Wednesday, November 7, 2018

நாங்கள் இரும்புக் கட்டிகள்...!

Hilalmstafa: 

நாகூரில் ஹஜ்ரத் அவர்கள் வீட்டில் நாங்கள் சிலர் அவர்கள் முன்னர் அமர்ந்திருந்தோம்.

ஹஜ்ரத் அவர்கள் ஒரு அற்புதச் செய்தியை விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

எங்களில் ஒருவருக்கு அந்தச் செய்தியின்  அழுத்தத்தைப் புரிந்து கொள்வதில் சில சிக்கல்கள் இருந்தன.

கொஞ்சம் கனமான தகவல்கள் நிறைந்திருந்ததால் திணறினார். மெதுவாக ஹஜ்ரதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்த நிலையிலே நகர்ந்து நகர்ந்து அவர்கள் அருகில் வந்தார்.

புரிந்து கொண்ட ஹஜரத் நண்பர் நகர்தலின் பொருளறிந்து, " என்ன செய்தி" என்று கேட்டார்கள்.


" ஒன்னுமில்ல ஹஜ்ரத். நீங்கள் சொல்லுகிற செய்தி அருமையாக இருக்கிறது. ஆனா எனக்குப் புரியக் கஷ்டமா இருக்கு. எனக்கும் புரியுற மாதிரி லேசாச் சொல்லுங்க ஹஜ்ரத்."
என நண்பர் கோரிக்கை வைத்தார்.

ஹஜ்ரத் சிகரெட் புகைத்த வண்ணமும் கொஞ்சம் புன்னகையும் கலந்து விளக்கினார்கள்.

" இந்தச் செய்தி சற்று நெருடலானதுதான்.ஆனால் அதனை எவ்வளவு நெகிழ்வு படுத்த முடியுமோ அவ்வளவு லேசாக்கித்தான் நான் தருகிறேன்.
அப்போதும் கஷ்டமென்றால் நானென்ன
செய்ய முடியும்? நீங்களும் கொஞ்சம் மேலே வந்து புரிந்து கொள்ள முயற்சியுங்கள்" என்றார்கள் ஹஜ்ரத்

எப்போதும் சற்றுத் துடுக்குத்தனமாகவே பேசும் ஒருவர் (ஹஜ்ரத் இந்த மாதிரித் துடுக்குத்தனத்தை ரொம்பவும் ரசிப்பார்கள்)
" ஹஜ்ரத்!எங்களாலே இதுக்கும் மேலே ஏறிவரத் தெரியாது. எங்கள் லேவல் இவ்வளவுதான். நீங்கள்தான் வாழைப் பழத்தில் ஊசியை இறக்கிறது போல எங்கள் மண்டையில்  இறக்க வேணும்." என்றார்.

ஹஜ்ரத்  சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

" அதெல்லாம் சரிதான். நான் என் கையில்  இப்போது வைத்திருப்பது ஊசிதான். ஏறும் போது வலிக்கத்தான் செய்யும்.அதுதான்
ஊசிக்குணம்.
'இன்னொன்னும் பாக்கணும். 
இந்த ஊசியை வாழைப் பழத்தில் குத்தற மாதிரிதான் உங்களுக்குள் இறக்க வேணும்.எல்லாம் சரிதான் இதுக்கு ஊசி மட்டும் காரணமில்லை.
' நீங்கள் வாழைப் பழமாக இருக்கணுமே?
நீங்கள் இரும்புக் கட்டியாக இருந்தால் நான் எப்படி ஊசியை உள்ளே
இறக்க முடியும்?" என்றார்கள்.

நாங்கள் வாயடைத்துப் போனோம்.

மீண்டும் ஹஜ்ரத் விளக்கினார்கள்.

" வாழைப் பழத்தில் ஊசி இறக்குவது
ரொம்பச் சுலபம். அதைவிடச் சுலபம்
குத்திய ஊசியை உருவி எடுப்பதும்.

' இரும்புலே ஊசியைக் குத்த முடியாது.
சில  வேலை செய்தால் இரும்புக்குள்ளே
குத்திவிடலாம். அப்படிச் செய்தால் திரும்ப எடுக்கவே முடியாதபடி பதிந்துவிடும்.
இரும்பை நெருப்பில் உருக்கி  ஊசியை வைத்து விட்டால் போதும் இரும்பு தனக்குள் கபளீகரம் செய்துவிடும்.
திரும்ப எடுக்கவே  முடியாது.

' இதுதான் என்  வேலை. நீங்கள் இரும்பாகவே இருங்கள். உங்களை உருக்கி செய்திகளை இரண்டறப் பதித்து
விடுகிறேன் "என்றார்கள்,ஹஜ்ரத்.

அப்படித்தான்  எங்களுக்குள் பதித்திருக்கிறார்கள்.

நாங்களும் நல்ல  இரும்புகளாகவே இருந்தோம்
.
Hilalmstafa:


No comments: