Thursday, April 23, 2020

மாண்புமிகு நோன்பு !


 --- கமபம் ஹாரூன் ரஷீத்
உண்ணாமல் இருப்பது மட்டும்

உண்மையான நோன்பல்ல – அது

எண்ணங்களில் மாண்புறுத்தும்

ஏந்துதலாய்த் தவமிருக்கும் !


உணர்வுகளும் நோன்பிருக்கும்

ஊனமில்லா ஞானத்தோடு

மேன்மைமிகு தகைமையினில்

மென்மையாய் மிளிர்ந்திருக்கும் !



நாவும் கூட நோன்பிருக்கும்

கட்டுப்பாட்டில் நிலைநின்று

தேவையற்ற பார்வைகளில்

தலைதாழ்ந்து தடம் பதிக்கும் !


நுகர்வுகளும் நோன்பிருக்கும்

கஸ்தூரியின் வாசத்தோடு

இறையருளைக் கவருகின்ற

நேசத்தினை வெளிப்படுத்தும் !


செவிகளும் நோன்பிருக்கும்

இறைவசன உச்சரிப்பினை

ஒலி அலைகளாய் உள்வாங்கி

உள்ளத்தினில் ஒளிர்ந்திருக்கும் !


ஆத்மமும் நோன்பிருக்கும்

ஐம்புலன்கள் அனைத்தினோடும்

ஐக்கியமாய் இணைந்திருந்து

இதயத்தில் துடித்திருக்கும் !


தொழுகையும் நோன்பிருக்கும்

ஓர்மையோடு ஒன்றுதலாய்

தாழ்மையோடு உடன்பட்டு

விழிநீரில் நனைந்திருக்கும் !


ஈகையும் நோன்பிருக்கும்

தேவைகளைத் தேடிச் சென்று

கைகொடுத்துக் கைமாற்றும்

கண்ணியத்தைக் காப்பாற்றும் !

சிந்தனையும் நோன்பிருக்கும்

வந்தணைத்த நெஞ்சங்களில்

சாந்தியையும் சமாதானத்தையும்

பந்தியிட்டுப் பரிமாறும் !


தோழமையும் நோன்பிருக்கும்

நல்லுறவின் தூண்டுதலாய்

மறுமைக்கான தேடல்களை

மனதாரப் பகிர்ந்தளிக்கும் !


பயபக்தி நிறைந்திருக்கும்

பயில்வுகளின் கோட்பாட்டில்

நோன்பினது நட்புணர்வே

நேர்த்தியோடு நெகிழ்வூட்டும் !

நன்றி

இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com

No comments: