Wednesday, April 18, 2018

நெல்லை கல்வியாளருடன் ஒரு சந்திப்பு



சந்திப்பு : முதுவை ஹிதாயத்------

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். கலீல் முஹம்மது இஸ்மாயில் ஆவார்.

இவர் M.Sc, M.Phil, B.Ed,D.P.M., D.B.A. ஆகிய படிப்புகளை படித்தவர்.

இவரது பெற்றோர் முஹம்மது கனி – மரியம் பீவி ஆவர். இவரது தந்தை மூன்று வயதிலேயே காலமாகி விட்டார்.

இவருக்கு மூன்று சகோதரிகள் ஆவர். இவர்களில் இருவர் காலமாகி விட்டனர்.

மனைவி பெயர் A. ஷாஹிரா பீவி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஆவர்.  ஒருவர் பி.இ. படித்து பொறியாளராகவும், மற்றொருவர் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு துபாயில் மருத்துவ நிலையத்தையும் நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் விலங்கியல் துறை பேராசிரியராக கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

சமீபத்தில் துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் செண்டர் என்ற மருத்துவ நிலையம் நடத்தி வரும் டாக்டர் கலிதா பார்க்க விசிட் விசாவில் தனது மனைவியுடன் வந்திருந்தார்.

டாக்டர் காலிதா கடந்த 15 வருடங்களாக துபாயில் மருத்துவ சேவை செய்து வருகிறார். தமிழ், ஆங்கிலாம், ஹிந்தி, உர்தூ, மலையாளம், அரபி உள்ளிட்ட மொழிகளை தெரிந்தவர். பள்ளிப்படிப்பில் சிறந்த முறையில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். பிளஸ் டூ படிப்பில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்தவர்.

அப்போதைய தமிழக கவர்னர் பி.சி. அலெக்சாண்டர் இடம் பரிசை பெற்றார். பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரியில் படித்தார். அதில் இருந்து 7 பேர் இலண்டன் செல்ல தேர்வு செய்யப்பட்டனர். அங்கு மருத்துவ உயர்கல்வியை வேலை செய்து கொண்டே படித்தார்.

அவருடன் சந்தித்து பேசியதிலிருந்து :

இவர் தனது பள்ளிக்கூட படிப்பை மாநகராட்சி பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், காமராஜ் உயர் நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் படித்தார்.

அதன் பின்னர் பி.எஸ்.ஸி படிப்பை மதுரை திரவியம் தாய்மானவர் இந்துக் கல்லூரியில் படித்தார். இந்த கல்லூரி பாரதியார் படித்த கல்லூரி என்ற பெருமைக்குரியது ஆகும்.


எம்.எஸ்.ஸி படிப்பை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலும் படித்தவர்.

வாணியம்பாடி கல்லூரியில் பணிபுரிந்து வந்த போது கிராமங்களை தத்தெடுத்து பல்வேறு நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக அந்த பகுதியில் யானைக்கால் வியாதியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகலுக்கு வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது.

அப்போது இரவு 11 மணி வரை ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் இந்த பணிகளை பாராட்டினர்.

இது மட்டுமல்லாமல் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இதனை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

மேலும் புதிதாக அப்போது பிளஸ் டூ பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று தேவையான இலவச ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆலோசனையானது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இந்த புதிய பாடத்திட்டத்தை விளக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தன்னிடம் படித்த மாணவ, மாணவிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். பல்வேறு உயர் பதவிகளையும் வகித்து வருகின்றனர். குறிப்பாக லண்டனில் தனது மகளை பார்க்க சென்ற போது அங்கு ஒரு இளைஞர், சார் நான் உங்களின் மாணவர் என பெருமையுடன் தெரிவித்தார்.

இதுபோல் மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தங்களது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் பகுதி தோல் தொழிலுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். இந்த பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக தண்ணீரில் வேதிப் பொருள்களை கலக்காமல் தடுக்க வேண்டிய முறைகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

தலைவர்

எங்களது கல்லூரிக்கு வராத தலைவர்களே இல்லை. அந்த அளவுக்கு இந்த கல்லூரிக்கு பல தலைவர்கள் வந்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஆகியோர் இங்கு வந்துள்ளனர். ராஜீவ் காந்தி அவர்கள் ஆம்பூர் பிரியாணியை ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார்.

அதேபோல் கல்லூரியின் முன்னாள் மாணவர் டாக்டர் அக்பர் கவுசர் ஆவார். இவர் யுனானி மருத்துவத்தில் சிறப்பான அனுபவம் பெற்றவர்.



பள்ளிவாசல் நிர்வாகம்

திருநெல்வேலி முஹம்மது நெய்னார் பள்ளிவாசலின் நிர்வாகத்தில் செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த பள்ளிவாசல் 150 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இந்த பள்ளிவாசல் கல்லினால் கட்டப்பட்டது. இதன் தோற்றம் மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தென் இந்தியாவின் தொன்மை வாய்ந்த பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த பள்ளிவாசலின் கீழ் ரியாலுர் ரஹ்மா அரபிக் கல்லூரி இருந்து வருகிறது. இது 140 வருட பழமை வாய்ந்தது.

மேலும் பைத்துல்மால் மூலம் வசதியற்றவர்களுக்கும், நலிந்தவர்களுக்கும் தேவையான உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிர்வாகத்தின் கீழ் நடந்து வரும் பள்ளிக்கூடம் போதிய வசதி இல்லாமல் இருந்து வந்தது. அது மேம்படுத்தப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணங்கள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நீதிபோதனை வகுப்புகள், உலகக் கல்வியுடன் மார்க்க கல்வி, யோகா வகுப்பு ஆகியவைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பள்ளிவாசல் மற்றும் பள்ளிக்கூட மேம்பாட்டுக்கு பலரும் தங்களது உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் ரத்ததான முகாம் உள்ளிட்ட சமூக சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஜமாஅத்தினரின் ஒத்துழைப்புடன் தனது பணிகள் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.
 from:    Muduvai Hidayath
 <muduvaihidayath@gmail.com>


No comments: