Monday, June 7, 2021

#பிரியாணி! / Senthilkumar Deenadhayalan

 பிரியாணி!

பிரியாணி இன்று எல்லோருக்கும், எப்போதும் கிடைக்கின்ற சாதாரண உணவாகி விட்ட போதிலும், ஒரு காலத்தில் அரிய உணவாக, எல்லோருக்கும், எப்போதும் கிட்டாததாகவே இருந்தது.

இஸ்லாமிய நண்பர்கள் வீட்டு திருமண விசேஷங்களிலும், பெரு நாள்களிலும் அது மற்றவர்களுக்கு கிடைத்தது! அதிலும் திருமணங்களுக்கு, வீட்டிலிருந்து யாராவது ஆண்கள் மட்டுமே செல்வார்கள். எனவே வீட்டிலிருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அப்போதும் கிடைக்காது!

ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில், நெருங்கிய நண்பர்களின் வீடுகளிலிருந்து வரும் பிரியாணியே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைத்தது.

அப்படி எங்கள் வீட்டிற்கு பிரியாணி தரும் அப்பாவின் மூன்று முக்கிய நண்பர்கள்

1. பொறையார் பக்ருதீன் மரைக்காயர்

2.நாகூர் ஒலியுல்லா அண்ணன்

3.காரைக்கால் கோட்டை மேட்டுத்தெரு உதுமான் நாநா.

பக்ருதீன் மரைக்காயர் அப்பாவின் பால்ய காலத்திலிருந்தே நெருங்கிய தண்பர். பெரு நாளன்று அப்பாவை மதிய உணவுக்கு அழைக்க நேரில் வருபவர், வரும்போதே சூடான பிரியாணியை எங்களுக்கு கொண்டு வந்து விடுவார். பொறையாரில் ஜெனரல் ஸ்டோர்ஸ் வைத்திருந்த அவர், தீபாவளி காலங்களில் அப்பாவுடன் சேர்ந்து வெடி கடை போட்டிருக்கிறார். பின் அந்தப் பாரம்பரியத்தை அவர் மகன் ரஷீது மரைக்காயர் தொடர்ந்தார்

நாகூர் ஒலியுல்லா அண்ணனும், காரைக்கால் உதுமான் நாநாவும் வாவா தர்கா ட்ரஸ்டின் அறங்காவலர் குடும்பத்தினர். அதற்கு சொந்தமாக வேலிக் கணக்கில் நிலங்கள் எங்கள் ஊரில் இருந்தன.

ஒலியுல்லா அண்ணன் வீட்டிலிருந்து ஒரு பச்சை நிற அலுமினியம் ஷேட் பெயின்ட் அடித்த அம்பாசிடர் காரில் நிறைய தூக்கு சட்டிகளிலும், அலுமினிய வட்டாக்களிலும், குத்தகைதாரர் வீடுகளுக்கு பிரியாணி வரும். நம் வீட்டிற்கு தனியாக ஒரு பாத்திரத்தில் கொடுத்து அனுப்புவார்.

மிக இளம் வயதிலேயே மறைந்து விட்ட ஒலியுல்லா அண்ணனின் பேரன் திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பின் தந்தையார் சென்ற போது, வயதானவங்களுக்கு கறி மெல்ல முடியாது என, கூடுதலாக பஞ்சு போன்று வெந்த, எலும்பில்லாத கறி வைத்து, வாஞ்சையுடன் அவரது மகன் உபசரித்ததாக அப்பா சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!

ஒல்லியான உருவமும், கருத்த பிரேமில் சிவப்பு ஷேடு கண்ணாடி அணிந்த உதுமான் அண்ணன் பெருநாளன்று தொழுகைக்கு போவாரா, உறவினர்கள் வீடுகளுக்கு சலாம் கொடுக்க போவாரா என்று தெரியாது.

ஆனால் ஒரு பெரிய தூக்குச் சட்டியில் பிரியாணியும், மற்றொரு பீங்கான் பாத்திரத்தில், கேக், ரொட்டி, அடுக்கு ஜாலர், கடல் பாசி போன்ற பலகாரங்களுடன் பஸ் பிடித்து நேரே எங்கள் வீட்டுக்கு வந்து விடுவார். சுவாரசியமான மற்றொரு விஷயம், அவருடைய தாயாரின் மற்றொரு பெயர் "செவத்த உம்மிணி!"

இன்றைக்கு எளிதாக கிடைக்கும் பிரியாணி அன்றைக்கு அரிதாக இருந்தது!

அன்றைக்கு கிடைத்த அந்த மனிதர்களின் உண்மையான அன்பும், நேசமும்தான்  இன்றைக்கு அரிதாக  இருக்கிறது.

=*=*=*=*=*=  =*=*=*=*=*    =*=*=*=*  =,*=*=

பொறையார், காரைக்கால், நாகூர் போன்ற கடற்கரையோர ஊர்களில் செய்யப்படும் தம் பிரியாணிக்கு, ஒரு தனிச்சுவை உண்டு!

அவை பிரியாணியில் மட்டுமல்ல!,  அதன் கூட வரும்  துணை உணவுகளிலும் உண்டு!  பொதுவாக இந்த ஊர் பிரியாணியுடன்  இனிப்பு, புளிப்பு, தயிர் பச்சடிகள்,  தாளிச்சா,  பீர்ணி போன்றவை வரும்!

புளிப்பு பச்சடி என்பது பெரும்பாலும் கத்தரிக்காயுடனோ, மாங்காயுடனோ, புளி, மிளகு சேர்க்கப் பட்ட வாய்க்கு ருசியான ஒரு பச்சடி!

 தாளிச்சா என்பது கத்தரி, உருளை, மாங்காய், கேரட்,  மாமிசத்தின் கொழுப்பு,  போன்றவை போட்ட, ஒரு பருப்புக் குழம்பு போன்றது தான்!   பிரியாணியில் ஊற்றி, பிசைந்து சாப்பிடலாம்!

பீர்ணி என்பது ஒரு வகை கெட்டியான பாயசம்! !  ஜவ்வரிசியிலிருந்து, கோதுமை ரவை வரை பல விதமான பீர்ணிகள் உண்டு!  ஒரு ஹெவி உணவான பிரியாணிக்கு, இது போன்ற செரிமானப் பாயசம் மிகவும் அவசியம்!

ரைத்தா என்ற தயிர்ப் பச்சடிகள் பல வகை உண்டு!  பிரியாணியுடன் குறைந்த பட்சம் தாளிச்சா, தயிர் பச்சடி, அதிகப் பட்சமாக மேற்ச் சொன்ன அனைத்துமோ வரும்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அது போல சிறு வயதில் பிரியாணி சாப்பிட்ட மற்றொரு இடம் திண்டுக்கல்!

அங்கே சித்தப்பாவும், அத்தையும், உறவினர்களும் இருந்தனர். நாங்கள் சென்றால் சித்தப்பா வீட்டில் கண்டிப்பாக பிரியாணி உண்டு. சித்தப்பா எதையும் ஹோட்டலில் வாங்கவோ, உண்ணவோ விரும்ப மாட்டார். வீட்டிலேயே தான் செய்ய வேண்டும்.

பிரியாணி செய்யும் அன்று அதி காலையிலேயே கிளம்பி கையில்,ஒயர் கூடை, பையுடன் கடைக்கு செல்வார்கள்.  ஊர்லருந்து புள்ளைங்க வந்திருக்காங்க, நல்ல கறியாப் போடுப்பா என்று கடைக்காரரிடம் கூறுவார்கள்.

பொதுவாக திண்டுக்கல்லில் ஆட்டுக் கறி நன்றாகவே இருக்கும்! சிறுமலை போன்ற பகுதிகளில் மேய்ந்து வருவதால் இயற்கையாகவே ஒரு ருசியும் மணமும் இருக்கும்.

பிரியாணிக்கு கறியும், எலும்பு குழம்பிற்கு நல்லி எலும்புகளும், இரவு சப்பாத்திக்கு சாப்ஸ்க்கு தனியாகவும், காய்கறி, இலைகளும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள்.

காலையில் தோசைக்கே ஒரு தண்ணி கறி குழம்பு இருக்கும். மதியம் பிரியாணி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்.  நல்லா சாப்டுங்க!  நம்மூர்ல கிடைக்காது என்று தாயினும் சாலப் பரிந்தூட்டுவார் சித்தப்பா!

அத்தை வீட்டில் பிரியாணி சமைப்பதில்லை. கடையில்தான்!  அவர்கள் வீடிருந்த பகுதியில் இரண்டு பிரபல பிரியாணிக் கடைகள் இருந்தன!

அவற்றில் ஒன்று, இன்றைக்கு உலகமெங்கும் கிளை பரப்பி இருக்கும் தலப்பாகட்டி பிரியாணி!

சந்துக்கடை பள்ளி வாசலிலிருந்து  கீழ ரத வீதிக்கு வரும் வழியில் ஒரு சிறிய பங்க் கடை! மாலை நேரம் மட்டும் தான். ஏழு மணி வாக்கில் இரண்டு பெரிய சட்டிகளில் பிரியாணியும் , தாளிச்சா, தயிர் வெங்காயம் சிறு சட்டிகளிலுமாக இரண்டு ரிக்ஷாவில் வந்து இறங்கும்.

பார்சல் மட்டும் தான்.  பின்னாளில் தான் அமர்ந்து சாப்பிடும் ஹோட்டலானது! ஏற்கனவே வந்து காத்திருக்கும் கூட்டத்தால் ஒரு மணி நேரத்தில் தீர்ந்து விடும்! லேட்டாக வந்து பிரியாணி கிடைக்காதவர்கள், அருகிலுள்ள கிருஷ்ணய்யர் கடையில் வெண்ணை மாவு தோசை சாப்பிட்டுப் போவார்கள்!

மற்றொரு கடை பங்காரு சாமி கடை! இங்கே அதிகாலை ஐந்து மணிக்கே சூடான பிரியாணி கிடைக்கும்!  அனேகமாக அதிகாலையில் பிரியாணி கிடைத்த ஒரே கடை இதுவாகத்தானிருக்கும்!

காலையில் மாமாவோ, அவரது சகோதரர் தங்கராஜ் மாமாவோ தூங்கிக் கொண்டிருக்கும் எங்களை எழுப்புவார்கள். எழுந்தால் எதிரே மண மணக்கும் சூடான பிரியாணி பொட்டலங்களில் காத்திருக்கும்.

பல் துலக்கி விட்டு வந்து ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான். இப்படியாக காலை எழுந்தவுடன் பிரியாணி, பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல காபி என்று வளர்ந்து வந்தோம் விடுமுறைகளில்!

சித்தப்பா, அத்தை மறைவுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தினர் சென்னைக்கு குடியேறிவிட்டதால், திண்டுக்கல்லுக்கான போக்கு வரத்து குறைந்தது

சென்ற ஆண்டு கொடைக்கானல் செல்லும் வழியில் திண்டுக்கல்லில் இரவு வேணு பிரியாணி சாப்பிட்டேன். பங்காரு சாமி கடை பிரியாணியை நினைவு படுத்தியது!

கும்பக்கரை அருவியில் குளித்து விட்டு நல்ல பசியுடன் பெரியகுளம் பவளம் தியேட்டருக்கு எதிரே ஒரு கடையில் பிரியாணி சாப்பிட்டேன். அருமையாக இருந்தது.

கடையின் பெயர் நினைவிலில்லை. ஆனால் கடை திருவாளர் தர்ம யுத்தத்திற்கு சொந்தமானது என்று கூறினார்கள்!

Senthilkumar Deenadhayalan



Senthilkumar 

No comments: