Saturday, December 5, 2020

அதிகாலை பொழுது ....

 

அதிகாலை பொழுது ....

இரவெனும் மங்கை

சில்லென குளிரும்

இருளெனும் போர்வையை

மெதுவாக விலக்குகிறாள்  ....

பன்னிற வானில்

இருட்டில் உலவும்

நிலா நாயகியை

பொன்னிற கதிர்களால்

சூரிய நாயகன்

கனிவாய் உரசுகிறான் ....

நீள்கை விரிந்து

கதிர்கள் நீள்கையில்

அனல் கற்றைகளால்

மேகத்திற்கு வகிடெடுத்து

வெளிச்ச ஆடைகளை

பூமிக்கு அணிவிக்கிறான் ....

செடிகளின் காம்புகளிலாடும்

மலர்களின் முகங்களை

வருடிய பனித்துளிகள்

நாணத்தால் உலர்கிறது

இதழ்கள் மூடி

உறங்கிய மொட்டுகளோ

ஓசையின்றி மலர்கிறது ....

வண்ண இலைகளாடும்

சோலைகளில் துயிலுற்ற

காற்று எழுகிறது

கடற்கரை மணலில்

வெண் நுரை பொங்க

அலைகள் கோலமிடுகிறது ....

கரும்புகை சிந்திடும்

கனரக மென்ரக

வாகனங்களின் இரைச்சலில்

சிலிர்த்து எழுந்த பறவைகள்

கூடுகளை பிரிந்து சிறகடிக்கிறது ....

வணக்க வழிபாடுகள் முடிந்து

கைகள் வீசியும்

கால்கள் விரித்தும்

விருந்தையும் மருந்தையும்

நேசிக்கும் மனிதர்கள்

குதிகாலை அசைத்து

அதிகாலை வேளையில்

நடைப் பயிற்சியுறுகிறார்கள்  ....

உழுதிடும் விவசாயிகள்

நெய்திடும் நெசவாளிகள்

வலையிடும் மீனவர்கள்

விலையிடும் வியாபாரிகள்

உலையிடும் பெண்மணிகள்

வியர்த்திடும் தொழிலாளிகள்

சீருடை மாணாக்கர்கள்

பன்முக மனிதர்கள்

சாலைகளை ஆக்கிரமிக்கிறார்கள் ....

வினாடிகளும் நிமிடங்களும்

உயிரினங்களை துரத்துகிறது

வெயிலும் மழையும்

வானிலைக்கு தோரணமிடுகிறது

மென்மையான அதிகாலை

கைகளசைத்து நகர்ந்து

தன்மையான மாற்றங்களால்

இறைவனின் கட்டளைகளை

நிறைவோடு நிகழ்த்துகிறது ....

அப்துல் கபூர்

04.12.2020  ....


Abdul Gafoor is in Kampala, Uganda.




No comments: