Saturday, April 14, 2018
சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1
1. வெற்றியின் முன்னறிமுகம்
வெள்ளிக்கிழமை. செப்டெம்பர் 4, 1187. அஸ்கலான் நகரின் கோட்டை வாசலில், கடல் போல் திரளாக நின்றிருந்தது படை. அந்தப் படையின் தலைவரிடம் ‘சரண்’ என்று தன்னை ஒப்படைத்தது அந்நகரம்.
தமது நீண்ட நெடிய வெற்றிக்கும் சாதனைகளுக்கும் தொடர்பற்ற எளிமையுடன், ஆடம்பரமற்ற எளிய உடையில் குதிரையில் அமர்ந்திருந்தார் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. ஐம்பது வயது. வட்ட முகம். எச்சரிக்கையுடன் பார்வையைச் செலுத்தும் கூரிய விழிகள். தாடி நரைக்க ஆரம்பித்திருந்தது. தலைப்பாகைக்கு அடியில் வெளியே தெரிந்த தலைமுடியோ கருமையாகவே இருந்தது. போலோ விளையாட்டு வீரரின் லாவகத்துடன் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தார் அவர்.
oOo
இரு மாதங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்திருந்தது ஹத்தீன் யுத்தம். பெருமளவில் படை திரட்டி வந்திருந்த கிறிஸ்தவர்களுடன் நிகழ்ந்த அந்தப் போர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெகு முக்கியப் போர். சிறப்பான தந்திரம், அட்டகாசமான வியூகம் என்று சுல்தான் ஸலாஹுத்தீன் களத்தில் புரிந்த வித்தைகளில் எதிரிகள் கொல்லப்பட்டு, காயப்பட்டு, பதறிச் சிதறி, படு தோல்வி அடைந்திருந்தனர். மாண்டவர்கள் போக எஞ்சியவர்கள் தப்பி ஓடத் தேர்ந்தெடுத்த திசை வடக்கு. அங்குதான் டைர் (Tyre) நகரம் இருந்தது. அது அவர்கள் வசம் இருந்தது. அங்குச் சென்று தஞ்சம் அடைந்தனர் அவர்கள். கிறிஸ்தவர்களின் மனோதிடத்தை அத்தோல்வி மிகவும் உலுக்கியிருந்தது.
தெளிவான வெற்றியை ஈட்டிய வேகத்தில் ஸலாஹுத்தீன் அப்படியே அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அந்த நகரையும் கைப்பற்றியிருக்கலாம். பிற்காலச் சோதனை நிகழ்வுகளும் தவறவிட்ட அந்த வாய்ப்பைச் சுட்டிக்காட்டும்படிதான் அமையப் போகின்றன. ஆனாலும் அன்று அவரது முன்னுரிமையை மாற்றி அவரை எதிர்த் திசையில் இழுத்தது வேறொரு நகரம். ஜெருசலம்!
ஸலாஹுத்தீன் ஐயூபி மன்னராய் உருவான காலத்திலிருந்தே ஜெருசலம்தான் அவரது இலட்சியமாய் இருந்தது. நெடுக நடைபெற்ற ஒவ்வொரு போருக்கும் அரசியல் நகர்வுகளுக்கும் சண்டைக்கும் சமாதானத்திற்கும் அந் நகரின் விடுதலைதான் அடிநாதமாய்த் திகழ்ந்தது. அவரது சுவாசக் காற்றில் அதன் பெயர் இரண்டறக் கலந்திருந்தது. அத்தனைக்கும் பலனாய் இதோ இப்பொழுது கனிந்து நிற்கிறது காலம். ‘மகனே, வா!’ என்று அழைத்து, அணைத்துக் கொஞ்சுவதற்குக் கரம் விரித்துக் காத்திருக்கும் தாயைப் போல் தயாராய் இருக்கிறது பைத் அல் முகத்தஸ். எனும்போது என்ன செய்வார் அவர்? தெற்கு நோக்கித் திரும்பியது சுல்தான் ஸலாஹுத்தீனின் படை.
அடுத்த எட்டு வாரங்களில், கிறிஸ்தவர்கள் கைப்பற்றியிருந்த கடலோர நகரங்களை, ஊர்களை அவரது படை வெண்ணெய்யை வெட்டும் கத்தியின் இலகுவுடன் சரசரவென்று கிழித்துக்கொண்டே முன்னேறியது. அந்த வெற்றிகளை மேற்கத்திய கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் ஒருவர் அப்படித்தான் விவரித்து எழுதி வைத்திருக்கிறார். பெருமளவில் எதிர்ப்பெல்லாம் இல்லை. ஒவ்வோர் ஊரும் வரிசை கட்டிச் சரணடைந்தது.
அந்த வரிசையில் முக்கிய இலக்காக அவரது படை இறுதியாக எட்டிய நகரம்தான் அஸ்கலான். கிறிஸ்தவர்களுக்கு அது வெகு முக்கியமான நகரம். ஐரோப்பாவிலிருந்து மேலதிகப் படைகளும் உணவுப்பொருட்களும் இதர அனைத்தும் வந்து அடையத் தோதாக உள்ள அத் துறைமுக நகரை முதுகுக்குப் பின்னே விட்டு வைத்துவிட்டு ஜெருசலத்தை முற்றுகையிடுவது ஆபத்து என்பதால் அஸ்கலானைக் கைப்பற்ற முடிவெடுத்திருந்தார் ஸலாஹுத்தீன். குறிப்பாகச் சொல்வதென்றால், உட்புறமாய்ப் படையினரை வழிநடத்தாமல் கடலோர நகரங்களைக் கைப்பற்றிக்கொண்டே வந்ததற்கு வெகு முக்கியமான காரணமே அதுதான். அங்கிருந்து இருபது மைல் தெற்கே இருந்த கஸ்ஸாவும் கைக்கு எளிது. அதன் பிறகு அங்கிருந்து கிழக்கே திரும்பி, ஜெருசலம் என்பது திட்டம்.
சுற்றிலுமுள்ள அனைத்து ஊர்களும் முஸ்லிம்கள் வசமாகிவிட, தீவைப்போல் தனித்து விடப்பட்ட நிலைமைக்கு வந்தது ஜெருசலம். கிறிஸ்தவர்களுக்கு உதவி என்று வரவேண்டுமானால் சில நூறு மைல் தொலைவிலுள்ள டைர் நகரம்தான் படை அனுப்ப வேண்டும். ஆனால் அவர்களோ ஹத்தின் போரில் சந்தித்த தோல்வி அளித்த அதிர்ச்சியிலிருந்து அவ்வளவு எளிதில் மீளக்கூடிய நிலையில் இல்லை.
நகரின் உள்ளே சிரியாவின் ஆன்மீகக் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டும், தங்களை ரோமர்களின் திருச்சபையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு, ஆசை! பேராவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். காரணம், மேற்கிலிருந்து கிளம்பிவந்து ஆட்சி அமைத்திருந்த அந்த ரோமாபுரி கிறிஸ்தவர்களுடன் அவர்களுக்கு நெடுகவே எட்டிக்காய் உறவு. அவற்றையெல்லாம் பின்னர் கான்ஸ்டண்டினோபிலின் அரசியல் நகர்வுகளைக் கடக்கும்போது நாம் கவனிக்க முடியும்.
இப்படியான சூழலில், மன்னர் ஸலாஹுத்தீனைச் சந்திக்க ஜெருசலத்திலிருந்து அஸ்கலானுக்குக் குழுவொன்று வந்தது. அவர்களை வரச்சொல்லியிருந்தார் ஸலாஹுத்தீன். முஸ்லிம் படைகளின் கொடியும் பதாகைகளும் காற்றில் படபடக்க ஒளி மங்கிக்கொண்டிருந்தது பகல். அன்று சூரிய கிரகணம். அதிகாரி ஒருவர் மன்னரை நெருங்கி, தூதுக்குழு வந்துள்ள செய்தியைத் தெரிவித்தார்.
அவர்களை வரவழைத்ததற்குக் காரணம் இருந்தது. ஜெருசலம் வெறுமே ஒரு போர் பரிசன்று, இதர நகரத்தின் வெற்றிகளைப்போல் அந்நகருக்குள் பாய்ந்து தாக்கிச் சூறையாடுவதெல்லாம் தகாது என்று உறுதியாகக் கருதினார் சுல்தான் ஸலாஹுத்தீன். மாறாக, “இது இறைவனின் நகரம் என்று நீங்கள் நம்புவதைப் போலவே நானும் நம்புகிறேன். இறைவனின் இல்லத்தை முற்றுகையிடுவதோ, அதைத் தாக்குவதோ என் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது” என்று அவர்களிடம்தெரிவித்தார்.
பிறகு?
சரணடைய வேண்டும். அமைதியான முறையில் அந் நகர் சரணடைய வேண்டும். கலீஃபா உமரிடம் (ரலி) அன்று அந் நகரம் எப்படித் தம்மை ஒப்படைத்ததோ அப்படியான ஒரு வெற்றியே அபாரம் என்று அவர் நம்பினார். அதற்கான முகாந்திரமாக, அவர்களுக்கு வெகு தாராளமானச் சலுகைகளையும் வெகுமதிகளையும் அத் தூது குழுவினரிடம் அறிவித்தார் ஸலாஹுத்தீன். இனி தற்காத்து வெற்றியடையும் சாத்தியம் அசாத்தியமாகியிருந்த அவர்களுக்கு, அந்தப் புனித நகருக்காக அவர் அளித்த சலுகைகள் தாராளத்தின் உச்சம். ஆனால், அவற்றையெல்லாம் நிராகரித்துக் குழுவினரிடமிருந்து வீராவேசமாகப் பதில் வந்தது.
“எங்கள் கௌரவமும் மரியாதையும் இம்மண்ணில்தான் உள்ளன. எங்களது மீட்சி இந் நகரை மீட்பதில் அடங்கியுள்ளது. நாங்கள் இந் நகரைக் கைவிட்டால் வெகு நிச்சயமாக எங்கள் மீது அவமான அவமதிப்பு முத்திரை குத்தப்படும். எங்கள் மீட்பர் சிலுவையில் அறையப்பட்ட இடம் இது. எங்கள் தேவனின் கல்லறையைத் தற்காப்பதற்காக நாங்கள் மரணமடையவும் தயார்.”
அவ்வளவுதான். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது! உடன்படிக்கை உதவாமற் போனது. இனி வேறு வழி இல்லை என்றானதும், “நன்று. இனி வாள் முனையில் அந் நகர் என் வசமாகும்” என்று சபதமிட்டார் சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. அடுத்த இரண்டு வாரங்களில், ஜெருசலம் நகரின் மேற்குப்பகுதி அரண்களின் அருகே படை வந்திறங்கியது.
செப்டெம்பர் 20 ஆம் நாள், ஜெருசலம் முற்றுகையிடப்பட்டது.
oOo
ஸலாஹுத்தீன் எதிர்பார்த்ததைவிட அவர்களின் தற்காப்புத் தாக்குதல் தீவிரமாக இருந்தது. உயர்ந்தோங்கியிருந்த டான்க்ரெட், டேவிட் கோபுர அரண்களிலிருந்து கோட்டைக் காவற்படையினர் தொடுத்தத் தாக்குதல் முஸ்லிம்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. கவண்பொறியை நிர்மாணிக்கவோ அதைச் செயல்படுத்தவோ முடியவில்லை. மேலும் சோதனையாக, கிழக்கு நோக்கி நின்றிருந்த முஸ்லிம் படையினருக்கு ஒவ்வொரு நாளும் சூரியன் உதித்து மேல் வானத்திற்கு வரும்வரை, கண்கள் கூசி, கோட்டையின் மேலிருந்து தாக்கும் வில்வீரர்களைக் கண் இடுக்கிக் காண்பதிலும் சிக்கல்.
ஐந்து நாள்கள் கழிந்தன. இது சரி வராது என்பது தெரிந்தவுடன், செப்டெம்பர் 25ஆம் நாள் முற்றுகையிட்டிருந்த தம் படைகளுடன் கிளம்பிவிட்டார் ஸலாஹுத்தீன். ‘முஸ்லிம்களின் படை பின்வாங்கி விட்டது! வெற்றி!’ என்று ஜெருஸலம் மகிழ்ச்சியில் குதூகலித்தது! அன்றிரவு கிறிஸ்தவர்கள் நிகழ்த்திய ஜெபமும் மரக் கட்டைகளை விரல்களால் பற்றி எழுப்பிய பிரார்த்தனை ஓசையும் மலைகளைத் தாண்டி எதிரொலித்தன. ஆலயங்களில் கூட்டம் பொங்கி வழிந்து, தொடர்ந்தது தேவனுக்கு வழிபாடு.
அடுத்த நாள் பொழுது புலர்ந்தது. கண்விழித்த ஜெருசலம் மக்களின் விழிகள் நிலைகுத்தின. நகரின் வடக்கு, வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம் படையினர் முற்றுகையிட்டிருந்தனர். ஆலிவ் குன்றில் அவர்களது பதாகை படபடவென்று பறந்துகொண்டிருந்தது. கவண்பொறி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டுத் தாக்குதலுக்குத் தயாராக நின்றன. அணிவகுத்திருந்தது சுல்தான் ஸலாஹுத்தீனின் படை. அதிர்ந்து போனார்கள் கிறிஸ்தவப் படையினரும் ஜெருசலம் மக்களும்.
அச்சமயம் அகதிகளுடன் பெருகி வழிந்தது அந் நகரின் மக்கள்தொகை. ஹத்தின் யுத்தம், இதர யுத்தங்களிலிருந்து தப்பிப் பிழைத்த மக்கள் அங்கு அகதிகளாகக் குடியேறியிருந்தனர். உள்ளே அடைபட்டிருந்த முஸ்லிம் கைதிகளும் அதிகம். அகதிகள், கைதிகள், குடிமக்கள் என்று அத்தனை ஆயிரம் மக்களுக்கும் உணவு தேவைப்பட்டது. படைகளைத் திறனுடன் நடத்த வல்ல சேனாதிபதிகளோ இருவர்தாம் இருந்தனர். Knigths எனப்படும் இந்த சேனாதிபதிகள் மிகத் திறம் வாய்ந்த மாவீரர்களாகவும் சிறப்பான ஆயுதங்கள் தரித்தவர்களாகவும் திகழ்ந்தவர்கள். அத்தகையவர்கள் பற்றாக்குறை என்றுகூடச் சொல்ல முடியாத அளவிற்குப் பரிதாப எண்ணிக்கையில் இருந்ததால் கிறிஸ்தவத் தளபதி ஒரு வேலை செய்தார். பதினாறு வயதுக்கு மேற்பட்ட உயர்குடி வகுப்பைச் சேர்ந்த அனைவரையும் அழைத்து, “நீங்களெல்லாம் சேனாதிபதிகள்” என்று Knight பட்டம் சூட்டிவிட்டார். அந்தப் பட்டம் அவர்களுக்கு ஆயுதங்கள் தரிக்க உதவலாம்; அவர்கள் மத்தியில் உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டலாம். ஆனால், பட்டம் வழங்கிய அடுத்த நொடியே சண்டைத் திறன் வாய்த்துவிடுமா என்ன?
கிறிஸ்தவப் படைத் தளபதியைக் குறித்த முக்கியமான ஒரு நிகழ்வை அவசரமாக, வெகு சுருக்கமாக இங்கு அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இபெலினைச் சேர்ந்த பேலியன் என்பவன் ஜெருசல நகரின் போருக்குத் தலைமை ஏற்றிருந்தான்.அவன் வெகு சிறப்பான போர் வீரன். திறமைசாலி. பிரமாதமான சேனாதிபதி. அவன் அங்கு அப்பொழுது வசிக்க நேர்ந்ததற்குக் காரணமே சுல்தான் ஸலாஹுத்தீன்தான். ஹத்தின் போரில் தோற்றவர்கள் டைர் நகருக்குச் சென்றுஅடைக்கலமானார்களே அதில் இவனும் ஒருவன். ஆனால் அவனுடைய மனைவியும் பைஸாந்திய அரசகுமாரியுமான மரியா கொம்னெனா ஜெருசலத்தில் வசித்து வந்தாள். கணவனும் மனைவியும் இருவேறு திசையில் பிரிந்துவிட்டார்கள். மனைவியையும் குடும்பத்தையும் பிரிய நேரிட்ட பேலியன், சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு வேண்டுகோள் விடுத்தான். “தயவுசெய்து எனக்குப் பாதுகாவல் அளியுங்கள். நான் ஜெருசலம் சென்று என் மனைவியையும் குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு டைர் திரும்பிவிடுவேன். என் உயிருக்கு உத்தரவாதம் அளியுங்கள்.”
பகைவருக்கு இரக்கம் காட்டுவதிலும் கருணை பொழிவதிலும் சுல்தான் ஸலாஹுத்தீனுக்கு அமைந்திருந்த இயல்பு அவருடைய வரலாற்றின் பேராச்சரிய பக்கங்கள். மேற்கத்தியர்கள் மாய்ந்து மாய்ந்து புகழும் ஆச்சரியங்கள். “நல்லது! ஒரே ஓர்இரவு மட்டும் ஜெருசலத்தில் தங்கி உன் மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். இதன் பிறகு எனக்கு எதிராக நீ வாளேந்தவே கூடாது!” என்று இரண்டு நிபந்தனைகள் அவனுக்கு விதிக்கப்பட்டன. பேருபகாரம். எளிய சலுகை. ‘கட்டுப்படுகின்றேன்’ என்று அந்நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பேலியன் சத்தியம் செய்தான். ஜெருசலம் சென்றான். ஆனால், திருச்சபை முதல்வரும் நகரிலிருந்த மக்களும் அவனை இழுத்துப் பிடித்து, அளித்த அழுத்தத்திலும் கொடுத்த குடைச்சலிலும் தடுமாறி, மனம்மாறி, அங்கேயே தங்கிவிட்டான். ‘அப்படியானால் நான் செய்து கொடுத்த சத்தியம்?’ என்று கவலைப்பட்டவனிடம், ‘உன் சத்தியத்திலிருந்து பாவமின்றி நீ விடுபட நாங்கள் பொறுப்பு’ என்று மதகுருமார்கள் அவனை சமாதானப்படுத்திவிட்டார்கள். தங்கிவிட்டான் பேலியன்.
அத்துடன் நில்லாமல் மன்னர் ஸலாஹுத்தீனுக்குக் கடிதமொன்றும் எழுதினான். “மன்னிக்கவும். என் மக்களுக்காக நான் உங்களுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை முறிக்கும்படி ஆகிவிட்டது. என் மதகுருமார்கள் அதற்கான பரிகாரம் செய்துவிட்டார்கள். என் மனைவியையும் குடும்பத்தையும் டைருக்கு அனுப்பிவிடுகிறேன். தயவுசெய்து அவர்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.”
அப்பட்டமாக வாக்கு மீறப்பட்டுள்ளது. தமக்கு எதிராக அணி மாறிவிட்டான். மட்டுமின்றி, எதிரிகளின் கைகளை வலுவாக்கி அவர்களது அரண்களையும் கோட்டைகளையும் பாதுகாப்புகளையும் பலப்படுத்திவிட்டான். மேற்கொண்டு இப்படியொரு கோரிக்கையும் வைக்கிறான் என்றால் ஒரு மன்னர் என்ன செய்வார்? யார் என்ன செய்வார்களோ தெரியாது, ஸலாஹுத்தீன் தம்மிடமுள்ள மிகச் சிறந்த ஐம்பது வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது பாதுகாவலுடன் பேலியனின் மனைவியையும் பிள்ளைகளையும் பத்திரமாக வடக்கு நோக்கி டைருக்கு அனுப்பிவைத்தார்!
அந்த பேலியனின் திறமையான தலைமையில்தான் சுல்தான் ஸலாஹுத்தீனின் முற்றுகையை எதிர்த்து வாளேந்தி நின்றது கிறிஸ்தவர்களின் படை. தொடங்கியது முஸ்லிம்களின் தாக்குதல். நாற்பது கவண்பொறிகள் இடைவிடாது இயங்க ஆரம்பித்தன. அதன் கட்டைகளின் கரகர, அவற்றில் உராயும் பெரும் கயிறுகளின் உரத்த முனகல், திடும்திடும் என்று கவணிலிருந்து பாயும் பாறைகள், படைவீரர்களின் ‘ஹோ’ என்று களத்தில் போர் ஆரவாரம். அவற்றையெல்லாம்விட,கோட்டைகளில் இருந்த எதிரிப் படையினருக்கு காதைச் செவிடாக்கி தலையைக் கிறுகிறுக்க வைத்த விஷயம், பறந்து வந்த பாறைகள் அவர்களது இரும்புத் தரைகளை மோதி, அவை எழுப்பிய ரீங்கார அதிர்வொலி. காது சவ்வைப் பிய்த்தது அந்த ஓசை.
இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்ந்தது. முன்னெப்போதையும்விட கிறிஸ்தவப் படையினர் வெகு ஆக்ரோஷத்துடன் போரிட்டார்கள். சேனாதிபதிகள் நகருக்கு வெளியே வந்து சண்டை புரிந்தார்கள். இருதரப்பிலும் பலத்த உயிரிழப்பு. ஆனால் அவையெல்லாம் முஸ்லிம்கள் முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை.
முஸ்லிம் வீரர்கள் கோட்டைகளிலுள்ள எதிரிகள்மீது அம்பு மாரிப் பொழிய, பல்லிடுக்கில் சிக்கிய இறைச்சித் துண்டுகளைப் பற்குச்சி குத்தி எடுப்பதுபோல் அவர்கள் அம்புகளில் சிக்கி விழுந்துகொண்டிருந்தனர் என்று விவரிக்கின்றார் பஹாவுத்தீன். மற்றுமொரு வீரர் குழு கேடயங்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டு எதிரிகளின் அம்புகளுக்குக் கூரை அமைத்துத் தடுக்க, அதன் கீழே சுரங்கம் தோண்டும் திறனாளிகளின் குழுவொன்று கோட்டைகளின் அடிக்கட்டுமானத்தைத் தோண்டி ஓட்டையிட ஆரம்பித்தது. அல்லுபகல் பாராது நடைபெற்றது வேலை. எளிதில் தீப்பற்றக்கூடிய மரக்கிளைகள், சருகுகள், கோரைப் புற்கள் போன்றவற்றால் அஸ்திவார முட்டுக்கால்கள் சுற்றப்பட்டு, தீயிடப்பட்டன. பலவீனமடைந்திருந்த சுவர்கள் தடதடவென்று சரிந்து விழுந்தன.
இறுதியாக, ‘நகரை ஒப்படைத்துவிடுகிறோம். எங்களுக்குப் பாதுகாவல் அளியுங்கள்’, என்று சமாதானம் பேச வந்தது தூதுக் குழு. இப்பொழுது அதை நிராகரித்தார் ஸலாஹுத்தீன். “நீங்கள் இந் நகரைக் கைப்பற்றியபோது இவர்களுக்கு என்ன செய்தீர்களோ, அதையே நான் உங்களுக்குச் செய்வேன். அவர்களைக் கொன்றீர்கள். கைதிகளாகச் சிறைப்பிடித்தீர்கள். இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்”, என்று குர்ஆன் வசனத்தின் பகுதியை முத்தாய்ப்பாகச் சொல்லிமுடித்தார்.
பிறகு பேலியன் சமாதானம் பேச வந்தான். வேறு வழியற்ற நிலையிலும் அவனது பேச்சு வீரத்துடன்தான் அமைந்திருந்தது. ‘சலுகையில்லை, நிபந்தனைகளுடன் சரணடைய வழியில்லை எனில் நாங்கள் வீரமரணம் எய்துவோம். முஸ்லிம்களாகிய உங்களுக்கு ஜெருசலத்தில் ஒன்றும் கிடைக்காமல் சாம்பலாக்குவோம்’ என்ற ரீதியில் அவனது பேச்சு அமைந்தது. அந்த முழு உரையையும் போரின் இதர விபரங்களையும் நிகழ்வுகளையும் இத் தொடரில் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.
சுல்தான் ஸலாஹுத்தீன் தம் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்தார். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்று ஒவ்வொருவருக்கும் அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. வெளியேற விரும்புபவர்கள் அதைச் செலுத்திவிட்டு வெளியேறலாம். முஸ்லிம் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நகரினுள் தங்கிவிட விரும்புபவர்கள், வரி செலுத்திவிட்டு கௌரவமுடன் தங்களது மதத்திலேயே தொடரலாம். மற்றவர்கள் போர் கைதிகளாகச் சிறைபிடிக்கப்படுவர் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. முதலாம் சிலுவை யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட அத்தனை கர்ண கொடூரங்களுக்கும் மிருகத்தனத்திற்கும் அரக்கத்தனத்திற்கும் நேர்மாறாக மக்களின் மானத்திற்கும் உயிருக்கும் பங்கமற்ற அமைதியான முறையில் நிகழ்வுகள் நடைபெற ஆரம்பித்தன.
சில வாரங்களுக்குமுன் சுல்தான் ஸலாஹுத்தீனின் படை ஹத்தினிலிருந்து அஸ்கலான் நோக்கித் திரும்பியதுமே மக்கள் அனைவருக்கும் அவரது இலக்குச் சந்தேகமின்றித் தெரிந்துபோய், சிரியாவிலிருந்தும் எகிப்திலிருந்தும் முஸ்லிம் கல்வியாளர்கள், ஆலிம்கள், காரீகள் என்று ஏராளமானோர் சாரிசாரியாக ஜெருசலத்தை நோக்கிக் கிளம்பி, வந்து சேர்ந்திருந்தார்கள். மெய்ப்படப்போகிறது கனவு! மீண்டும் நம் வசமாகப் போகிறது நம் புனித பூமி! நம் வாழ்நாளில் சித்திக்கப்போகிறது அதன் விடுதலை! என்று ஒவ்வொருவர் உள்ளத்திலும் பேரானந்தப் பெருமிதம்! இப்பொழுது அங்குக் களத்தில் குழுமியிருந்த அவர்கள் அனைவரின் நாவுகளும், ‘லா இலாஹா இல்லல்லாஹ்!’, ‘அல்லாஹுஅக்பர்!’ என்று தொடர்ந்து உரத்து முழங்கும் இறைஞ்சல் இரைச்சல் அக் களமெங்கும் பரவி, காற்றெல்லாம் மின்சாரம்.
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 2, 1187 - ரஜப் 27, ஹிஜ்ரீ 583. சரணடைந்தது ஜெருசலம்!
oOo
வருவார், இன்ஷா அல்லாஹ் ...
- நூருத்தீன்
< ஸலாஹுத்தீன் ஐயூபி (முன்னுரை)
http://www.satyamargam.com/articles/history/salahuddin-ayyubi/2676-salahuddeen-ayubi.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment