Wednesday, April 22, 2020
தலைகீழான காட்சிகள் ——-
இறைவனின் அன்பின் மிகைப்பால்
இயல்பு வாழ்க்கை மாற்றம் கண்டது
கொரோனா நோயின் மூலம் இறைவன்
கொண்டு தந்தான் வசந்த வாழ்வு
மாறுபட்ட சிந்தனைகள் இது
மறுக்க முடியாத உண்மைகள் இது
மனித உயிர்களின் பலிகள் அது
மனிதாபிமானத்தின் விதைகள்
வான்மண்டலத்தில் மாசு குறைந்தது
வளமிகு நதிகள் தூய்மை பெற்றது
சுவாச காற்றில் சுத்தம் நிறைந்தது
சுகமான வாழ்வு மீண்டும் பிறந்தது
மான்கள் சாலையில் இளைப்பாறின
மயில்கள் சோலையில் நடனமாடின
மீன்கள் கரை வந்து விளையாடின
குயில்கள்குருவிகள் கூவித் திரிந்தன
காலன் ஏனோ உறங்கி விட்டான்
கடமை அதனை மறந்து விட்டான்
காலம் செய்த கோலங்களினால்
காட்சிகளை தலைகீழாக்கி விட்டான்
வீதிகள் அரவமின்றி கிடக்கின்றன
விபத்துக்கள் எதுவும் எங்குமில்லை
வியாதிகள் ஓடி ஒளி(ழி)ந்ததால்
வெறிச்சோடிய மருத்துவமனைகள்
காமங்கள் கற்பழிப்பு இன்று இல்லை
கள்ளக்காதல் கொலையும் இல்லை
கண்ட இடத்தில் வன்முறை இல்லை
களவு கொள்ளை எதுவும் இல்லை
மனைவியர் மனங்கள் குளிர்ந்தன
மாமியார் மருமகள் சண்டையில்லை
பிள்ளைகளின் பிணைப்பு கிட்டியது
வீடுகள் விழாக்காலம் கொண்டது
தனிமை கற்று தந்த பாடங்களால்
தந்தை தாயின் மகிமை புரிந்தது
கூட்டமாய் ஒன்றாய் வாழ்ந்த வாழ்வு
கூடிவந்ததால் மகிழ்ச்சி பொங்கியது
விளைபொருட்கள் உயிர் காத்தன
விவசாயிகளின் அருமை புரிந்தன
காவலர்கள் கண்ணியம் காத்தனர்
துப்புரவுபணியின் தியாகம் தெரிந்தது
இறை இல்லங்கள் மூடப்பட்டன
இதயங்களோ திறந்து கொண்டன
ஏழைகளின் மறுவாழ்வு மலர மக்கள்
ஏற்றமிகு நலதிட்டங்கள் செய்தனர்
நோய்கள் அல்லாஹ்வின் நிஹ்மத்
நோக்கங்கள் நன்றாய் அமைந்தால்
நோய்கள் நம்மை அணுகாது இது
நபிகளார் சொன்ன அமுத வாக்கு நம்பினால் மலரும் நல்ல வாழ்வு
நன்றி செலுத்தி வாழ்வோம்
நல்ல எதிர்காலம் பிறக்கட்டும்
பொருளாதார சீரழிவு சிதையட்டும்
பெருமை மிகு வாழ்வு மலரட்டும்
மு முகமது யூசுப். உடன்குடி
--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment