அலீ (ரலி) வரலாறு -- 3
===================
பரமனின்
செய்தி வந்து
பதிமூன்று
ஆண்டுகள் ஆயின
மதினா செல்லும்படி
மாநபிக்கு
ஆணை வந்தது
குறைஷி
எதிரிகள் ஒன்றுகூடி
கோமான்
நபியைக் கொல்வதற்கு
கொடும்
திட்டம் வகுத்தனர்
அனைவரும்
ஒன்றுசேர்ந்து
அல்லாஹ்வின்
தூதரை வெட்டி
அல்லாஹ்விடமே
அனுப்பிவிடலாம் என்று
ஆலோசனை
சொன்னான் அபூஜஹ்ல்
பல பேர் கைகளால் கொன்றால்
பழி யார்மீதும் விழாது என
பகன்றான்
அந்தப் பகைவன்
புத்திசாலித்தனமாக
கும்மிருட்டில்
கூடிநின்ற
குறைஷிக்
கொலைகாரர்கள்
அப்படியே
செய்துவிட
ஆர்வமாய் நின்றுகொண்டிருந்தனர்
என் போர்வையைப் போர்த்திக்கொண்டு
என் படுக்கையில் படுத்திருங்கள்
ஆபத்து
ஒன்றும் வராது
அல்லாஹ்
காப்பாற்றுவான் என்று
அலீயிடம்
சொன்னார்கள்
அண்ணல்
நபி
உயிர் விஷயம் எனும்போது
ஒருவருமே
ஒத்துக்கொள்ள மாட்டார்கள்
அலீ ஏற்றுக்கொண்டார் அந்த ஆலோசனையை
ஆர்வத்தோடும்
ஆசையோடும்
ஆருயிரைவிட
முக்கியம்
அண்ணல்
நபிகள் மட்டும்தான்
படுக்கையே
பலிபீடமாகலாம் என
பகுத்தறிவு
சொன்னாலும்
உயிர் முக்கியமல்ல
உம்மி நபிதான் முக்கியம் என்று
பாசம் சொன்னது
அலீயவர்கள்
மட்டுமல்ல
அன்புத்தோழர்கள்
அனைவருமே
அப்படித்தான்
நினைத்தார்கள்
இவ்வுலக
வரலாற்றில்
இறுதிநபி
வாழ்வில் மட்டுமே நிகழ்ந்த
இணையற்ற
அற்புதம் இது
ஆபத்தான
கடமையை நிறைவேற்றிய
அன்று இரவுதான்
அச்சம்
ஏதுமின்றி
அமைதியாக
உறங்கியதாக
அலீ சொன்னார்கள்!
அதுமட்டுமா?
மக்காவின்
மக்கள் கொடுத்திருந்த
அமானிதப்
பொருள்களையெல்லாம்
அலீயிடம்தான்
ஒப்படைத்திருந்தார்கள்
அண்ணல்
நபியவர்கள்!
இல்லத்தைவிட்டு
வெளியில் வந்த
இறுதி நபியவர்களை
வீட்டைச்சூழ்ந்திருந்த
விஷமிகள்
யாருமே
காண முடியாமல் செய்துவிட்டவன்
கருணைமிகு
ரஹ்மானே!
யாசீனை
ஓதிக்கொண்டு
யாருமறியாமல்
வெளியில் வந்து
கொல்லவந்த
கூட்டத்தை நோக்கி
காசிம்
நபி வீசிய ஒருபிடி மண்
கொடியவர்களின்
பார்வைக்குத் திரைபோட்டது
பக்கத்தில்
நின்றவர்களுக்கும் தெரியாமல்
மக்கத்து
நபி சென்றார்கள்
மதினாவை
நோக்கி!
கதவை உடைத்துக்கொண்டு உள்ளேபோய்
கயவர்கள்
ஏன் காசிம் நபியைக்
கொல்லாமல்
விட்டார்கள்?
அது அந்த அதர்மிகளுக்குள் இருந்த
தர்மம்!
நள்ளிரவில்
அடுத்தவர் வீட்டுக்குள் புகுவது
நாகரீகமல்ல
என்று நயவஞ்சகர்கள் நினைத்தார்கள்!
அப்படியே
சென்றாலும்
அத்தனை
பேருக்கும் அக்கொலையில்
பங்கு கிடைக்காது என
பகைவர்கள்
நினைத்தார்கள்!
அபூலஹப்
சொன்னபடி
அத்தனை
பேரும் அங்கே
அண்ணல்
நபியின் வீட்டுக்கதவை
ஆர்வத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்!
பொழுது
விடிந்துகொண்டிருந்தது
பெருமானார்
வெளியில் வரவில்லை!
பொறுமை
எல்லை கடந்தது
பொச்சரிப்பு
கொண்டவர்களுக்கு
பூட்டின்
துளை வழியே
வீட்டுக்குள்
பார்த்தான் ஒருவன்
பச்சைப்
போர்வை ஒன்றைப் போர்த்திக்கொண்டு
படுத்திருந்தார்
நாற்காலியில் ஒருவர்
உண்மை நபிதான் உறங்குகிறார் என
உதவாக்கரைகள்
நினைத்தார்கள்!
கத்திகள்
கொண்டும்
கத்திக்கொண்டும்
கயவர்கள்
பலர்
கதவைத்
தள்ளிக்கொண்டு
வீட்டுக்குள்
நுழைந்தார்கள்
காட்டுக்
கூச்சலில்
கண் விழித்தார்கள்
கண்ணான
அலீ!
அல்லாஹ்வின்
தூதருக்கு பதிலாக
அலீ அவர்கள் அமர்ந்திருக்கக் கண்டதும்
அதிர்ந்துபோனார்கள்
அறிவுகெட்ட
குறைஷியர்கள்!
முஹம்மது
எங்கே என்று
முகம் சிவக்கக் கேட்டார்கள்
அல்லாஹ்வே
அறிவான்
அவன் தூதர் எங்கே என்று!
எனக்கென்ன
தெரியும்
எம்பெருமான்
எங்கே என்று!
கதவுக்கு
வெளியே காவல் நின்ற
குறைஷிகள்
உங்களுக்குத் தெரியாதா?
வேதம் கொடுக்கப்பட்ட நபி
வெளியே
போனதை நீங்கள் பார்க்கவில்லையா? – என
வேண்டுமென்றே
கேட்டார்கள் விநயமாக!
கேள்வியில்
இருந்தது கேலி
குறைஷிகளுக்கு
வந்தது கோபம்
அலீயை இழுத்துச் சென்று
அல்லாஹ்வின்
ஆலயத்தில்
அடைத்துவைத்தார்கள்
கொஞ்ச நேரம்
அபூலஹபின்
அறிவுரை பேரில்
அலீ அவர்களை விட்டுவிட்டார்கள்!
முஸ்தஃபா
கொடுத்த வேலைகளை முடிக்க
மூன்று
நாளானது அலீ அவர்களுக்கு!
பிடியுங்கள்,
அடியுங்கள் என்ற
குறைஷியரின்
கோபத்தை
கொஞ்சமும்
பொருட்படுத்தவில்லை
கூர்மதிகொண்ட
அலீ!
அஹ்மதை
விட்டுவிட்டு
அலீயை தண்டிப்பதால்
ஆகப்போவது
ஒன்றுமில்லை என்று
அந்த அரேபியருக்கும் புரிந்துபோனது!
தொடரும், இன்ஷா அல்லாஹ்...
No comments:
Post a Comment