Sunday, April 22, 2018
*“கடைசி இலை’ (Last leaf ) என்பது ஓர் ஆங்கில கதையின் தலைப்பு*
இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.
அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.
ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.
அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.
அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.
மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.
அந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்துவிடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.
செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.
நாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.
பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!
இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.
நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான்.
மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.
அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள்.
அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.
அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்குமுன் ஓர் ஓவியனைக்கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.
பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்றுகாட்டலாம்.
இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.
அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலேபோதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிடும்.!!!
படித்ததில் பிடித்தது...!!!🍀
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment