அன்புள்ள ஐயா,
‘இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்’ எனும் கட்டுரை கண்டேன். கட்டுரையாளரின் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஓர் அங்கத்திடம் அவசியம் இருக்க வேண்டியவையே.
அதே வேளையில், முஸ்லிம் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எதார்த்த நிலை என்ன என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. நான் ஒரு வாசகன் என்ற அடிப்படையில் (இங்கு ‘நான்’ என்பது, ‘தன்மை ஒருமை’ அன்று; பலருக்கான ஒரு குறியீடு!) உலக நடப்புகள், நாட்டு அரசியல், மக்கள் நிலை, தட்பவெப்பம் ஆகிய பொதுஅறிவுக்காக, தினமணி, தி இந்து போன்ற நாளிதழ் படித்தாக வேண்டும்.
சமுதாயச் செய்திகளை அறிவதற்காக, ஒரு மணிச்சுடரோ பிறைமேடையோ வாசித்தாக வேண்டும்; இயக்கம் அல்லது அமைப்புவாதியாக நான் இருந்தால் அதன் வார ஏட்டினை உருப்போட வேண்டும்; மார்க்கம் அறிய, அதற்கான மாத இதழ்கள் பார்க்க வேண்டும் –என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
நான் ஒரு முஸ்லிம் எழுத்தாளன் என்ற கவனிப்பில், எனக்கெனச் சில கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் உள்ளன. பொதுத் தளத்திலும் தனித் தளத்திலும் அவற்றை நான் கடைப்பிடித்தாக வேண்டும்; மீற முடியாது. மார்க்கத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடாமலும் பொது அமைதிக்கு ஊறு நேர்ந்துவிடாமலும் பக்குவமாக எழுதுகோலைப் பிடித்தாக வேண்டும். இது எல்லாராலும் சாத்தியப்பட்டுவிடுவதில்லை.
இது, எழுத்து ஊடகத்திற்கு மட்டுமன்றி, காட்சி ஊடகத்திற்கும் பொருந்தும். அப்படியிருந்தும் தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளும் இலக்கியவாதிகளும் களமாடாமல் இல்லை. மொத்த எண்ணிக்கையில் விழுக்காடு குறைவாக இருக்கலாம்; விழுக்காடே இல்லை என்று சொல்ல முடியாது.
இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத்துறையிலிருந்து விலகி ஓடுவதில், சில இடதுசாரி முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு அதிகப் பங்குண்டு எனலாம்! எப்போது பார்த்தாலும் முஸ்லிம் சமுதாயத்தைக் குறைசொல்வதே இவர்களின் வாடிக்கை. அது zமட்டுமன்றி, இஸ்லாமிய மார்க்கத் தரவுகளுக்குத் தம் மனம்போன போக்கில் வியாக்கியானம் பேசுவதும், சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டினால், அவர்களை எள்ளல் மொழியில் தரக்குறைவாக விமர்சிப்பதும் இவர்களின் வாடிக்கையாக உள்ளது.
இந்தியச் சூழலை நன்கு உள்வாங்கிக்கொண்டு, அதே நேரத்தில் தாம் சார்ந்த மார்க்கத்திற்கும் விரோதமில்லாமல் நுண்ணறிவோடும் நுட்பமாகவும் செயலாற்றுகின்ற இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
சென்னை-14. அ. முஹம்மது கான் பாகவி
3.4.2018
https://draft.blogger.com/blogger.g?blogID=4875587702814665006#reading
No comments:
Post a Comment