அழியா அற்புதம் அல் குர்ஆன்
A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil., Ph.D.
(உதவிப் பேராசிரியர், அரபித் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)
உலகம் தோன்றியது முதல் இன்று வரை எத்தனையோ மதங்கள் மனிதர்களால் பின்பற்றப்பட்டிருக்கின்றன: பின்பற்றப்பட்டும் வருகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை, ஒரு வேதத்தையே வாழ்வியல் நெறியாக கொண்டவை. ஆனால் அவற்றுள் எந்த வேதமும் இன்று வரை நிலைத்து நின்றதாக சரித்திரமோ, சான்றுகளோ இல்லை. அப்படி இருப்பதாக கூறப்படக்கூடிய வேதங்களும் திரிக்கப்பட்ட, புனையப்பட்ட, எழுத்துகள் மாற்றப்பட்ட, கருத்துகள் சிதைக்கப்பட்ட குறைப் பிரதிகளாகவே உலா வருகின்றனவே தவிர அவற்றின் அசல் மூலத்தை கொண்டதாக இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அருள்மறை அல் குர்ஆன் நமது கவனத்தை ஈர்க்கிறது. எவ்வாறு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதோ, அதே வடிவில், அதே எழுத்துக்களோடு, அதே கருத்துக்களோடு இன்றும் நிலைத்து நிற்கின்றது அல் குர்ஆன். மற்ற வேதங்களெல்லாம் காலத்துக்கேற்ப, நாட்டுக்கேற்ப, மக்களுக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்ட நிலையில், பல காலங்களைக் கடந்தும் ஒரு புள்ளி கூட மாற்றப்படாமல் அப்படியே உள்ளது அருள்மறை. காலத்தால் மாற்ற முடியாத எந்தக் காலத்திலும் வளைந்துக் கொடுக்காத, எல்லாக் காலத்திற்கும் ஒத்து வருகின்ற ஒரு அற்புத படைப்பாக விளங்குகிறது. இது மாபெரும் அற்புதம் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமேயில்லை.
ஏனெனில் அல்குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் அருள்மறை மட்டுமே. இதைக் காணும் மாற்று மதச் சகோதரர்கள் கூட இதுவல்லவா பெரும் அற்புதம் என்று வியப்படைகின்றனர்.
இது மட்டுமல்ல, நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன் 15:9) என்ற இறைவாக்கிற்கு ஒப்ப, உலகெங்கும் பெரும்பாலான மக்களால் மனனம் செய்யப்பட்ட, மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் அல்குர்ஆன் ஒன்று மட்டுமே என்பது நம்மை மேலும் ஆச்சரியப்படுத்தும் ஒரு செய்தியாகும்.
அனைத்து நாடுகளிலும், பல்தரப்பட்ட மொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரே வேதம் அல்குர்ஆன். உலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது.
மனிதனால் கலப்படம் செய்ய முடியாத மாசுப்படுத்தப்படாத வேதம் அல்குர்ஆன் மட்டுமே என்பதில் சந்தேகமேயில்லை. அது அரபு மொழியில் மிக தரமான இலக்கியத்தில் அமைந்துள்ள அதே வேளையில், பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்பது ஆச்சரியமான உண்மையாகும் என்று மொழிகின்றனர் மொழி வல்லுனர்கள்.
அருள்மறையின் சிறப்புகளை இமாம் ஷரஃபுத்தீன் பூஸிரி (ரஹ்) அவர்கள் தனது கஸீததுல் புர்தாவில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
آيات حق من الرحمن محدثة قديمة صفة الموصوف بالقدم
لم تقترن بزمان وهي تخبرنا عن المعاد وعن عاد وعن ارم
'இறைவனின் சத்திய வசனங்கள் (வரி மற்றும் ஒலி அமைப்பில்) புதியவை. ஆனால் பூர்வீகம் எனும் தன்மையில் பழமையானவை. அவை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (சொந்தமானதாக) இணையவில்லை. எனினும், அவை (முற்காலத்தில் வாழ்ந்த) ஆது கூட்டம் குறித்தும், (ஷத்தாத் என்பவர் கட்டிய) இரம் எனும் நகரம் குறித்தும், (பிற்காலத்தில் வரவிருக்கும்) மறுமை நாள் குறித்தும் அறிவிக்கின்றன'.
மேற்காணும் அடிகளில் இமாம் அவர்கள் அருள்மறையின் தனிப்பெரும் சிறப்புகளை எளிதாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். அருள்மறையின் வசனங்கள் நமக்கு புதிதாகத் தோன்றலாம், ஆனால் அவை இறைவனின் சந்நிதியில் ஆதியிலிருந்து வியாபித்திருப்பவை. அதுமட்டுமல்ல, இறைவசனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சொந்தமனைவையல்ல, ஆனாலும் இப்பூவுலகம் படைக்கப்பட்டது முதல் மறுமையில் மனிதர்கள் எழுப்பப்படும் செய்தி வரை அனைத்து வகையான விஷயங்களையும் அந்த இறைவசனங்கள் உள்ளடக்கியிருக்கின்றன. மேலும் இமாம் அவர்கள் அருள்மறையை சிலாகித்துப் பாடுகிறார்கள்.
دامت لدينا ففاقت كل معجزة من النبيين إذ جاءت لم تدم
محكمات فما يبقين من شبه لذي شقاق ولا يبغين من حكم
'ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் நிலைத்து நிற்கவில்லை. (ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட) அற்புதமான இந்த இறைவசனங்கள் (காலம் காலமாக) நிலைத்து நின்று விட்டன'.
'இந்த திருவசனங்கள் யாவும் (அனைத்து விஷயத்திலும்) உறுதியானவையாக இருப்பதால், எந்த ஒரு சந்தேகத்திற்கும் கொஞ்சம் கூட இடம் கொடுக்க வில்லை. அதுமட்டுமல்ல, தனக்கு சாதகமாக தீர்ப்பு சொல்ல எந்த ஒரு நீதிபதியையும் அவை தேடவில்லை'.
மேற்காணும் பைத்துகளில் அருள்மறையின் அற்புதமான அழியாத்தன்மையை இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் புகழ்கிறார்கள். உலகிற்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான நபிமார்கள் தமது சமுதாயத்திற்கு சட்ட ரீதியாக வழிகாட்ட ஒரு வேதத்தையோ அல்லது சுஹுஃபுகளையோ அல்லாஹ் வழங்கியிருந்தான். அது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் நபித்துவத்தை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறுப்பட்ட அற்புதங்களையும் அல்லாஹ் கொடுத்திருந்தான். ஆனால் அந்த அற்புதங்கள் யாவும் இன்றுவரை நிலைத்து நிற்கவில்லை. அதனுடைய சுவடுகளைக் கூட நம்மால் காண இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அற்புதமான இந்த அல்குர்ஆன் இன்றுவரை நீடித்து நிலைத்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் யுகமுடிவுநாள் வரை நீடித்து நிற்கும்.
அதே நேரத்தில், அதனுடைய வசனங்களோ, கருத்துகளோ நீர்த்துபோய்விடவில்லை. இன்றும் நிலைத்து நிற்கின்றன. யாராலும் குறைகளைக் காணஇயலவில்லை. அதுமட்டுமல்லாமல், தனக்கு சாதகமாக வாதிட எந்தவொரு நீதிபதியையும் அது தேடவும் இல்லை என அருள்மறையின் தனிப்பெரும் சிறப்புகளைப்பற்றி இமாம் அவர்கள் விளக்குகிறார்கள்.
அடுத்த வரிகளில், அருள்மறையின் உச்சக்கட்ட தனித்தன்மைகளை பாங்காக விவரிக்கிறார்கள் இமாம் அவர்கள்.
ما حوربت قط إلا عاد من حرب أعدى الأعادي إليها ملقي السلم
ردت بلاغتها دعوى معارضها رد الغيور يدى الجاني عن الحرم
'இந்த வசனங்களுக்கு எதிராக (கருத்துகளைக் கொண்டு வந்து) போர்புரிந்த கடுமையான எதிரியும், இறுதியில் (தனது தோல்வியை ஒப்புக்கொண்டு) சமாதானமாகியே போயிருக்கிறான்'.
'(அதுமட்டுமல்லாமல்) மானமிக்க ஒருவன் தன் (குடும்பப்) பெண்களைத் தீய எண்ணத்துடன் தீண்ட வரும் காமுகனின் கரத்தைத் தட்டி விடுவது போன்று, இந்த அருள்மறையின் இலக்கிய நயம், தர்க்கம் செய்ய வருபவனின் தர்க்கத்தையும் இல்லாமாலாக்கி விடுகிறது'.
மேற்காணும் அடிகளில், அருள்மறையின் உச்சக்கட்ட அற்புதத்தன்மையை அழகாக விளக்குகிறார்கள் இமாம் அவர்கள். இந்த அருள்மறைக்கு எதிராக வாதம் புரிந்த யாரும் வென்றதாக சரித்திரமில்லை. அப்படி வாதம் புரிய வந்த பலரும் மண்ணைக்கவ்வியே சென்றிருக்கிறார்கள். வல்லான் அல்லாஹ் தஆலா அருள்மறையில் சவால் விடுகிறான்.
இன்னும் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24).
மேலும் ஜின் வர்க்கமும், மனித இனமும் சேர்ந்தாலும் இதுபோன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வரவே முடியாது என அறுதியிட்டுக் கூறுகிறான்.
'இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது' என்று (நபியே) நீர் கூறும். (அல்குர்ஆன் 17:88).
கண்ணுக்குத் தெரிகின்ற மனிதக் கூட்டங்களும், கண்ணுக்குத் தெரியாத ஜின் வர்க்கமும் ஒன்றாய் சேர்ந்து அல்குர்ஆனைப் போல் ஒரு அத்தியாயத்தை உருவாக்க முடியாது என்று அல்குர்ஆன் இடும் சவாலுக்கு யாராலும் பதில் தரமுடியாமல் போனது மாபெரும் ஆச்சரியம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமேயில்லை.
இத்தனைக்கும், அருள்மறை இறங்கிய காலத்தில் வாழ்ந்த அரபியர்கள் அரபி மொழியில் மிகவும் பாண்டித்யம் பெற்றவர்கள். மிக எளிதான முறையில் அழகிய வார்த்தைகளைக் கொண்டு கருத்துச் செறிவுள்ள கவிதைகளைப் படைப்பதில் வல்லவர்கள். அப்படிப்பட்ட அரபியர்களே, அருள்மறையின் கருத்துக் கோர்வையையும், வார்த்தை நயத்தையும், மொழி வளத்தையும் கண்டு மிரண்டு போயினர்.
அருள்மறையைப் போன்ற நகல்களைக் கொண்டு வர முயன்று தோற்று ஓடினர். தங்கள் தோல்விகளை ஒப்புக்கொண்ட பலரும் இறுதியில் இஸ்லாத்தைத் தழுவினர். அல்லாஹ் சொல்வது போன்று ஒரு வசனம் என்ன, ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை. அதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது 'பலாகா' எனப்படும் இலக்கிய நயமேயாகும். இமாம் பூஸிரி (ரஹ்) அவர்கள் இந்த இலக்கிய நயத்தை ஒரு ரோஷமிக்க மனிதனோடு ஒப்பிட்டுள்ளார்கள். எவ்வாறு ஒரு மனிதன் தன் குடும்பப்பெண்களின் மானத்தையும், கற்பையும் காக்க போராடுவானோ, அது போன்று இந்த இலக்கிய நயம் அருள்மறையின் தனித்தன்மையை காக்கப் போராடுகிறது என அருமையாக ஒப்பிட்டுள்ளார்கள்.
புர்தா ஷரீஃபு உடைய இத்தனை பைத்துகளை இங்கு குறிப்பிடக் காரணம் அருள்மறையின் சிறப்புகளை விளக்க மட்டுமல்ல! புர்தாவை 'புருடா' என்று உளறிக்கொண்டிருக்கும் சில குறைமதியாளர்கள் புர்தா ஷரீஃப் உடைய உண்மையான உள்ளடக்கத்தை உணர வேண்டும் என்பதுமாகும். இந்த பைத்துகளை பொருளறிந்து ஓதும்போதெல்லாம் நமது உள்ளங்கள் இலங்கும், ஒளி பெறும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அருள்மறை குறித்து புகழப்பட்ட பைத்துகளை ஓதினாலே உள்ளம் இலங்கும் எனில், அருள்மறையை தொடர்ந்து ஓதிவந்தால் எப்படிப்பட்ட அந்தஸ்து கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அருள்மறையை ஓதிய பின்புதான் இறைவன் மீது நம்பிக்கையும், ஈமானும் அதிகரிக்கின்றனது என்பர் சிலர்;. அதைத்தான் அல்லாஹ்வும் அருள்மறையில் குறிப்பிடுகிறான்.
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால் அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும். இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (அல்குர்ஆன் 8:2).
மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று மனிதனின் சுயமரியாதையை காக்கும் அரணாக விளங்குகின்றது இந்த அருள்மறை. தனி மனித உரிமைகளை அல்குர்ஆன் வலியுறுத்துவது போல் இதுவரை எந்த முற்போக்காளரும் வலியுறுத்தவில்லை.
அல்குர்ஆன் மனிதனின் சிந்தனையை தூண்டுவது போல், வேறு எந்த வேதமும் தூண்டுவதில்லை. அல்குர்ஆன் ஒன்றுதான் தேசியம், பிராந்தியம், இனம், மொழி ஆகிய உணர்வுகளுக்குப்பால் மனிதர்களை ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுத்துகிறது. மனித நேயத்திற்கு உண்மையான விளக்கமளிப்பது அல்குர்ஆன் மட்டுமே. அதுமட்டுமல்ல, அல்குர்ஆன் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கின்ற புரட்சிகளைப் போல் வேறு எந்த புரட்சியாளரும் இதுவரை தோற்றுவிக்கவில்லை, தோற்றுவிக்கவும் முடியாது.
அனைத்துலக வல்லரசுகளும் தடை செய்யத் துடிக்கும் ஒரு நூல் உள்ளது என்றால் அது அல்குர்ஆன் ஒன்றே. மேலை நாட்டு அறிஞர் பெருமக்கள் சிலர் கூட உலக அமைதிக்கு அல்குர்ஆன் சொல்லும் தீர்வுகள் தான் தீர்க்க தரிசனம் மிக்கவை என்கின்றனர். குர்ஆன் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்களை விட மேலான சட்டத்திட்டங்களை யாராலும் படைக்க முடியாது என்பது வெள்ளிடை மலை. பெண்களுக்கு கௌரவம், கண்ணியம், மரியாதையை அல்குர்ஆன் வழங்குவது போல் வேறு எந்த வேதமும் வழங்கவில்லை.
மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளுக்கும் அவசியமாக வழிகாட்டலை அல்குர்ஆனைப்போல் வேறு எந்த வேதத்தாலும் வழங்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற உயர்ந்த தத்துவத்தை, அல்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் தெளிவாக எடுத்துரைக்கவில்லை.
அதற்கு அடிப்படை காரணம், அல்குர்ஆனில் மட்டும் தான் இறைவனே முழுக்க முழுக்க பேசுகின்றான். அது மட்டும்தான் இறைவன் மட்டும் பேசும் இறைவேதமாக இருக்கின்றது. மற்ற வேதங்கள் எல்லாம் மனிதர்களால் தொகுக்கப்பட்ட, மனிதக்கருத்துகள் சொருகப்பட்டவையாக உள்ளன. இதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது. குர்ஆன் மக்களுடன் பேசுவது போல் மற்ற எந்த வேதமும் பேசவில்லை.
மேற்கண்ட இன்னும் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று போற்றப்படுகின்றது. முரண்பாடில்லாத ஒரே வேதம் அல்குர்ஆன் மட்டுமே. ஒரு எழுத்து, ஒரு புள்ளி கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது. இவ்வுளவு ஏன், அல்குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்புதம்தான்.
குறிப்பிட்ட எண்களுக்குள்ளே முழுவதும் கட்டமைக்கப்பட்டுள்ள, படிக்கப் படிக்க தெவிட்டாத, ஒவ்வொரு நாளும் புதுப்புது அர்த்தங்கள் தரக்கூடிய ஒரு அபூர்வ நூல் இது. அருள்மறையை ஓதுவதே ஒரு வணக்கம்! ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து முதல் எழுநூறு வரை அடியார்களுக்கு நன்மைகளை வாரிவழங்கக்கூடிய புண்ணிய வேதம் இது.
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கோணத்திலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அழியா அற்புதம் இந்த அருள்மறை. இன்னும் சொல்லப்படாத நம் கற்பனைக்கு எட்டாத ஆயிரமாயிரம் அற்புதங்கள் அதில் ஒளிந்துக் கிடக்கின்றன.
அந்த அற்புதம் இறங்கிய மாதம் இந்த புனிதமான ரமளான்! ஆனால் இந்த ரமளான் மற்ற ரமளான்களைப் போல் இல்லை! கோரோனா வைரஸின் காரணமாக ஊரும் அடங்கி உள்ளது! உலகும் அடங்கி உள்ளது! எனினும், குர்ஆன் ஓதும் ஓசை நிச்சயம் அடங்கக்கூடாது. மறுமை நாள் வரை அந்த ஓசை உலகின் அனைத்து மூலைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஏனெனில், இது என்றும் அழியா அற்புதம். அந்த அற்புதத்தின் அகமியத்தை நாம் உணர வேண்டும்.
இந்த கண்ணிய மாதத்தில் மட்டும் அதை எடுத்து ஓதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நாம் வாழ்நாள் முழுவதும் அந்த புண்ணிய அருள்மறையை அதிகமதிகம் ஓதி நாம் ஏக இறைவனின் அருளைப் பெற வேண்டும்! வெறுமனே ஓதுவது மட்டுமல்லாமல், அதன் பொருளையும் உணர்ந்து நம் வாழ்வில் அடிபிறழாமல் பின்பற்றி வாழ்வதற்கு முயற்சிகள் செய்யாத வரை, நாம் அல்குர்ஆன் அருளப்பட்ட சமுதாயம் என்பதில் அர்த்தமில்லை.
From: Dr. Ali Ibrahim <aliibrahimjamali@gmail.com>
Thanks & Regards,
Dr. A.M. Ali Ibrahim
Ph: +91 - 98414 92528
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
No comments:
Post a Comment