Monday, November 19, 2018

#இன்பத்_தமிழ்_நாட்டில் #இனிக்கும்_இஸ்லாம் ... அபு ஹாஷிமா

Abu Haashima

#மக்காவில்_அன்று.....

சூரியனின் வெளிச்சம் பட்டு பொன்னைப்போல் மின்னிக் கொண்டிருந்தது மக்காவின் மணல் பூமி. சூரியனின் வெண்மையைவிட எங்கள் உள்ளம் அதிக வெண்மை என்று எடுத்துச் சொல்வதைப்போல அங்கே கூடிநின்ற ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் ஹாஜிகளின் வெண்ணிற இஹ்ராம்(ஹாஜிகள் அணியும் தையல் இல்லாத வெள்ளாடை) ஆடைகள் மின்னிக் கொண்டிருந்தன.

அகிலத்தின் அருட்கொடையாக வந்துதித்த முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)அவர்கள் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய மகிழ்வோடு இணையற்ற அல்லாஹ்வை போற்றித் துதித்தார்கள்


ஹஜ்ஜின் பத்தாம் நாள்!
அரஃபாப் பெருவெளி ஹாஜிகளால் நிரம்பி வழிந்தது.
சிவப்பு வண்ணத் தலைப்பாகை அணிந்து கஸ்வா என்னும் ஒட்டகத்தின்மீது அமர்ந்து நபிகளார் அங்கே வந்தார்கள்.
குணக் குன்றாம் நபிகள் பெருமானார் ஜபலுர் ரஹ்மத் என்னும் மற்றோர் குன்றின் மீது ஏறி நின்று ...
இஸ்லாமிய வரலாற்றின் பொன்னேடுகளில் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் புனித உரையை அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்தார்கள்!

"மக்களே! என் சொற்களுக்கு சற்றே செவி கொடுங்கள்!
இறைவன் ஒருவன்!
அவன் இணை துணையற்றவன்! புகழுக்குரியவன்!
உயிர் கொடுப்பவனும் அதனை எடுத்துக் கொள்பவனும் அவனே!
அவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை!"

இஸ்லாத்தின் ஏற்றமிகு கொள்கைகளை அங்கே கூடி இருந்த மக்களுக்கு எடுத்துச் சொன்னப் பெருமானார் ...
"முஸ்லிம்கள் அனைவரும் உடன் பிறந்தோர்!
அரபிகளும் அரபி அல்லாதவர்களும் சமமானவர்களே!குலத்தால்,இனத்தால்,பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது ஒருபோதும் இல்லை!
அல்லாஹ்வை அடிபணிகின்ற கருப்பு அடிமையே ஆனாலும்
தலைவன் அவன் என்றால்
அவன் ஆணைக்கு அடங்குதல் தலையாயக் கடமை"
என்றுரைத்தார்கள்!

மேலும்....
"பேணப்பட வேண்டியவர்கள் பெண்கள்! அவர்களே இல்லத்தின் கண்கள் !"
என்று சொன்ன பெருமானார் ...
"இரண்டு விசயங்களை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.
ஒன்று - இறைமறை !
மற்றொன்று - எனது நடைமுறை !
இவை உங்களிடம் இருக்கும் வரை வழிகேடென்பது உங்களுக்கில்லை!
இனி ஒருமுறை இதுபோன்று நாம்
கூடி நிற்போம் என நான் எண்ணவுமில்லை.
அதனால் ஒற்றுமையின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் "

உணர்ச்சி கொந்தளிப்போடு
நபிகள் உரையாற்ற
பாலைவனதேசம்
மக்கள் வடித்த கண்ணீரால்
தண்ணீர் தேசமானது!

மக்களிடம் நபிகள் கேட்டார் -
"மக்களே! இறுதிநாளில் இறைவன் ... அவன் கட்டளைகளை உங்களுக்கு நான் ஒழுங்காகச் சொன்னேனா எனக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?"

"சரியாகவேச் சொன்னீர்கள் எனச் சொல்வோம்"
கூடியிருந்த மக்கள்
உணர்ச்சிப் பிழம்பாய்
உரத்துச் சொன்னார்கள் !
உடைந்துபோய் அழுதார்கள்!

பெருமானாரின் இதயம்
பனியாய் உருகியது !
கண்களிலே
கண்ணீர் பெருகியது!

"இறைவா! நீயே இதற்குச் சான்று"
என்று இதனை மூன்றுமுறை நபிகள் உரத்துச் சொன்னார்கள்.

" இன்று இஸ்லாம் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்தேன்.
எனது அருட்பேறுகளை உங்களுக்கு முழுமைப் படுத்தினேன்" என்று அண்ணலின் குரலுக்கு அன்பாளன் அல்லாஹ் அகங்குளிர்ந்து அருளுரைத்தான்.
இறைவன் இறக்கி வைத்த வாழ்த்துச் செய்தி தன் வாழ்வு நிறைவுபெறும் செய்தியாக வந்திருப்பதை புண்ணியர் புரிந்து கொண்டார்.

கூடியிருத்த மக்களிடம் ...
"இங்கே வந்திருப்பவர்கள் இங்கே வராத மக்களிடம்இஸ்லாத்தின் செய்தியை எடுத்து செல்லுங்கள் !
உலகின் எல்லா இடங்களுக்கும் இஸ்லாத்தின் செய்தி எடுத்துச் செல்லப் படவேண்டும்" என்று
அன்புக் கட்டளையும் இட்டார்கள்.

பெருமானார் சொன்னால் உயிரையே தருவதற்குத் தயாராக இருந்த சஹாபாக்கள் (நபிகளாரின் தோழர்கள்) பெருமானாரின் வாய்மொழியை இதயத்தில் ஏற்றிக் கொண்டார்கள்.
ஆயிரக்கணக்கான சஹாபாக்கள் தங்களின் இருப்பிடமான மதீனாவுக்கும்
மற்ற இடங்களுக்கும் திரும்பிச் செல்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் இஸ்லாத்தின் செய்தியைச் சொல்ல புறப்பட்டுச் சென்றார்கள்.

அறியாமை இருட்டிலும் அனாச்சார கேட்டிலும் சிக்கித்திணறி செத்துக் கொண்டிருந்த மண்ணுக்கு மூச்சு வர ஆரம்பித்தது!

பாவங்களாலும் சாபங்களாலும் பாழ்பட்டுக் கிடந்த பழுத்த பூமி
வான் மழையாய் வந்த வான்மறையில் நனைந்து ஓரிறைப் பயிரை
பயிர் செய்ய ஆரம்பித்தது .

உலகம் "பச்சை " நிறத்துக்கு மாற ஆரம்பித்தது!

இன்பத் தமிழ் நாட்டிலும் இஸ்லாம் இனிக்க ஆரம்பித்தது!

No comments: