Friday, June 13, 2014

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்


அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

இணையத்தின் உபயோகம் சமூகத்தின் பல்வேறு தாக்கங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கும் அதேநேரம் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட புதிய சேவைகள் இணையத்தில் அறிமுகமாகின்றன. இவ்வகையில் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக்கருவே சமூக வலைப்பின்னல் (Social Networking ) சேவைகளாகும். அன்று முதல் சமூக வலைப்பின்னல் சேவைகளை வழங்கும் பல்வேறு இணையத் தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவ்வண்ணம் இன்று நடைமுறையிலுள்ள சமூக வலைப்பின்னல் தளங்களில் பிரபலமானவை Facebook, Twitter, LinkedIn, Google+, Hi5 போன்றனவாகும்.

இவையனைத்திலும் மிகவும் பிரபலமானதும் பெருந்தொகையினரால் பயன்படுத்தப்படுவதுமான சமூக வலைப்பின்னல் தளம் Facebookஎனப்படும் முகப்புத்தகம்ஆகும். 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட Facebook இணையத்தளம் இன்று சுமார் 1 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டதாக விளங்குகின்றது. சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை Facebook என்ற சொல்லைக் கேட்டிராத எவரும் இருக்கமாட்டார்கள் என்று கூறுமளவுக்கு அது பிரபலம் வாய்ந்ததாகவும் புதிய தலைமுறையினரின் வாழ்வுடன் ஒன்றிணைந்ததாகவும் காணப்படுகின்றது.

ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னால் உற்று நோக்கின் அன்றைய இளந்தலைமுறையினர் தமது ஓய்வு நேரங்களை வாசிப்பிலும் விளையாட்டிலும் ஏனைய பல்வேறு பொழுது போக்கு நடவடிக்கைகளிலும் கழித்தனர். ஆனால் இன்று அந்நிலை முற்றுமுழுதாக மாற்றமடைந்து இன்றைய இளந்தலை முறையினர் தமது ஓய்வு நேரங்களை பெரும்பாலும் இது போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களிலேயே கழிக்கின்றனர். ஆக இன்று மனித வாழ்வின் ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக இச்சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன என்பதே உண்மை.

மேலும் சராசரி தனி நபர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், அறிஞர்கள் ஏனைய சமூக பிரபலங்கள் மற்றும் பிரபல தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளுக்காக Facebook போன்ற சமூக வலைத்தளங்களை நாடியுள்ளன என்பதே உண்மை.

குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள் தமது பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான நவீன ஊடகமாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

சமூக வலைப்பின்னல் சேவைகளின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இன்று சமூக வலைப்பின்னல்கள் (Social Networking ) என்ற நிலை மாறி அவை சமூக ஊடகங்கள் (Social Media) என்றே அழைக்கப்படுகின்றன. அதேநேரம் இச்சமூக ஊடகங்களை அடிப்டையாகக் கொண்ட புதியதொரு சந்தைப்படுத்தல் எண்ணக்கருவான “ViralMarketing” என்ற எண்ணக்கரு வர்த்தக நிறுவனங்களின் அதிகரித்த கவனயீர்ப்பை பெற்று வருகின்றன. மேலும் வர்த்தக நிறுவனங்களின் மூலோபாய வகுப்பில் (Strategy Formulation) சமூக ஊடக மூலோபாயம் (Social Media Strategy) முக்கிய பங்கைப் பெற வேண்டுமென்பதை பெரும்பாலான தேசிய மற்றும் பல்தேசிய வர்த்தக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. சமூக ஊடகங்களை வணிக நடவடிக்கைகளுக்காக எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்குவதற்கென்றே தனியான ஊடக ஆலோசனை (Social Media Consultancy) நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நகர்வுகள் சமூக ஊடகங்கள் இன்றைய நவீன உலகில் எவ்வளவு செல்வாக்கு மிக்கனவாக உள்ளன என்பதற்கு சிறந்த சாட்சியாகும்.

இந்நிலையில் தொழில் நுட்ப மாற்றங்களுக்கும் நாகரிக மற்றும் கலாசார சவால்களுக்கும் மத்தியில் வாழந்து கொண்டிருக்கும் முஸ்லிமாகிய நாம் அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் செல்வாக்கை எவ்வாறு அணுக வேண்டும்? சமூக ஊடகங்கள் பற்றிய எமது நிலைப்பாடு என்ன? அவற்றை நாம் முற்றாக தவிர்ந்து நிற்பதா அல்லது எமது இளந்தலைமுறையினர் மத்தியில் அதன் பயன்பாட்டை நெறிப்படுத்துவதா? போன்றன மிக முக்கிய கேள்விகளாக நம்முன் காணப்படுகின்றன.

எமது முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலையை சற்று ஆழ்ந்து நோக்கின், எமது சமூகத்தில் இச்சமூக ஊடகங்கள் தொடர்பாக இரு தீவிர நிலைகள் காணப்படுகின்றன. மிம்பரில் நின்றுகொண்டு Facebook ஹராம் Facebook ஹராம் என பத்வா கொடுக்கும் மெளலவிமார்கள் ஒரு புறம், அதேநேரம் மார்க்க வரையறைகள் அனைத்தையும் மீறி தொழுகை இபாதத்கள் எதுவுமின்றி Facebook போன்ற சமூக ஊடகங்களின் காலத்தையும் நேரத்தையும் தவறான வழிகளில் வீணடித்து சீரழிந்து கொண்டிருக்கும் இளந்தலைமுறையினர் ஒரு புறம். இவ்விரு தீவிர நிலைகளுக்கும் மத்தியில் நின்று யதார்த்தமாகவும் நடைமுறை ரீதியாகவும் சிந்தித்து ஓர் நடுநிலையான நிலைப்பாட்டிற்கு வருவதே உகந்ததாகும்.

Facebook போன்ற சமூக ஊடகங்களினால் ஏற்படும் தீய விளைவுகள் மற்றும் சமூக கலாசார பாதிப்புக்கள் மறுக்க முடியாதவை. இவை பற்றி பல்வேறு தளங்களிலும் அலசி ஆராயப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. அவற்றை மீளவும் இங்கு ஒப்புவிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக அதற்கான நடைமுறை சாத்தியமான தீர்வு என்ன? இச்சமூக ஊடகங்களை எவ்வாறு எமக்கு நன்மையளிக்கக் கூடிய விதத்தில் பயன்படுத்தலாம்? என ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Facebook மற்றும் ஏனைய சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி போன்று ஓரு வெற்று ஊடகமாகும். அதனை நாம் எவ்வாறு, எந்நோக்கில் பயன்படுத்துகின்றோம் என்பதனைப் பொறுத்தே அதன் விளைவுகள் அமையும்.

Facebook போன்ற ஊடகங்களின் நன்மை தீமைகள் ஒருபுறமிருக்க, இன்றைய நவீன தலைமுறையினரின் வாழ்வில் அது எந்தளவு தூரம் பின்னிப்பிணைந்துள்ளது என இக் கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கப்பட்டது. ஆகவே Facebook முற்று முழுதாக ஹராம் என மிம்பரில் நின்று கொண்டு வழங்கப்படும் பத்வாக்கள் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. மாறாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில் Facebook போன்ற சமூக ஊடகங்களை எவ்வாறு இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று உபயோகிக்கலாம். மேலும் அதனை எவ்வாறு சமூகத்தில் ஆக்க நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய அறிவூட்டல் அல்லது விழிப்புணர்வு நடவடிக்கைகள் (Awareness Campaigns) இளந்தலைமுறையினரை மையப்படுத்தி பாடசாலை மட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். நவீன தலைமுறையினரின் சமூக ஊடகங்களின் பாவனையை நெறிப்படுத்துவதற்கான இத்தகைய அறிவூட்டல்/ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறந்த ஊடகமாக Facebook அன்றி வேறெதனையும் காண முடியாது. Facebook இல் காணப்படும் Events, Page போன்ற வசதிகளைப் பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேலும் இன்று பலராலும் உபயோகிக்கப்படும் Webinar (இலத்திரனியல் கருத்தரங்குகள்) போன்ற வசதிகளையும் இதற்காகப் பயன்படுத்த முடியும்.

மேலும் Facebook சமூக ஊடகங்களினால் ஏற்படக்கூடிய சாதகமான விளைவுகள் பற்றி சமகால உலகிலிருந்து சில நடைமுறை உதாரணங்களை முன் வைப்பது சிறந்ததாக அமையும். அரபுலக நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் பற்றிப் பேசும் போது நாம் அனைவரும் முக்கியமாக கவனம் செலுத்தும் ஓரு தேசம்தான்எகிப்திய புரட்சியாகும். இவ்வெகிப்தியப் புரட்சிக்கான அடித்தளம் வாஇல் கொனிம் (WaelGhoeim) என்ற இளைஞனால் 2011 ஜனவரி மாதம் Facebook இனூடாகவே இடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் ஓரு கட்டத்தை அடைந்த பின் இஸ்லாமியவாதிகளும் ஏனைய அரசியல் சக்திகளும் இணைந்து கொண்டாலும் இதற்கான அறைகூவல், ஆள்திரட்டல் மற்றும் ஏனைய ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் Facebook மூலமே மேற்கொள்ளப்பட்டன.

மேலும் தகவல் பரிமாற்றங்களைப் பொறுத்தவரை தொலைக்காட்சி வானொலி மற்றும் பத்திரிகை போன்ற பாரம்பரிய ஊடகங்களை விட நேரடி ஊடகம் (Live Media) என்ற நிலைக்கு சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. உதாரணமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காஸா மீது இஸ்ரேலிய தீவிரவாதிகள் மேற்கொண்ட யுத்தத்தின் அழிவுகள், அது பற்றிய புள்ளி விபரங்கள், கொல்லப்பட்ட அப்பாவி சிறுவர்கள், பெண்களின் புகைப்படங்கள் ஒவ்வொரு கணமும் Facebook இல் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டேயிருந்தன. ஓரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அடுத்த நிமிடம் இதன் சேதங்கள் பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் Facebook இல் பதிவேற்றம் செய்யப்பட்டன.

எந்தளவுக்கெனில் இவ்யுத்தம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள விரும்பியோர் அல்- ஜஸீரா போன்ற செய்தித் தளங்களுக்கு செல்வதைவிடுத்து தமது Facebook கணக்கினூடாகவே அதுபற்றிய பிந்திய செய்திகளைப் பெற்றுக் கொண்டனர். இது எந்தளவு தூரம் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததெனில் எமது முஸ்லிம் சமூகத்தில் பலஸ்தீன பிரச்சினை அங்கு நாளாந்தம் அல்லல்படும் அப்பாவி மக்களின் துயர நிலைகள் பற்றி முன்னெப்பொழுதும் இருந்திராதளவு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இச்சமூக ஊடகங்கள் காரணமாக எமது சமூகத்தில் மட்டுமன்றி அந்நிய சமூகங்களுக்கிடையிலும் இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு ஏற்படுத்தப்பட்டது எனக் குறிப்பிடலாம். மேலும் பலஸ்தீன மக்களுக்கு உதவும் நோக்கில் அவர்களுக்கான எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிய மற்றும் இஸ்ரேலுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பகிஷ்கரிப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் (Boycott Campaign) இச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இலங்கையை பொறுத்த மட்டில் அண்மைக்காலமாக இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சில குறிப்பிட்ட பெளத்த தீவிரவாத சக்திகளினால் நன்கு திட்டமிடப்பட்ட அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது நாமனைவரும் அறிந்ததே. இவ்வகையில் இணையத்திலும் அதிலும் குறிப்பாக Facebook இல் பெளத்த பெரும்பான்மை மக்களிடையே இஸ்லாமிய எதிரலைகளை தோற்றுவிப்பதில் இப்பெளத்த தீவிரவாத சக்திகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன. அதில் அவை வெற்றியும் கண்டுள்ளன எனக் குறிப்பிட்டால் அது பிழையாகாது. இந்நிலையில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்படும் இப்போலிப் பிரசாரங்களை முறியடித்து இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களைக் களைய வேண்டிய பாரிய பொறுப்பொன்று எம்முன் காணப்படுகின்றது. இத்தகையதொரு சூழ்நிலையில் Facebook ஹராம் என்று கண் மூடித்தனமாக பத்வா வழங்குவதுதான் இதற்கான தீர்வாக அமையுமா? மாற்றமாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில் எமக்கெதிராக இச்சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை, நாமும் அதே ஊடகங்களை நன்கு திட்டமிட்ட அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலமே முறியடிக்க முடியும். அதை விடுத்து சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரங்களுக்கு நாம் வானொலி முஸ்லிம் சேவையிலோ அல்லது வேறு ஊடகங்களின் மூலமோ பதிலளிக்க முனைவோமேயானால் அது அர்த்தமற்றது. கேலிக்குரியது.

ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்று இலங்கையில் 1 மில்லியனிற்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட Facebook போன்ற சமூக ஊடகங்கள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் முன் வைப்பதற்கான சிறந்த தஃவா களமாக அமைகின்றன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் தஃவா (E-Dawah) எனும் எண்ணக்கருவில் எமது இஸ்லாமிய அறிஞர்களும் தஃவா அமைப்புக்களும் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய தஃவாவின் இறுதி இலக்குகள் (Ultimate Objectives) மாறாதவையாக இருக்கலாம். ஆனால் எமது தஃவா வழி முறைகளும் தஃவா உத்திகளும் கால சூழல் மாற்றங்களுக்கமையவும் சமூக கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கமையவும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களைத் தழுவியதாகவும் மாறும் தன்மை கொண்டவையாக அமையும் போதுதான் அவை எமது சமூகத்தில் போதியளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

ஆகவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம் என்னவெனில், இச்சமூக ஊடகங்களின் பாவனையில் நன்மையைப் போன்றே தீமைகளும் காணப்படினும் அவை முற்று முழுதாக ஹராம் என பத்வா வழங்கி அவற்றிலிருந்து விலகி நிற்பது நாம் இன்று எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வாக அமைய முடியாது. சிலபோது அவற்றிலிருந்து முற்று முழுதாக விலகி நிற்பது பாரிய பாதகமான விளைவுகளையும் எமது சமூகத்தின் மீது ஏற்படுத்தக் கூடும். இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்னவெனில், இளந்தலை முறையினரிடையே சமூக ஊடகங்களின் பாவனையை இஸ்லாமிய வரையறைகளுக்குள் நெறிப்படுத்துவதும் எமது தஃவா நடவடிக்கைகளுக்குள் இச்செல்வாக்கு மிக்க சமூக ஊடகங்களை உள்வாங்கும் வகையில் எமது தஃவா வழி முறைகளை மாற்றியமைப்பதுமேயாகும்.

நன்றி http://www.islamkalvi.com/

No comments: