Saturday, April 18, 2020

அம்மா...அம்மம்மா!

Dr.Vavar F Habibullah

பேரென்ன
படிப்பென்ன
பட்டமென்ன
பதவியென்ன
பொருளென்ன
புகழென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
நீ இல்லை என்றால்...
நான் என்பது தான் என்ன!
என் நிலை தான் என்ன!!

பெற்றெடுத்தாள் அம்மா
வளர்த்து அறுசுவை உணவூட்டி
நோய் தடுத்து பாதுகாத்தாள்
அம்மம்மா!
அம்மம்மா...அவர் கையால் தரும்
தேநீர் சுவை அறிந்து நான் சூடிய
பெயர் தான் ‘சாயாம்மா!’
சாயாம்மா அன்று எனக்கு
ஒரு ‘மருந்தம்மா’
வாரம் ஒரு நாள் அவர் தரும்
மருந்துக் கஷாயம்
மாதம் ஒரு நாள் அவர் தரும்
மருந்துச் சோறு
நோய் வெல்லும் என்றால்
அது,அவர் தம் கை மருந்தா
அல்லது அவர் தம் கைராசியா
மருத்துவம் படித்த எனக்கே
இன்றும் புரியவில்லை.


நல்லெண்ணைக் குளியல்
நோய் தடுத்து என்னை
நீண்ட நாள் காத்தது
இன்றும் காத்து வருவது
மிகையல்ல
அவர் வாழ்ந்த காலம் வரை எந்த
நோயும் அவரை சீண்டியதில்லை
அவர் நோயில் படுத்து
நான் பார்த்ததில்லை.
அவர் கால் படாத இடம்
மருத்துவமனைகள் மட்டுமே.

தானத்தில் சிறந்து தினமும்
கொடுத்துச் சிவந்த கரங்கள்
பெற்றதனால் தானோ என்னவோ
ஊரார் அவரை கண்ணியத்துடன்
அழைத்து மகிழ்வது ‘அம்மாள்’
என்ற சிறப்புப் பெயரால் மட்டுமே!

படத்தில்
என் அம்மா மற்றும் அம்மம்மா

Dr.Vavar F Habibullah

No comments: