Wednesday, June 4, 2014

மென்மையான இரவுகளை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்

மென்மையான இரவுகளை
ஸ்பரிசிக்கும் போதெல்லாம்
தேகம்
மணமகனைப்போல்
மாலை அணிந்து கொள்கிறது !

வாதாம் மரத்து
அடர்ந்த இலைகளினூடே
ஊடுருவிப் பயணித்து
என் புகையை
தழுவிக் கொண்டு
ஓவிய நடனமாடும்
மெலிசான நிலாவின்
வெளிச்ச வழிசல்
கவிதை வரிகளை இசைக்கும் !

மேக பூதங்கள்
விரட்டிவருவதைப் பார்த்து
ஓடி ஒளியும்
நட்சத்திரக் குழந்தைகள்
ஒளிந்து நின்று
கள்ளச் சிரி சிரிக்கும் !

வெயிலின்
வெறியிலிருந்து விடுபட்டு
தென்றலின் காதலில்
கனிவோடு
கணக்கின்றி பேசிக் கொண்டிருக்கும்
பச்சை இலைகள்
பரவச பாவனைகளை
பிரசவிக்கும் !

இரவின் நீட்சியிலிருந்து
விடுபட முடியாமல்
நீள் விழிகளும்
துயில் கொள்ளாமல்
துயருறும் !

இரவுகள் சுகமானது
இரவுகளுக்காக
காத்திருத்தல்
அதனினும் சுகமானது !

@ ஹுமாயூன் கபீருக்காக

Abu Haashima Vaver

No comments: