Monday, April 23, 2018
கொஞ்சுமுகப் பிஞ்சுப் பெண்ணே
அந்நியனோ
அடிக்கடி வீடுவரும்
அங்கிளோ
தொடுதல்
காமத் தொடர்தலுக்கானத்
தூண்டில்கள்
தொடும் விரல்களின்
வேர்களில்
தீவிர காமத் தாகம்
தகித்துக்கொண்டிருக்கலாம்
சொல்லித்
தருவதில்லையா
உன் அம்மா
உன்
ஐந்தே வயதுக் காலழகு
அம்மாவுக்கு அற்பம்தான்
அலைபாயும்
கண்களில் பட்டாலோ
அபாயமல்லவா
பாவம்தான்
நீ
என் கண்கள்
கழன்று விழுகின்றன
உன்முன்
துயரத் துளிகளாய்
என்செய்வது
அறம் அவிழ்ந்த பாவிகளின்
பூமியாகிப் போனதே
நம் மாண்புமிகு மண்
முகம்விரித்து முறுவலித்து
சாக்லெட் தரும் உள்ளம்
அன்பு உள்ளமாகத்தான்
இருக்க வேண்டும்
ஆனால்
எக்ஸ்ரே எடுத்தால்
கபடம் மறைத்த வாய்ப்பல்லவா
அதிகரித்துக்கிடக்கிறது
யார் தொடலாம்
எவர் தந்தால் பெறலாம்
யாரழைத்தால் செல்லலாம்
என்று சொல்லித் தரும்
தாயே
ஏமாந்து நிற்கிறாளே
பாழும் உலகமம்மா இது
மிருகங்கள்
கட்டவிழ்ந்துத் திரிகின்ற
பாதகக் காலமம்மா
ஊரோர ஐயனாரின்
கொடுவாள் எடுத்து
நான்
வீட்டுக்குள் விளையாடும்
உன் பிஞ்சுப் பருவத்தைக்
கொய்கிறேன்
உன் சிறுமி ஆசைகளைத்
துண்டிக்கிறேன்
உன் அடிப்படைச் சுதந்திரத்தைக்
கொல்கிறேன்
தறிகெட்டத் தறுதலைகளுக்குத்
தண்டனையாய்
அக் கருந் தலைகளை
அந்நொடியே வெட்டிவீசும்
கட்டுமானமும்
கட்டளையும்
களையெடுப்பும்
இல்லையே இங்கே
நான் வேறென்ன செய்ய?
அன்புடன் புகாரி
அன்புடன் புகாரி
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *
சித்திரைத் திருவிழா / தமிழ்ப்புத்தாண்டு பட்டிமன்றம். தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் கனடா.
குடும்பத்தில் பெரிதும் வளம் சேர்ப்பது இல்லத்தரசிகளா அல்லது பணிக்குச் செல்லும் பெண்களா?
ஆறு பேச்சாளர்களையும் பெண்களாகவே வைத்து நடந்த உலகின் முதல் பட்டிமன்றம் நானறிந்து வேறில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment