குஜராத். இது ஒரு விநோதமான மாநிலம்.
இந்தியச் சுதந்திர வரலாற்றைத் தொட்டு, கொஞ்சம் முன்னும் பின்னும் நடந்திருக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது குஜராத்தை ஏதோ ஒரு சாமானிய மாநிலமாகக் கணித்து விட முடியாது.
குஜராத்திகளில் இருவரை புறந்தள்ளி விட்டு இந்தியச் சுதந்திரத்தைப் பற்றி எழுதுகிற எழுதுகோல் உலகின் எந்தச் சரித்திர ஆசிரியரிடமும் இல்லை.
பனியா இனத்தில் பிறப்பெடுத்த மோகன்லால் கரம் சந்த் காந்தி. இந்த கரம்சந்த் காந்தி சட்டம் படிக்க லண்டன் சென்றார், பின்னாளில் மஹாத்மா காந்தியாக அறியப் பட்டார்.
இந்திய வரலாற்றில் இவருடைய கோட்பாட்டையும் தத்துவத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் மாற்றுச் சிந்தனையோடு செயல்பட்ட தியாகச் சுடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் மஹாத்மா காந்திக்குக் கிடைத்த பிரபகண்டா மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.
காந்திஜி, ஐரோப்பிய ஆடைகளை உதறித் தள்ளி விட்டுப் பக்கிரித் தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்தி வரலாற்றின் சக்கரவர்த்தி போல் நிலைத்து இருக்கிறார்.
இந்தியா, துண்டாடப்படக் கூடாது, அப்படி ஒன்று நடந்தால் என் பிரேதத்தின் மீது நடக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே இந்தியப் பிரிவினையை ஒப்புக் கொண்டு இருந்தார்.
மற்றொரு பனியா இனத்தைச் சார்ந்த குஜராத்திக்காரர் முகம்மதலி ஜின்னா, ஒன்றிணைந்த இந்தியா இனி ஒரு போதும் இருக்க நியாயம் இல்லை எனக் கூறி பாக்கிஸ்தான் பிரிவினைக்கு நியாயம் கற்பித்தார்.
இந்த முகம்மதலி ஜின்னாவின் தந்தையைப் பெற்ற தந்தை அதாவது தாத்தா தான் முஸ்லிமாக மாறினார். அதுவரை குஜராத்தின் பனியா இந்துதான் ஜின்னாவின் பாரம்பரியம்.
முகம்மதலி ஜின்னா, காந்தியின் தத்துவங்களுக்கு எதிர்ப்புறம் நின்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். இவரும் லண்டனில் படித்த சட்ட மேதைதான்.
ஜின்னா, காந்தியைப் போன்று அல்லாமல், படாடோபமான தோற்றத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.
வெள்ளைக்காரப் பிரபுகளைப் போலத்தான் ஆடை அலங்காரங்கள் இருக்கும். எல்லா நேரங்களிலும் சிகரெட் பிடித்துக் கொண்டு இருப்பார். அவர் காலத்தில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் எல்லாம் தாடி தொப்பிகளோடுக் காட்சி தந்து கொண்டு இருந்தனர். ஜின்னா மழுங்கச் சிரைத்த பிரிட்டிஷ்காரன் போல் இருப்பார். இவரையும் பிரபகண்டாதான் இந்தியா முழுவதும் பிரபல்யப் படுத்தியது.
குஜராத்தி பனியா காந்திக்கு எளிமைத் தோற்றம் மஹாத்மா தன்மையைக் கொண்டு வந்து சேர்த்தது. மற்றொரு குஜராத்தி பனியா ஜின்னாவிற்கு படோடபத் தோற்றம் அரசியல் தலைமையைக் கொண்டு வந்து சேர்த்தது.
காந்தி ஒரு பூரண இந்து தருமத்தை வாழ்ந்து காட்டியதாக ஒப்புக் கொள்கிறார்.
ஜின்னாவிடம் பூரணமான இஸ்லாம் வாழ்க்கை இருந்ததா? என்ற கேள்விக்கு இன்று வரை சரியான விடை யாருக்கும் தெரியாது.
காந்தி, கஸ்தூரிபா அம்மையாரை மத தர்மப்படித் திருமணம் செய்து கொண்டவர்.
ஜின்னா கிறிஸ்தவ பெண்ணை மனைவியாக்கிக் கொண்டார்.
காந்தியின் மூத்த மகன் கிறிஸ்தவனாக, முஸ்லிமாக மாறி மாறி வாழ்வை அமைத்துக் கொண்டவர்.
ஜின்னாவின் மகள் ஒரு போதும் முஸ்லிமாக வாழ்ந்தவரே கிடையாது. இன்றைய பாம்பே டையிங் நுஸ்லி வாதியா குடும்பத்து நபரைத் திருமணம் செய்து கொண்டவர். அதாவது பாம்பே டையிங் இன்றைய அதிபர்களாக இருப்பவர்கள் ஜின்னாவின் பேரப் பிள்ளைகள்.
காந்திஜி சிறைச் சாலைகளைப் பல முறை சந்தித்து போராட்ட வாழ்க்கை மேற்கொண்டு இருந்தவர்.
ஜின்னா சிறைச்சாலையின் வாசலைக் கூட தொட்டவர் இல்லை. “ஒரு ஸ்டெனோ, ஒரு டைப் ரைட்டர் என்னுடைய அறிக்கைகள் மூலம் பாக்கிஸ்தானைத் தனி நாடாகக் கண்டவன்”, என வரலாற்றுப் பெருமையைத் தானே சொல்லிக் கொண்டவர். இதில் உண்மையும் இருக்கிறது.
காந்தியினுடைய பெயரில் உள்ள சொற்கள் அனைத்தும் குஜராத்தி மொழியில் முழுமையாக இல்லை. முகம்மதலி ஜின்னா இந்தப் பெயரில் முகம்மதலி அரபு மொழி. ஜின்னா தனி குஜராத்தி மொழி.
ஜின்னாவின் தந்தை பூஞ்சா, அளவுக்கு அதிகமான நெட்டையர். அதனால் ஊர்க் காரர்கள் பூஞ்சாவை ஜின்னா என்று அழைத்தார்கள். ஜின்னா என்றால் குஜராத்து மொழியில் நெட்டையர் என்று அர்த்தம். இந்த ஜின்னாதான் முகம்மதலியோடும் ஒட்டிக் கொண்டது. அவருக்கு பின்னால் ஜின்னா என்பது முஸ்லிம் பெயர் போலயே ஆகிவிட்டது.
காந்திஜியை அவர் சார்ந்த இந்து மதத்தின் வெறியன் ஒருவன்தான் (கோட்சே) ஒருமுறை கொலை செய்ய முயன்றான். அடுத்த முறை சுட்டுக் கொன்றே விட்டான்.
ஜின்னாவை ஒப்புக் கொள்ளாத முஸ்லிம் வெறியன் ஒருவன் ஜின்னாவைக் கொலை செய்ய அவர் மீது கத்தியோடு பாய்ந்தான். ஜின்னாவின் கழுத்தில் கத்தி குத்து விழுந்தது. அடுத்த குத்து குத்த அவன் முனைந்த பொழுது ஜின்னாவே தன் கைகளால் கத்தியைத் தட்டி விட்டு அவனைப் பிடித்துக் கொண்டார். ஜின்னா தப்பினார்.
இந்திய வரலாற்றை எழுதிய சில சரித்திர ஆசிரியர்கள், “கத்தியவாராவைச் சேர்ந்த புத்திசாலிகளான இரண்டு பனியாக்களுக்கு இடையில் எழுந்த கருத்து மோதல்களே இந்திய உபகண்டத்தின் 25 ஆண்டுகால வரலாறாக அமைந்து விட்டது” என்று குறிப்பிடுகிறார்கள்.
இது முழுவதும் உண்மை அல்ல. ஆனால் உண்மை இல்லாமலும் இல்லை.
சர்தார் வல்லபாய் பட்டேல். பிரிவினைக்குப் பின்னால் சமஸ்தானங்களாகத் துண்டாடிக் கிடந்த இந்தியாவின் நிலையை மாற்றி இரும்புக் கரம் கொண்டு இன்றிருக்கும் இந்தியாவை உருவாக்கித் தந்தவர் என வரலாறு பட்டேலுக்கு முழு சிறப்பைத் தந்தாலும் அது முழு உண்மை ஆகி விடாது. ஆனாலும் பட்டேலுக்கு பெரும் விழுக்காடு சிறப்பு நிச்சயம் சென்று சேரும்.
பட்டேல் அன்றைய மஹாரஷ்டிரக்காரர் என்று அறியப் பட்டாலும், அவர் பிறந்த ஊர் இன்றைய குஜராத் மாநிலத்தில் இருக்கிறது. இந்த அடிப்படையில் பட்டேலுக்குள்ளும் குஜராத்தி ரேகை ஓடுகிறது.
இன்று நரேந்திர மோடி என்ற குஜராத்தி பிரபகண்டா மூலம் இந்தியப் பிரதமராக ஏற்றம் பெற்று இருக்கிறார்.
காந்தி எளிய தோற்றத்தைக் காட்டிப் பெருமை கண்டார்.
மோடி எளிய டீ விற்பனையாளன் என்று சொல்லித் தேர்தலைச் சந்தித்து வெற்றி கண்டு இருக்கிறார்.
ஆடைகளில் உயர்வைக் காட்டி ஜின்னா என்ற குஜராத்தி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டர்.
மோடியும் அதே பாணியைப் பின்பற்றி தோற்றப் பொலிவை முன்னிருத்தி ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் இரும்பு மனிதர் என்று நிர்வாகத் திறமைப் பெற்றுத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
மோடியும் தன்னை அப்படி ஒரு அவதாரமாக முன்னிலைப் படுத்திக் கொண்டு இருக்கிறார்.
எப்படியோ குஜராத்திகள்தாம் இந்தியாவிற்குப் பலப் பிரச்சனைகளை உருவாக்கித் தந்து இருக்கிறார்கள்.
இன்னொரு மொழியில் சொன்னால், இந்தியாவைத் துண்டாடியும் இருக்கிறார்கள், ஒட்டுப் போட்டு முழுக்கத் தீராத பிரச்சனைகளையும் உண்டாக்கியும் இருக்கிறார்கள்.
Hilal Musthafa
1 comment:
சிறப்பான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment