Wednesday, June 30, 2021

அலீ (ரலி) வரலாறு -- 5

 


அலீ (ரலி) வரலாறு -- 5

===================

நாகூர் ரூமி NagoreRumi

உஹதுப் போரில்

அலீயின் கையால்

அவ்வுலகம் சென்றவர்கள் ஏழுபேர்!

தீயவர்களின் தலைகளைக் கொய்தே முறிந்தது

அலீயாரின் அற்புதமான வாள்

அதைக்கண்ட அண்ணல் நபி

வீரர் அலீக்கு அளித்தார்கள் பரிசாக

தீயவர்களை துவம்சம் செய்யும்

தன்னுடைய வாளான துல்ஃபிகார்!

வாஞ்சை நபியின் வலது கையான

வீரர் அலீயின் வலது கையில் அடிபட்டிருந்தது

உஹதுப் போரில்

கட்கம்வரை கசிந்துகொண்டிருந்தது

காசிம் நபி மருகரின் ரத்தம்

இடது கையில் கொடியைக் கொடுங்கள் என்று

இம்மையிலும் மறுமையிலும்

என் கொடியை அவரே பிடித்திருப்பார் என

இன்னுயிர்த்தூதர் கூறினார்கள்

பள்ளத்தில் விழுந்திருந்த பயகம்பரைத் தூக்க

நீண்ட கரங்கள் இரண்டு

ஒன்று அபூபக்கருடையது

ஒன்று அலீயுடையது!

தரையில் நான்கு முறைகள் நான் சாய்ந்தேன்

தூக்கிவிட்டு எனக்கு சோபனம் சொன்னார்

ஒவ்வொரு முறையும் ஒருவர் என்றார்

உண்மை அலீ அண்ணல் நபியிடம்

அவர்தான் வானவர் ஜிப்ரயீல் என்றார்கள்

அண்ணல் நபிகளார்!

அன்னை ஆயிஷாமீது

அபாண்டம் சொல்லப்பட்டபோது

அண்ணல் நபிகள் அலீயிடமும்

ஆலோசனை கேட்டார்கள்

அடிமைப் பெண்ணைக் கேட்டால்

அந்த விபரம் தெரிந்துவிடும் என

அலீ சொன்னார்

ஆனால் அலீ சொன்ன பதிலானது

அன்னை ஆயிஷாவை காயப்படுத்தியது

பல ஆண்டுகளின் பகையாக அது

பற்பல வடிவமெடுத்தது

அன்னை ஆயிஷாவின் தூய்மையை

தூயோன் அல்லாஹ்வே தெரியப்படுத்தினான்

இந்த அக்கப்போருக்குப் பின்

ஆரம்பமாகியது அகழ்ப்போர்

அகழைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தனர் இருவர்

இக்ரிமா மற்றும் அம்ர் இப்னு அப்துவுத்

ஆயிரம் புரவி வீரர்களுக்கு இணயானவர் அம்ர் என

அரேபியாவில் பாடப்பட்ட புகழுக்குரியவர்

தொண்ணூறுகளில் இருந்த

தூய்மையான வீரர்

அவரது அறைகூவலை ஏற்றுக்கொண்டவர்

அலீ மட்டுமே

அண்ணலார்கூட வேண்டாம் என

ஆரம்பத்தில் சொன்னார்கள்

இறுதியில் இறைத்தூதர்

அலீயின் கையில் வாளையும்

தலையில் தலைப்பாகையும் வைத்தார்கள்

என் நண்பர் அபூதாலிபின் மகனா நீ

நான் உன்னைக் கொல்லமாட்டேன்

என்றார் அம்ர்

நான் உன்னைக் கொல்வேன்

என்றார் அலீ

அதன்பின்னர் அம்ர்

அலீயை நோக்கிப் பாய்ந்தார்

சமர் செய்பவர்கள்

சமமாக நிற்கவேண்டும் என

அலீ சொன்னார்

குதிரையிலிருந்து கீழிறங்கிய அம்ர்

குதிரையையும் ஒரேவெட்டாய் வெட்டினார்

வெல்லுவது அல்லது வீழ்வது என

அர்த்தம் காட்டினார் அம்ர்

அலீயின்மீதும் வாளை வீசினார் அம்ர்

அலீ அதைத்தடுத்து அவரை வெட்டினார்

அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்தில்

அலீயின் வெற்றியை

அறிந்துகொண்டார்கள் அண்ணல் நபி

அதன்பின்னர்தான்

லா பத்தா இல்லா அலீ

லா சைஃப இல்லா துல்ஃபிகார் --

அலீயைப் போன்ற வீரரில்லை

துல்ஃபிகாரைப் போன்ற வாளுமில்லை

என்ற முதுமொழி உருவானது

அம்ரின் மானம் தெரியுமென்பதால்

அவரின் போராபரணங்களை எடுக்கவில்லை என்றார்

பகைவனின் மானம் காத்த பெருந்தகை

தொடரும், இன்ஷா அல்லாஹ்...



நாகூர் ருமி

No comments: