கல்வி ஞானத்தை அடைய பத்து வழிமுறைகள்
அரபியில்: அப்துல்லாஹ் இப்னு ஸல்ஃபீக் அள் ளுஃபைரீ
தமிழில்: மௌலவி அல் ஹாஃபிழ் முனைவர்
A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil, Ph.D.
(உதவிப் பேராசிரியர், அரபித் துறை, ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சிராப்பள்ளி)
அனைத்துப் புகழும் ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது கருணையும், சாந்தியும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உரித்தாகுக!
கல்வி ஞானத்தைத் தேடும் ஒவ்வொரு மனிதனும் சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அந்த அடிப்படைத் தத்துவங்களை நினைவு கூர்வதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
அறிவை அடைய நினைக்கும் ஒவ்வொருவரும் பின்வரும் பத்து வழிமுறைகளையும், கட்டளைகளையும் பின்பற்றியாக வேண்டும்.
முதல் வழிமுறை – அல்லாஹ்வின் உதவியைத் தேடுதல்:
மனிதன் பலவீனமானவன். இறைவனின் துணையின்றி அவனுக்கு எவ்வித சக்தியுமில்லை. அவன் தன்னை மட்டுமே நம்பினால், அழிந்து விடுவான். ஆனால், அவன் அல்லாஹ்விடத்தில் தன் பொறுப்புகளை ஒப்படைத்து, கல்வியைத் தேடும்பொழுது அல்லாஹ் அவனுக்கு உதவுவான். இது குறித்தே இறைவன் தன் அருள்மறையில் பின்வருமாறு ஆர்வமூட்டுகிறான்.
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல் குர்ஆன் - 1:5).
மேலும், எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன். (அல் குர்ஆன் - 65:3).
நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள். (அல் குர்ஆன்- 5:23).
மேலும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: 'நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை வைப்பீர்களாயின் அவன் பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை (பறவைகள்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் (பசி தீர்ந்து) நிரம்பிய வயிறுடன் திரும்புகின்றன'. (நூல்: புகாரி).
அல்லாஹ் வழங்கக்கூடிய அருட்கொடைகளில் மிகப் பெரியது ஞானமாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து அவனிடமே உதவி தேடினார்கள். ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும், 'அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்)! அல்லாஹ்வின் உதவியின்றி சக்தியோ, வல்லமையோ இல்லை' என்று ஓதிய பின்பே வீட்டை விட்டு செல்வார்கள் என்பதையும் ஹதீஸ் கிரந்தங்களில் காண்கிறோம்.
எனவே, நாம் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, அவனிடமே உதவி தேட வேண்டும்.
இரண்டாம் வழிமுறை – நல்லெண்ணம் கொள்ளுதல்:
ஒரு மனிதன் தாம் கல்வியைத் தேடுவது இறைவனுக்காக மட்டுமே என்ற எண்ணம் கொண்டவனாக இருக்க வேண்டும். முகஸ்துதிக்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ, உலகாதாயங்களை அடைவதற்காகவோ கல்வியை தேட நினைக்கக் கூடாது.
யார் அல்லாஹ்விற்காக என்ற எண்ணம் கொள்கிறாரோ, அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பதோடு நற்கூலியையும் வழங்குவான். ஏனெனில், கல்வி என்பது ஒருவகை வழிபாடாகும். உண்மையில் பார்க்கப்போனால், கல்வி மிகச் சிறந்த வழிபாடாகும்.
இறைவனுக்காக என்ற தூய எண்ணம் கொண்டு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றாத வரை ஒரு அடியான் தாம் செய்யக்கூடிய செயலுக்கு நற்கூலி வழங்கப்பட மாட்டான். அல்லாஹ் அருமறையில் கூறுகிறான். 'நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்' (அல் குர்ஆன் - 16:128).
இறையச்சத்தின் உச்சம், இறைவனுக்காக ஒரு செயலை மனத்தூய்மையுடன் செய்வதேயாகும். எனவே, மக்களிடையே புகழ்பெற வேண்டும் அல்லது தான் பேசப்பட வேண்டும் என்பதற்காக கல்வி கற்பவன் இவ்வுலகில் தோல்வியடைவது மட்டுமன்றி மறுவுலகிலும் தண்டிக்கப்படுவான்.
எனவேதான், மறுமையில் முகங்குப்புற நரகத்தில் தள்ளப்படும் மூன்று வகையினரில், தான் அறிஞர் என புகழப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கல்வி தேடிய ஒருவருமாவார் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
மூன்றாம் வழிமுறை - இறைவனுக்கு முன் தம்மை தாழ்த்திக் கொண்டு அவனிடத்தில் நற்பாக்கியத்தையும், வெற்றியையும் வேண்டுதல்:
கல்வியை வழங்கக் கோரி இறைவனிடத்தில் நாம் இறைஞ்ச வேண்டும். அடியான் இறைவனின் பால் கடுமையான தேவையுடையவன். அவனின் அருளின்றி ஒரு செயலும் நடக்காது. எனவேதான், இறைவன் தன்னடியார்களை தன்னிடத்தில் தாழ்ந்து பணிந்து பிரார்த்திக்க ஊக்கமூட்டுகிறான். அவன் தன் அருள்மறையில் பின்வருமாறு எடுத்துரைக்கின்றான்.
'உங்கள் இறைவன் கூறுகின்றான்: 'நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்'. (அல்குர்ஆன் - 40:60).
மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 'ஒவ்வொரு நாள் இரவிலும் நமது இறைவன் (அல்லாஹ்) முதலாவது வானத்திற்கு இறங்கி வந்து 'யார் என்னிடத்தில் பிரார்த்தனை செய்கிறானோ, அவனுக்கு நான் பதிலளிக்கிறேன். யார் என்னிடத்தில் கேட்கிறோனோ, அவனுக்கு வழங்குகிறேன். யார் என்னிடத்தில் பாவ மன்னிப்பு தேடுகிறானோ, அவனை நான் மன்னிக்கின்றேன்' என்று கூறுகிறான்.
மேலும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஞானத்தை அதிகரிக்க வேண்டி பிரார்த்திக்குமாறு ஏவுகிறான். அவன் கூறுகிறான். எனினும் 'என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (அல்குர்ஆன் - 20:114).
அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்ததையும் அல்லாஹ் அருமறையில் எடுத்துக் கூறுகிறான். 'என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!' (அல்குர்ஆன் - 26:83).
ஹுக்மு என்ற அரபிப்பதத்திற்கு 'ஞானம்' என்ற பொருள் உண்டு. அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு அதிகமான மனனசக்தியை வழங்குமாறு இறைவனிடத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளார்கள். மேலும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கல்வி ஞானத்தை வழங்கப்படுவதற்காக 'யா அல்லாஹ்! (இஸ்லாமிய) மார்க்கத்தின் (பூரணமான) புரிதலையும், குர்ஆனுடைய (தெளிவான) விளக்கத்தையும் இவருக்கு வழங்குவாயாக!' என்று துஆ செய்தார்கள்.
பெருமானாருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அபூஹுரைரா (ரலி) அவர்கள் தாம் பெருமானாரிடத்தில் இருந்து கேட்ட அனைத்து ஹதீஸ்களையும் மனனம் செய்தார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ இஸ்லாமிய மார்க்கத்தின் இணையற்ற அறிஞராகவும், 'ரயீஸுல் முஃபஸ்ஸிரீன்' (குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர்) என போற்றப்பட்டார்கள்.
மார்க்க அறிஞர்கள் அனைவருமே இறைவனிடத்தில் தம்மை தாழ்த்திக் கொண்டு கல்வியை வேண்டும் அருமையான வழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவ்வாறே அது தொடர வேண்டும்.
நான்காம் வழிமுறை – தெளிவான உள்ளம்:
உள்ளம் கல்வியை பாதுகாத்து வைக்கும் பாத்திரமாகும். அப்பாத்திரம் நன்றாக இருந்தால் அதில் தேக்கப்படும் அனைத்தையும் சேகரித்து நல்ல முறையில் பாதுகாக்கும். அதுவே கெட்டதாக இருந்தால், அதில் உள்ள அனைத்தும் வீணாகி விடும்.
அனைத்து காரியங்களுக்கும் உள்ளமே அடிப்படையாக விளங்குகிறது. இதைத்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சரியாகி விட்டால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகி விடும். அது கெட்டுப் போனால், உடலனைத்தும் கெட்டு விடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுவே உள்ளமாகும்' என அருமையாக எச்சரித்தார்கள்.
தெளிவான உள்ளம் அல்லாஹ்வின் உள்ளமை, அவனது தன்மைகள், அவனது நாமங்கள், அவனது செயல்பாடுகள் குறித்து சிந்திக்கச் செய்யும். மேலும், அவனது அடையாளங்கள் மற்றும் படைப்புகள் பற்றி ஆராயச் செய்யும். அதுமட்டுமல்லாமல், அருள்மறை ஆராய்ச்சி, அதிகமாக தலைவணங்குதல் மற்றும் அதிகமான இரவு வணக்கங்களில் அவனை ஈடுபடச்செய்யும்.
எனவே கல்வி ஞானத்தைத் தேடுபவர் உள்ளத்தைக் கெடுக்கும் அல்லது அதைக் கெடுக்கக் கூடிய செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். ஏனெனில், கெட்டுப் போன உள்ளத்தில் கல்வி தங்காது. அப்படியே தங்கினாலும், அதை விளங்க முடியாது.
உள்ளம் வீணாகிப் போன நயவஞ்சகர்கள் குறித்து அல்லாஹ் பின்வருமாறு வர்ணிக்கின்றான். 'நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன, எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு. எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு. எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர். (அல்குர்ஆன் - 7:179).
உள்ளத்தின் நோய்கள் இருவகைப்படும். 1. ஆசைகள் 2. சந்தேகங்கள். ஆசைகள் என்பது இந்த உலக வாழ்வின் மீதும், அதனுடைய ஆசாபாசங்களின் மீதும் நேசம் வைப்பது, தடுக்கப்பட்ட காரியங்களை விரும்புவது, தவறான பார்வைகள், இசை கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடுவது என்று விளக்கம் சொல்லலாம். அதே போன்று, சந்தேகங்கள் என்பது தவறான கொள்கைகள், நூதனமான செயல்பாடுகள், இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களில் அல்லது இயக்கங்களில் ஈடுபடுதல் போன்றவையாகும்.
பொறாமை, குரோதம், தற்பெருமை, அதிகமான தூக்கம், அளவிற்கு மிஞ்சிய உணவு, தேவையற்ற பேச்சு போன்றவைகளும் உள்ளத்தை கெடுக்கும் நோய்களேயாகும். எனவே, தெளிவான உள்ளம் வேண்டுபவர் இவையனைத்தையும் தவிர்ந்திருப்பது அவசியமாகும்.
ஐந்தாம் வழிமுறை – அறிவுத்திறன்:
அறிவுத்திறன் அல்லது புத்திசாலித்தனம் என்பது சிலருக்கு இயற்கையாக அமைந்திருக்கும். சிலர் அதை முயன்று பெற வேண்டியிருக்கும். எனவே, ஒரு மனிதன் இயற்கையாகவே அறிவாளி எனில், அவன் தன் அறிவுத்திறனை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அதை அடைய முயற்சிக்க வேண்டும்.
ஞானத்தை அடைவதற்கு, அதை புரிவதற்கு, அதை மனனமிட்டு காப்பதற்கு, (மார்க்கச்) சட்டங்களை வகுப்பதற்கு, அதற்குரிய ஆதாரங்களை தொகுப்பதற்கு மற்றும் ஏனைய அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் அறிவுத்திறன் மிக முக்கியமான காரணமாகும்.
ஆறாம் வழிமுறை – கல்வி கற்க வலுவான ஆசை இருப்பது:
அருமறையில் அல்லாஹ் கூறுகிறான். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் - 16:128).
மனிதன் ஒரு பொருளின் முக்கியத்துவத்தை உணர்ந்தால், அதை அடைய ஆசைப்படுவது இயற்கை. கல்வி ஞானம் ஒரு மனிதன் பெற வேண்டிய மாபெரும் பொக்கிஷம் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. எனவே, ஒரு மாணவன் கல்வி கற்கவும், அதை விளங்கவும் மேலும் அதை மனனம் செய்யவும் மிகுந்த ஆசை கொண்டவனாக இருக்க வேண்டும். மேலும், மார்க்க அறிஞர்களின் சபைகளில் அமர்ந்து அவர்களிடமிருந்து கல்வியைக் கற்க வேண்டும்.
தம் வாழ்நாள் முழுவதையும் அதிகமாக படிப்பது போன்ற பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் என்ற உறுதி கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களையும் வீணாக்கக் கூடாது, காலத்தின் அருமை கருதி செயல்பட வேண்டும்.
ஏழாம் வழிமுறை – கல்வி ஞானத்தை அடைய கடின உழைப்பு, ஊக்கம் மற்றும் விடா முயற்சியுடன் இருப்பது:
கல்வி கற்க விரும்பும் மாணவர் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்தை விட்டு முழுமையாக விலகியிருக்க வேண்டும். மேலும் ஷைத்தானின் தீய வலைகளை விட்டும், மனோ இச்சைகளையும் விலக்க வேண்டும். ஏனெனில், ஷைத்தானும், மனோ இச்சையும் கல்வியைத் தேடுவதை விட்டும் தடுக்கக்கூடிய முக்கிய காரணிகளாகும்.
மாணவனை ஊக்கப்படுத்தும் முக்கிய வழிகளில் ஒன்று தலை சிறந்த அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதும், அவர்களின் உழைப்பு, அவர்கள் கல்வி ஞானத்தை அடைய மேற்கொண்ட பயணங்கள், சோதனைக்காலங்களின்போது அவர்கள் காத்த பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றை அறிவதுமாகும்.
எட்டாம் வழிமுறை – திறமை:
ஒரு மாணவன் தன்னுடைய அதிகபட்ச முயற்சிகளின் மூலம் கிடைக்கக்கூடிய உச்சகட்ட பலனே திறமை எனப்படும். முயற்சிகளின் முழுமையான அறுவடையே இது எனவும் கூறலாம். இது மனனம், புரிதல் மற்றும் செயல்பாடு என பல அளவுகோள்களைக் கொண்டு அளக்கப்படும்.
ஒன்பதாம் வழிமுறை – ஒரு சிறந்த ஆசிரியரை கைக்கொள்வது:
மேன்மையான கல்வி ஞானம் சிறந்த அறிஞர் பெருமக்கள் மூலமே பெற முடியும். அப்படிப்பட்ட சிறந்த கல்வி ஞானத்தை தேடக்கூடிய மாணவன் ஆலிம்களின் சபைகளிலே அமர்ந்து அவர்களின் ஞான உபதேசங்களை செவியுற வேண்டும். அவனுடைய கல்வி உறுதியான அஸ்திவாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும். குர்ஆன், ஹதீஸ்களை தெளிவான முறையில் கற்க வேண்டும். அதை சரியான முறையில் விளங்கவும் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து, அவரிடமிருந்து கல்வி மட்டுமல்லாமல், நல்லொழுக்கம், சிறந்த குணங்கள், வணக்க வழிபாடுகளில் பேணிக்கை மற்றும் இறையச்சத்தையும் கற்க வேண்டும்.
புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. ஏனெனில், புத்தகங்கள் அவன் தவறு செய்யும் போது திருத்தாது. ஆனால், ஒரு சிறந்த ஆசிரியரே அவனுடைய தவறுகளை திருத்தி நல்வழிபடுத்தத் தகுதியானவர் ஆவார்.
இன்று வரை இந்த மகத்தான வழிமுறைப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு சிறந்த ஆசிரியரின் துணையின்றி எந்த ஒரு மனிதனும் கல்வி ஞானத்தை அடைய முடியாது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். எனவே, ஒருவனுக்கு சிறந்த ஆசிரியர் கிடைத்து விட்டால், அவனுடைய கல்விப்பாதை எளிதாகும்.
பத்தாம் வழிமுறை – நீண்ட காலம் கற்பது:
கல்வி என்பது முடிவில்லாப் பயணம். எனவேதான், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கல்வி கற்பது என்பது தொட்டில் முதல் இடுகாடு வரை (தொடரும் பயணம்)' என கூறினார்கள்.
...from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>
...
No comments:
Post a Comment