Thursday, April 2, 2020

"தப்லீக்" என்றால் என்ன?

Kanchi Abdul Rauf Baqavi
"தப்லீக்" என்றால் என்ன?

தப்லீக் இயக்கம் என்பது என்ன ?
அது செய்யும் பணிகள் தான் என்ன?

நான் தப்லீக் இயக்கத்தைச் சேர்ந்தவனல்லன்.ஆனாலும் தப்லீக் பற்றி சில விளக்கங்களை எதார்த்த நிலைகளின் அடிப்படையில் இங்கு பதிவிட்டுள்ளேன். அவ்வளவு தான்.

நான் என்னை அடையாளப்படுத்திக் கொள்வது அஹ்லுஸ் சுன்னத் ஜமாஅத் என்பதாகவே.

சுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைகளை இட்டவர்கள் மத்ஹபுகளின் மகத்தான இமாம்கள். அதை ஆன்மீகப் பேரியக்கமாக வளர்த்தவர்கள் இறைநேசச் செல்வர்கள்.
அவர்களைப் பற்றிய பதிவுகள் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்து இடப்படும்.

தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள "தப்லீக்"என்ற சொல்லின் பொருள் என்ன?" என்பது பலருடைய உள்ளத்திலும் உள்ள கேள்வி.

.
"பலாக்" என்னும் வேர்ச் சொல்லிலிருந்து
பிறந்தது தான் இந்த அரபுமொழிச் சொல்‌‌. ‌ ஒருவர் ஒரு செய்தியை பிறரிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு "தப்லீக்"என்று சொல்வார்கள். எனவே இச்சொல்லுக்கு "எடுத்துரைத்தல்" என்றும் பொருள் கொள்ளலாம்.

"பல்லக" என்பது இதிலிருந்து கிளைத்த கடந்த கால வினைச் சொல் ஆகும். செய்தியைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவரை, செய்தியை எடுத்துரைப்பவரை "முபல்லிக்" என்பர்‌. இந்தச் சொல்லும் அந்த "பலாக்" எனும் சொல்லி இருந்து பிறந்ததே.

இஸ்லாம் என்பது "வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிதல்" என்றும் " அப்படிக் கீழ்ப்படிவதின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி" என்றும் பொருள்படும்.

இந்த அமைதிக்கான (இஸ்லாத்தின்) செய்தியை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது அல்லது இந்தச் செய்தியை மக்களிடம் எடுத்துரைப்பது தான்" அல் பலாக்"அல்லது " தப்லீக்" ஆகும்‌. எனவே இச் சொல்லுக்கு "எடுத்துரைத்தல்" என்றும் பொருள் கொள்ளலாம்‌.

இந்த தப்லீக் பணி இருவகைப்படும்‌. ஒன்று இஸ்லாத்தை அறியாத பிற சமுதாய மக்களிடம் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துரைத்தல்‌. இதற்கு "தஃவா" - (இறைசெய்தியை எடுத்துரைத்து அதன் பக்கம் அழைத்தல்) என்று கூறுவர்.

இன்னொன்று - இஸ்லாமியர்களாயிருந்தும் அதன்படி தம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் அதன் ஒழுக்கங்களைத் தம் நடைமுறை வாழ்வில் பின்பற்றாமல் ஓர் ஒழுங்கு முறையின்றி வாழ்பவர்களுக்கு இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை, அதன் நல்லொழுக்கங்களை நினைவு படுத்தி அவற்றைப் பின்பற்றும் படி எடுத்துரைத்தல். இதற்கு "இஸ்லாஹ் அல்லது சீர்திருத்தம் என்று பெயர்.

இந்த இரணாடாம் வகையான சீர்திருத்தப் பணியைத் தான் தற்போது ஊடகங்களில் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் தப்லீக் இயக்கம் செய்து வருகிறது.

அதிலும் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தைப் பின்பற்றும்படி தப்லீக் இயக்கம் கூறவில்லை.

சில துறைகளோடு அதன் பிரசாரம் மட்டுப்பட்டு விடுகின்றது.

அவர்கள் தம் முஸ்லிம் சகோதரர்களிடம் எடுத்துரைக்கும் இஸ்லாத்தின் அம்சங்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

"தப்லீக் ஜமாஅத் ( எடுத்துரைக்கும் குழு அல்லது இயக்கம்) எடுத்துரைப்பது இஸ்லாத்தின் அம்சங்கள் ஒரு சிலவே என்றாலும் அந்த சில அம்சங்களைப் பின்பற்றினாலே போதும், முஸ்லிம்களின் வாழ்வு பெருமளவிற்கு சீர்திருந்தி விடும்" என்பதே அந்த இயக்கத்தினரின் வாதம்.

மேலும் தப்லீக் இயக்க ஊழியர்கள் இந்தப் பணியையே "தஃவா" என்று சொல்வார்கள்‌‌. ஆனால் அவர்களிடம் அதன் கருத்து முஸ்லிம் சமூக சீர்திருத்தம் மட்டும் தான்.

உண்மையில் தப்லீக் என்கிற பெரும் பணியில்- இஸ்லாஹ் என்கிற ஒரு வகையில் உள்ள சில அம்சங்களை நடைமுறைப் படுத்துவது மட்டுமே அவர்கள் செய்யும் பணியாகும்.

அவர்கள் இறைதியானம், நல்லொழுக்கங்கள், இறைவழிபாடுகள், மன்றாட்டத்துடன் கூடிய பிரார்த்தனைகள் ஆகிய நற் செயல்களை வலியுறுத்துகிறார்கள்.

அடுத்து முதியவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், பலவீனர்களுக்கும் ஏழைஎளியவர்களுக்கும் தார்மீக உதவிகள் புரிய வேண்டும் என்றும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றிட வேண்டும் என்றும் இத்தகைய மக்கள் சேவைகளின் வாயிலாகவே நாம் இறைவனை அடைந்திட முடியும் என்றும் சக முஸ்லிம்களிடம் பிரசாரம் செய்கிறார்கள்.
.
அவர்கள் வலியுறுத்தும் அந்த அம்சங்களை ஆறு விதிகளாகப் பகுத்து அவற்றை
அவர்கள் "சே பாத்" "ஆறு அம்ச திட்டம்" என்று அழைக்கின்றனர்.

இவைதாம் அந்த ஆறு அம்சங்கள்:

1. கலிமா- இறைநம்பிக்கையை மொழிதல்
2. தொழுகை
3. மார்க்க அறிவைக் கற்றலும் இறைதியானமும்
4. சக மனிதர்களை கண்ணியப் படுத்தல்
5. தூய எண்ணம்
6 இறைவனின் பக்கம் திரும்பிவரும்படி சக முஸ்லிம்களை அழைத்தல்‌

இவற்றைத் தான் தப்லீக் இயக்கத்தினர் பரப்புரை செய்து வருகிறார்களே தவிர வேறொன்றுமில்லை.

Kanchi Abdul Rauf Baqavi

No comments: