Wednesday, June 30, 2021

அலீ (ரலி) வரலாறு -- 4


அலீ (ரலி) வரலாறு -- 4

Nagore Rumi

=====================

பகலெல்லாம் பதுங்கிப் பதுங்கி

இரவோடு இரவாக

கால்களெல்லாம் புண்ணாக

கால்நடையாகவே அலீ

காசிம் நபியைக் காணச்சென்றார்கள்

மதினா நோக்கி!

குபா வந்த அலீயை

கட்டியணைத்துக்கொண்டார்கள்

காசிம் நபி

கால் புண்ணுக்கும் தம் கையால்

கட்டிவிட்டார்கள் மருந்தை!

மதினா நகர்தனிலே

மாநபி கட்டிய பள்ளிக்கு

மண்ணும் கல்லும்

சுமந்து சென்றார்கள் அருமை அலீ

அல்லாஹ்வின் இல்லத்துக்கு அருகிலேயே

அவர்கள் தங்கவும் வீடுகள் கட்டிக்கொண்டனர்

பத்ருப் போரில்

கால்கள் வெட்டப்பட்ட உபைதாவை

தோள்களில் சுமந்து சென்றார் அலீ

வீரர் அலீக்கு அதுதான்

போரின் முதல் அனுபவம் -- ஆனால்

பகைவர்களில் பாதிப்பேர்

இரையானது அலீயின் வாளுக்கே!

அடுத்தடுத்த போர்களில்

அண்ணலின் கொடியை

அணைத்துப் பிடித்தவரும் அவரே!

அருமை நபியின் மகளார் ஃபாத்திமாவை மணக்க

அபூபக்கரும் உமரும்கூட ஆர்வம் காட்டினர்

அல்லாஹ்வின் உத்தரவு வரட்டும் என்றார்கள்

அண்ணல் நபிகள்

அலீயும் சென்று நாணத்துடன் கேட்டார்

அதே விஷயத்தை

அக்கணமே ஏற்றுக்கொண்டார்கள்

அருமை நபிபெருமான்

அல்லாஹ்வின் அறிவிப்பும்

அதுவே என்றார்கள்

தீர்மானிக்கப்பட்ட திருமணம் பற்றி

பள்ளியில் அறிவித்தார்கள் பயகம்பர்

மக்களை அழைக்க

கந்தர்வக்குரலோன் பிலாலைப் பணித்தார்கள்

காத்தமுன் நபி

மக்களிடம் சொன்ன பிறகு

மகளாரிடம் சென்றார்கள் -- அவர்

மனதில் உள்ளதை அறிய

மௌனமே ஃபாத்திமாவின் சம்மதமானது

அலீயிடம் உள்ள பொருள்கள் என்னென்னவென்று

அண்ணல் நபி கேட்டார்கள்

ஒரு குதிரை

ஐந்து திர்ஹம் மதிப்புள்ள இரும்பு அங்கி

ஒரு வாள்

ஒரு ஆட்டுத்தோல்

ஒரு போர்வை

என்றார் அலீ

வாளை வைத்துக்கொள்ளுங்கள்

போரில் அது பயன்படும்

இரும்பு அங்கி தேவையில்லை

உம் கையே உமக்குக் கேடயம் என

உம்மி நபி சொன்னார்கள்

ஐந்து திர்ஹம் மதிப்புள்ள அலீயின் அங்கியை

ஐநூறு திர்ஹமுக்கு வாங்கினார்

வள்ளல் உஸ்மான்

என்னைவிட இது

உங்களுக்கே தேவைப்படும் என்று

வாங்கிய அங்கியையும்

அலீயிடமே திருப்பிக் கொடுத்தார்!

வள்ளல் உஸ்மான்!

திருநபி மகளார்

திருமணத்திற்கு வேண்டிய பொருள்களை

வாங்கிவந்தார் பிரிய பிலால்

கூடை நிறைய பேரீச்சம் பழம்தான்

கடிமண விருந்து!

அவரவரர்க்கு வேண்டியதை

அள்ளிக்கொள்ளலாம் என்றதும்

ஆர்வமுடன் வந்தனர் விருந்தினர்

அதைப்பார்த்து சிரித்தார்கள்

அழகு நபிகளார்!

அலீ அவர்களின் வீட்டுக்கு

அழைத்துச் சென்றனர் அன்பு ஃபாத்திமாவை

அன்பு மனைவி கதீஜாவை எண்ணி

அன்ணல் நபியின் கண்கள் கசிந்தன!

எல்லாம் வல்ல இறைவா!

இருவரின் உறவையும்

இவர்களின் குழந்தைகளையும்

ஆசீர்வதிப்பாயாகஎன்று

பிரார்த்தனை செய்தார்கள்

புண்ணிய நபி

நான் வரும்வரை

ஃபாத்திமாவுடன் பேசவேண்டாம் என

பாசமுடன் கூறிச் சென்றார்கள் பயகம்பர்!

பின் ஒரு குவளைத்தண்ணீரில் தன்

புனித விரல்களை நனைத்த நாயகம்

தம்பதியினரின் தலையில்

தண்ணீரைத் தெளித்து ஆசீர்வதித்தார்கள்

தொடரும், இன்ஷா அல்லாஹ்...

 

No comments: