Thursday, November 8, 2018

நீதானா அது நீதானா


இருளைப் பார்த்துப்
பயம்கொள்ளாதீர்

இருள்
வெளிப்படையானது
வெளிச்சம்தான்
மாயமானது
தந்திரமானது

ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சு ஆடும் ஒளி
எங்கே இருந்தது
எங்கிருந்து வெளிப்படுகிறது
என்பது
மாயவித்தையல்லவா


எங்கிருந்தோ சட்டெனத்தொற்றி
பற்றி எரியும் நெருப்பு
ஆகாயத்துள் ஓடி
ஒளியப் பார்க்கிறது

எங்கிருந்தோ திடுமென
மின்னித் தெறிக்கும் நெருப்பு
பூமிக்குள் பாய்ந்து
மறையப் பார்க்கிறது

தன்னை உரித்துக் காட்ட
ஒளிக்கு ஏன்
இத்தனை அச்சம்

கல்லும் கல்லும்
மோதிக் கொண்டால்
உடைந்துதானே
நொறுங்கவேண்டும்
அங்கே நெருப்பு எப்படிச்
சிசுவாகிறது

மரமும் மரமும்
முட்டிக்கொண்டால்
முறிந்துதானே
சிதையவேண்டும்
அங்கே
காட்டுத்தீ எப்படித்
தலைகாட்டுகிறது

உன்
சினத்திற்குள்ளும்
என் சினத்திற்குள்ளும்
பதுங்கிக் கிடப்பது
செந்தீதானோ

சிந்தனைச் செல்கள்
ஒன்றுடன் ஒன்று
உரச உரச
ஞானவொளி எப்படித்
தெறிக்கிறது

கருப்பு மூலமா
அன்றி
நெருப்புதான் மூலமா

வானமே யார் நீ
நீக்கமற நிறைந்திருக்கும்
இருளா
இருட் போர்வைக்குள்
ஒளிந்திருக்கும்
ஒளியா

சூட்சுமமாய்ப்
பேரிருட் கருவோட்டுக்குள்
பேருண்மைக் கனலாய்
பேரமைதிப் பிழம்பாய்
ஓளிந்து மறைந்திருக்கும்
பேரிறை அத்தாட்சியே

நீதானா
அது நீதானா


கவிஞர் புகாரி
https://anbudanbuhari.blogspot.com

No comments: