by Kaniyur Ismail Najee Manbayee
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபொழுது என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.ஏனென்றால் ஒரு நாள் நானும் இது போன்று ஒரு கடைவாசலில் நின்றேன்.
1967 ம் ஆண்டு லால்பேட்டை மதரசாவிலிருந்து மவ்லவி பாஜில் பட்டயம் பெற்று தேவ்பந்து மதரசாவில் கல்வி கற்க ஆசைப்பட்டேன்.அந்த நேரத்தில் 12 பிள்ளைகளுக்கு தந்தையான என் தந்தை மிகவும் பொருளாதார சிரமத்தில் இருந்தார்.
என் தாத்தா இஸ்மாயில் ராவுத்தர் துவக்கிய இஸ்லாமிய அரசு உதவி பெரும் ஆரம்ப பாடசாலையின் தாளாராக இருந்தவர் அவருக்கான வருமானம் குறைவாக இருந்ததால் நான் ஏதேனும் பணியில் சேர்ந்தால் நல்லது என நினைத்தார். அப்பொழுது
எனது உஸ்தாத் லால்பேட்டை ஷைகுல்வரா அப்துல்ஜமீல் ஹஜரத்(ரஹ்) அவர்களின் ஆலோசனைப்படி இஸ்திகாரா செய்ததில் சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து ரயில் ஏறுவது போல் கனவு கண்டேன்..இதனை என் தந்தையிடம் சொன்னபோது என் தந்தை தேவ்பந்த் செல்ல அனுமதித்தார்.
தேவ்பந்தில் தவ்ரதுல்ஹதீஸில் சேர நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
உருதுவிலும்,அரபியிலும் நடைபெற்ற வாய்மொழித்தேர்வில் மொழி பிரச்சனையால் தோல்வியடைந்து தவ்ரதுல்ஹதீஸிற்கு முந்திய வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.
மதரஸாவின் விதிமுறைகளின் படி தேர்வில் தோல்வியடைந்தவர் காலாண்டு தேர்வில் 35 விழுக்காடு மதிப்பெண்கள் பெறும் வரை அவர்களுக்கு இலவச உணவு கிடையாது கட்டணம் செலுத்தினால் தான் உணவு கிடைக்கும்.
என் தந்தை பொருளாதார சிக்கலிலிருக்கும் போது அவரிடம் எப்படி கூடுதல் பணம் அனுப்பச் சொல்வது என நான் தடுமாறினேன்,
அந்நிலையில் என்னை தேவ்பந்திற்கு அழைத்துச் சென்ற பெரம்பளூர் வடகரை மர்ஹூம் சுல்தான் ஹஜரத் என் அறைத் தோழராக இருந்தவர் "எனக்கு கிடைக்கும் இரண்டு ரொட்டியில் ஒன்றைத் தருகிறேன் வருகிற பணத்தை வைத்து சமாளித்துக்கொள்வோம்"என்றார் பெருந்தன்மையுடன்.
ஏறக்குறைய மூன்று மாதங்கள் மிகவும் சிரமத்துடன் அரைவயிறு நிரம்பிய நிலையிலேயே கழிந்தது.
இந்நிலையில் ஒருநாள் கடுமையான பசி கையில் ஒரு டீ குடிக்கும் அளவுதான் பைசா இருந்தது.
டீ குடிக்க ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கே சூடான #கபாப் தயாரித்துக் கொண்டிருந்தனர். அதை வாங்கி சாப்பிட எனக்கு ஆசையிருந்தாலும் கையில் பைசா இல்லை,அத்துடன் முதலாளியிடம் சென்று கடனாக கொடுங்கள் என்று கேட்கும் அளவு உருது மொழி தெரியாது. எனவே, அதை பார்த்துக்கொண்டு நின்றேன்.
முதலாளி என்னைப் பார்த்து மவ்லவிசாப் கபாப் ஷாஹியே என்றார்" நான் பைசா நஹி" என்றேன்.
அவர் இரண்டு கபாபை கொடுத்து சாப்பிடுங்கள்,மணியார்டர் வந்த பின் பைசா கொடுங்கள்" என்றார்.
பின்னாளில் 'ஏன் பிச்சைக்காரனைப் போல் அங்கேயே நின்று கபாபை வாங்கி சாப்பிட்டோம்' என வருந்தியதுண்டு.
இறுதிவரை என் தந்தைக்கு இந்த நிகழ்வு தெரியாது. தெரிந்திருந்தால் மன வேதனை அடைந்திருப்பார்.
இன்று யாராவது சிறுவர்கள் டீகடை வாசலில் நின்று பிச்சை கேட்டால் இந்த நிகழ்வு என் நினைவிற்கு வரும்.
அந்த மூன்று மாதங்களுக்குப் பின் காலாண்டுதேர்வில்65% மதிப்பெண் பெற்று ரஜாயி எனும் போர்வையும்,உதவி தொகையும் மதரஸாவிலிருந்து கிடைக்கப் பெற்றேன்.
அல்ஹம்துலில்லாஹ் அலா குல்லி ஹால்.
Kaniyur Ismail Najee Manbayee
No comments:
Post a Comment