காதருகில் வீழ்ந்திழையும்
கார்குழலை காற்றசைத்து
கன்னத்தில் கிசுகிசுக்க,
மாக்களுடன் வயல்வெளியில்
காற்றாக ஓடுகிறேன்;
கண்மூடி மூச்சிறைக்கும்
கணநேர இடைபோதில்
அருகில்வந்து அழைத்த
அன்பான அண்ணாக்கள்!
மெலிதான முறுவலுடன்
மென்மைக் கதைபேசி
எங்கேயோ அழைத்தார்கள்!
தீண்டல்கள் திடுமென்று,
தீயாய்ச் சுடுகையிலே,
கத்துகிறேன்; எனைவிடுங்கள்!
கதறுகிறேன்; எனைவிடுங்கள்!
ஏனங்கே தொடுகின்றாய்;
வலிக்கிறதே! அண்ணா!
வலிக்கிறதே! முடியாமல்
மயக்கத்தில் புலம்புகிறேன்!
அம்மா அப்பா ஆண்டவனே
அழுது தொழுது அரற்றுகிறேன்;
ஓலங்கூட உள்ளேயே
ஒய்ந்தொடிந்து மடிகிறது!
எல்லாமே மறைகிறது!
கடவுளும் கல்லாகி
கருத்தின்றி கரைந்தாரோ?
வருவேன் மறுபடியும்
வல்லாங்கு செய்தழித்தே
மாசுணமாய் எனைத்தின்ற
மாகயவன் வாழ்வழிக்க,
வருவேன் மறுபடியும்!
வருவேன் மறுபடியும்!
அரசனிங்கே அன்று
கொல்லாமல் சென்றாலும்,
இறைகூட கண்டு
கொல்லாமல் நின்றாலும்,
மாசுணமாய் எனைத்தின்ற
மாகயவன் வாழ்வழிக்க,
வருவேன் மறுபடியும்!
வருவேன் மறுபடியும்!
எனக்கான மௌனமொழி
மெழுவர்த்தி ஊர்வலங்கள்
யாருமிங்கே இரவுமணி
எட்டுதாண்டி வைக்காதீர்கள்;
எனதன்னை, என்னக்காள்
என்தங்கை இவர்களெல்லாம்
பத்திரமாக இல்லம்திரும்ப
வேண்டும். . வேண்டும்.. வேண்டும்.
இராஜ. தியாகராஜன்
இராஜ. தியாகராஜன்
No comments:
Post a Comment