Friday, June 13, 2014

கோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.

சின்ன வயசில் எனக்கு கோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.
எங்கள் வீட்டில் ஏறக்குறைய இருபது கோழிகளுக்கு மேல் இருக்கும் அப்போது. அதற்கென தனியா கோழி கூடே சிமெண்டில் கட்டி வைத்திருந்தோம். காலையில் கோழிகளை திறந்துவிடுவதும் மாலையில் அந்த கோழிகளை எண்ணிக்கை பார்த்து கூட்டில் அடைப்பதும் வழக்கமாக என் வேலை.

அப்படி வளர்க்ககும் கோழிகள் இடும் முட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியது போக மீதியை சேர்த்து வைத்து அடை வைப்போம். அடை என்பது முட்டைகளை ஒரு அகலமான சாந்து சட்டியில்(சிமெண்ட் கலவை போட கொத்தனார் பயன் படுத்தும் சட்டிதான் சாந்து சட்டி என்பது) வைத்து அதில் கோழியை வைத்து பஞ்சாரத்திதை போட்டு மூடி விடுவது. சில நாட்களில் கோழி குஞ்சு பொறித்திருக்கும். அதற்காக சில சம்பிரதாயங்களை எங்கம்மா செய்யும்.

அதாவது அந்த பெரிய அகலமான சாந்து சட்டியில் கொஞ்சம் மணலை போட்டு அதன் மேல் முட்டைகளை அடுக்கி, கொஞ்சம் உப்பு, மிளகாய் எடுத்து கையில் வைத்து சுற்றி அந்த முட்டையின் மேல் போட்டு அதன் பின் கோழியை தூக்கி வைத்து பஞ்சாரத்தில் மூடிவிடும் எங்கம்மா. எதுக்கு இந்த மிளகாய், உப்பெல்லாம் போடுறேன்னு எங்கம்மாவிடம் கேட்டால், இது திருஷ்டி சுத்துறது. அப்பத்தான் கோழி ஒழுங்கா அடைகாத்து குஞ்சு பொறிக்கும்ன்னு எங்கம்மா சொல்லும். அட போம்மா, கோழி சூடு முட்டைல பட்டாலே போதும் குஞ்சு பொறிக்கும். இப்படி முட்டை மேல உப்பை கொட்டினா கோழி உட்காரயில குத்தாதான்னு அப்பவே பகுத்தறிவு பேசுவேன். சரி விஷயத்துக்கு வர்றேன்.

ஒரு நாள் மாலை கோழி அடைக்கும் போது ஒரு கோழியை காணாம். எங்கம்மாவிடம் சொன்னபோது, அய்யய்யோ நல்லா எண்ணி பார்த்தியா?, அது முட்டையிடற கோழியாச்சேன்னு சொல்லிட்டு சரி இங்கேதான் எங்காவது மேஞ்சிக்கு இருக்கும் அதுவா வந்திடும்ன்னு சொன்னுச்சு. அடுத்த நாளும் அந்த கோழிய காணாம்.

ஊர் பக்கம் நிறைய காட்டு பூனை திரியும். அதுக்கு கோழியை திருடறதுதான் வேலை. என் கண்ணு முன்னாடியே கோழியை அடிச்சிட்டு தூக்கிட்டு ஓடிடும். அப்படித்தான் அந்த கோழியையும் தூக்கிட்டு ஓடிடுச்சு போலன்னு நினைச்சு அந்த கோழியையே மறந்துட்டோம். சில நாட்களுக்கு பின் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்துச்சு. அது என்னன்னா..,

காட்டுப்பூனை பிடித்து போயிருந்ததாக நினைத்த கோழி அன்று என் கண்ணில் எதார்த்தமாக பட்டது. நல்லா கவனித்து பார்த்தேன்..... எல்லா கோழியும் வீட்டிற்குள் அடைய வந்தபோது அது மட்டும் விலகி பக்கத்தில் இருந்த வைக்கோல் போருக்கு அடியில் போய் பதுங்கியது. அப்போது இருட்டி விட்டதால் காலையில் போய் என்னன்னு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருந்துவிட்டேன். எங்கம்மாவிடமும் சொல்ல வில்லை.

பொழுது விடிந்ததும் முதல் வேலையா அந்த வைக்கோல் போர் அடியில் போய் பார்த்தேன்.... அங்கு கோழி படுத்திருந்தது.... அந்த கோழியை கையை விட்டு தூக்கினேன்.... கோழி இருந்த இடத்தில் பார்த்தால் நிறைய முட்டைகள்...... அதிலிருந்து ஒரு சில குஞ்சுகள் வெளியே வந்திருந்தது. அப்போதுதான் பொறித்திருக்கும்போல.... இன்னும் சில முட்டைகள் உடைந்தும் உடையாமலும் கிடந்தது.... அதுகூட இன்னும் சில மணி நேரத்தில் குஞ்சு பொறித்து விடும் என்பது போல் இருந்தது.... உடனே என் அம்மாவை அழைத்துவந்து காண்பித்தேன்.... "பாரும்மா நீ உப்பு, மிளகாய்ல்லாம் போட்டு கோழியை தூக்கி வச்சு குஞ்சு பொறிக்க வைப்பே.... ஆனால், இந்த கோழி உப்பு, மிளகாய் போடாமலேயே குஞ்சு பொறிச்சிருக்கு"..

#கோழித்துவம்.
நன்றி 
நடந்த நிகழ்வை நயம்பட தந்தவர் ஸ்டேடஸ் நிபுணர்  ரஹீம் கஸாலி
அவர்கள் 

                                                                 ரஹீம் கஸாலி

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இப்பொழுதெல்லாம் கோழிப் பண்ணைகள்தான்... வீடுகளில் கோழி வளர்ப்பு அரிதாகி விட்டது.
என் சிறு வயது கோழி நினைவுகளை கிளறி விட்டு விட்டது இப்பதிவு.