஜயவாடாவில் பிறந்த பாலாமணிக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. அப்போது பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்க ஆசை. இருந்தாலும் இல்லற வாழ்க்கை அனுமதிக்கவில்லை. ஓய்வு நேரத்தில் டைப்ரைட்டிங் பழகத் தொடங்கினார். இதற்கிடையே ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இல்லற ஜோதியில் முற்றிலுமாக ஐக்கியமானார்.

கணவர் ராஜனுக்கு மத்திய அரசின் செய்தித்துறையில் ‘கிளார்க்’ பணி. அன்பானவர். அதிர்ந்துகூட பேசமாட்டார். சொற்ப வருமானம்தான். இருந்தாலும் உலகின் ஒட்டுமொத்த சந்தோஷங்களையும் அள்ளித்தந்தது வாழ்க்கை. குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, கணவருக்கு ‘லஞ்ச்’ தயாரிப்பது என்று எல்லா குடும்பத் தலைவிகளையும் மாதிரியே பாலாமணியும் எப்போதும் பிஸி. வார இறுதிகள் சினிமா, டிராமா என்று மகிழ்ச்சியாக குடும்பத்தோடு கழிந்தது.

பெண் வளர்ந்து எம்.சி.ஏ., முடித்து நல்ல வேலையில் சேர்ந்தார். கல்யாணம் முடிந்தது. பையன் பி.டெக்., படித்துவிட்டு அயல்நாட்டில் எம்.பி.ஏ., படிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். கல்யாணக் கடன், பையனின் கல்விச்செலவு என்று ஏகத்துக்கும் பொருளாதாரம் நெருக்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென ராஜன், ஹார்ட் அட்டாக்கில் காலம் ஆனார்.

முப்பத்தைந்து ஆண்டுகால மகிழ்ச்சியை ஒரே நாளில் தொலைத்தார் பாலாமணி. கணவரின் கண்கள் வழியாக உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென பார்வை பறிபோனது போல ஆனது. கணவர் வாங்கியிருந்த கடன்களின் சுமை வேறு தனியாக கழுத்தை நெறித்தது. ‘பென்ஷன்’ வரவும் தாமதமானது. பொருளாதாரம் மட்டுமல்ல. தன்னுடைய தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளவும் அவருக்கு வாழ்க்கையில் செகண்ட் இன்னிங்ஸ் தேவைப்பட்டது. வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் நாற்பத்தி ஒன்பது வயது பெண்ணுக்கு யார் வேலை தருவார்?

நான்கு சுவர்களுக்கு நடுவில் முடங்கிப் போயிருந்தவர் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தார். பேனா எடுத்து எழுதத் தொடங்கினார்.

“அய்யா. நான் இப்போது விதவை. என்னுடைய கணவர் மத்திய அரசுப்பணியில் இருந்து திடீரென காலமாகி விட்டார். பொருளாதாரத்துக்காக மட்டுமல்ல. நான் மீளவும், மீதியிருக்கும் என்னுடைய வாழ்வை மகிழ்ச்சியாக கடத்தவும் எனக்கு உடனடியாக ஒரு வேலை தேவை. கருணை அடிப்படையில் கொடுத்து உதவுங்கள்”

ஒரு கடிதம் ஆந்திர அரசுக்கு. மற்றொன்று மத்திய அரசில் கணவர் பணிபுரிந்துவந்த அமைச்சகத்துக்கு. மூன்றாவது கடிதம் இந்திய ஜனாதிபதிக்கு. மனுக்கள் கிணற்றில் போட்ட கல்லானது. பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும். கணவரின் நினைவிலேயே சோகத்தோடு நாட்களை கழித்து வந்தவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கையும், காலும் செயலிழந்தது.

அந்த நேரத்தில்தான் அந்த கடிதம் வந்தது. ஜனாதிபதி மாளிகை, பாலாமணிக்கு உதவுமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது தொடர்பான அத்தாட்சிக் கடிதம். பாலாமணியின் உடலும், உள்ளமும் மீண்டும் சுறுசுறுப்பானது. வேலை தொடர்பாக விவரம் கேட்க டெல்லிக்கு அவரே கிளம்பினார். தெலுங்கு தவிர்த்து வேறு மொழிகள் எதுவும் அவருக்கு தெரியாது. மகளின் உதவியோடு டெல்லிக்கு வந்தவர் யார் யாரையோ பார்த்து, பேசி கருணை அடிப்படையில் வேலை வாங்கிவிட்டார். சென்னையில் பணிபுரிய வேண்டும். நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோவில் வேலை.

வேலைக்கு சேருவதற்கு முன்பாக இன்னொரு பிரச்சினை. அவரது சாதி சான்றிதழ். மாநில அரசு கொடுத்திருந்த சான்றிதழ், மத்திய அரசின் அளவுகோல்களில் இல்லை. மீண்டும் அலைச்சல். இருந்தாலும் வேலை கிடைத்துவிட்டது என்கிற உணர்வில் சுறுசுறுப்பாக அலைந்து திரிந்து எல்லாவற்றையும் சரிசெய்தார்.

அண்டை மாநிலம். அந்நியச் சூழல். புது மொழி. பழக்கமற்ற பணி. பாலாமணி சோர்ந்துவிடவில்லை. அதுவரை பிள்ளைகளின் கம்ப்யூட்டரில் ‘கேம்’ ஆடிய அனுபவம் மட்டுமே அவருக்கு உண்டு. மிக விரைவாகவே வேலையை கற்றுக் கொண்டார். கூட பணிபுரிபவர்கள் எல்லாரும் வயதில் குறைந்தவர்கள். அதனால் என்ன, வேலையில் அவர்கள்தானே சீனியர்கள்? கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு சந்தேகமாக கேட்டு தெளிந்துக் கொண்டார்.

வேலைக்கு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. கணவர் வாங்கிய கடன்களை பெரும்பாலும் அடைத்துவிட்டார். இப்போது தமிழையும், ஆங்கிலத்தையும் நன்கு புரிந்துக் கொள்கிறார். கொச்சைத்தமிழில் பேசுகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறார். பேரம் பேசி காய்கறி வாங்குகிறார். கணவரை இழந்த இரண்டு நாத்தனார்களும் அவ்வப்போது வருகிறார்கள். விடுப்பு நாட்களில் அவர்களோடு லூட்டி. விடுமுறையோடு கூடிய பயணப்படி (LTC) அப்ளை செய்து, அவர்களோடு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா போய்விட்டு சமீபத்தில்தான் திரும்பினார். இது ‘சிங்கிள் விமன் ஏரியா’. கணவரை இழந்துவிட்டால் குழந்தைகளை சார்ந்துதான் ஒரு பெண் வாழவேண்டும் என்கிற சமூகவிதியை அனாயசமாக உடைத்தெறிந்து சாதித்திருக்கிறார் பாலாமணி.

“வாழ்க்கையை வண்ணமயமாக வாழவேண்டும் என்று எனக்கு ஆசை. என் கணவர் இருந்தபோது அப்படிதான் என்னை வாழவைத்தார். பளிச்சென்று அலங்கரித்துக் கொள்ள வேண்டும். ஊர் சுற்ற வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கணவரின் மரணத்துக்கு பிறகு திடீரென தடைபட்ட இந்த சுழற்சியை, இப்போது மீண்டும் பணி கிடைத்தபிறகு நானே தொடர்கிறேன்” என்கிறார்.

‘ஆண்ட்டி’ என்று சக ஊழியர்கள் யாரும் இவருக்கு சலுகைகள் எதுவும் தருவதில்லை. பணியில் தப்பு செய்தால், எல்லாரும் வாங்குவது மாதிரி இவரும் திட்டு வாங்குகிறார். இதுமாதிரி மற்றவர்கள் தன்னை இயல்பாக நடத்துவதைதான் பாலாமணியும் விரும்புகிறார்.

“செய்தித்துறையின் செல்லம் அவர். ஏதாவது அவரிடம் வேலை வாங்க வேண்டுமென்றால் ‘ஐஸ்க்ரீம்’ வாங்கிக் கொடுத்து தாஜா செய்வோம். ஐம்பது வயதில் பணிக்கு சேர்ந்தார் என்பதால், அந்த வயதுக்கேயுரிய சில பலகீனங்களும் அவருக்கு உண்டு. ஆனால், பெண்கள் மேம்பாட்டுக்காக பிரச்சாரம் செய்யும் நாங்களே வயதை காரணம் காட்டி ஒரு பெண்ணை நிராகரித்திருக்க முடியாது. மற்றவர்களை காட்டிலும் அரசுக்கு கூடுதலாக சமூகப் பொறுப்பு இருக்கிறதில்லையா?” என்கிறார் அவரது மேலதிகாரியான கீதா இளங்கோவன்.

ஓய்வெடுக்க வேண்டிய வயதில் ஒரு குடும்பத்தலைவி வேலைக்கு சேர்ந்து பணியாற்றுவது குறித்து விமர்சனமும் இருக்கிறது. இந்த வயதில் இவருக்கு மத்திய அரசு பணி கொடுத்திருப்பதால், வேலையில்லாத ஏதோ ஒரு இளைஞன் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறான் என்றும் சிலர் விசனப்படுகிறார்கள்.

“அப்படியெல்லாம் தர்க்கம் பேசி எங்களை முடக்கிவிட முடியாது தம்பி. ஐம்பது வயதில் ஓர் ஆணுக்கு என்னவெல்லாம் இங்கு சாத்தியமோ, அதெல்லாம் பெண்ணுக்கும் சாத்தியம்தான். நான் வேலைக்கு வருவது என்பது வெறும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. பல நூறு ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் எங்கள் உரிமைகளை கேட்டு வெல்வது. இப்போது நான் பெற்றிருக்கும் சுதந்திரம் சாதாரணமானதல்ல. இது தனிப்பட்ட வெற்றியுமல்ல. என்னை பின்பற்றி ஏராளமானோர் வருவார்கள். காத்திருங்கள்” என்கிறார் பாலாமணி.

‘How old are you?’ திரைப்படத்தின் இறுதியில் ஜனாதிபதி தன்னுடைய மாளிகைக்கு அழைத்து தனிப்பட்ட முறையில் விருந்தளித்து மஞ்சுவாரியரை கவுரவிக்கும் அளவுக்கு சாதனை செய்திருப்பார். அன்று அவருக்கு பிறந்தநாளும் கூட. போனில் அழைத்து வாழ்த்து சொல்லும் தோழி கேட்பாள். “How old are you?”. மஞ்சுவாரியர் சொல்லும் பதில். “It doesn’t matter”.

பாலாமணியிடம் வயதை கேட்டாலும் அதையேதான் சொல்லுவார்.

(நன்றி : புதிய தலைமுறை)

எழுதியவர் யுவகிருஷ்ணா
http://www.luckylookonline.com/

No comments: