Friday, November 16, 2018

துபாய் ஈமான் அமைப்புக்கு இன்ப அதிர்ச்சி அளித்த அரசு அதிகாரிகள்



 துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சிறந்த சேவைக்கான விருதினை 15.11.2018 வியாழக்கிழமை வழங்கி இன்ப அதிர்ச்சியை அளித்தனர்.

துபாயில் அரசு பதிவு பெற்ற தமிழக மக்களின் ஒரே சமூக அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் இருந்து வருகிறது. இந்த அமைப்பு கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. துபாய் அரசு சமூக சேவை அமைப்புகளை முறைப்படுத்த புதிய சட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தது. அப்போது பதிவு பெற்ற ஒரே தமிழ் அமைப்பாக ஈமான் கல்சுரல் செண்டர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்த அமைப்பின் தலைவராக அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளராக ஏ. ஹமீது யாசின், துணைத்தலைவராக முஹம்மது மஹ்ரூப்,  மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளராக முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளராக திண்டுக்கல் ஜமால் முஹைதீன், கல்விக்குழு செயலாளராக திருச்சி பைசுர் ரஹ்மான், ஆடிட்டராக நாகூர் ரவூப், அலுவலக மேலாளராக தேவிபட்டிணம் நிஜாம் அக்பர் மற்றும் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர்.

துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீரென தொடர்பு  கொண்டு அமைப்பின் தலைவரை சந்திக்க வேண்டும் என கூறினர். இது வழக்கமாக நடைபெறும் ஆய்வு என நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் திடீரென அந்த அதிகாரிகள் ஈமான் அமைப்பு சிறப்பான சேவைக்கான விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஹுதா அல் புஸ்தகி மற்றும் சம்மா அல் அக்பாபி ஆகியோர் தெரிவித்தனர். அதன் பின்னர் அந்த விருதை ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களிடம் வழங்கினர். அப்போது பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின்,  மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஆடிட்டர்  நாகூர் ரவூப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய அதிகாரி, துபாயில் சமூகப் பணிகள் ஈடுபட்டு வரும் பொது நல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என 100 பேரை தேர்வு செய்து இந்த சமூகப் பணிக்கான விருதை வழங்கி வருகிறோம். இதில் தேர்வு செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஈமான் கல்சுரல் செண்டர் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு ரத்ததான முகாம், மருத்துவ முகாம், தொழிலாளர்களுக்கு உதவிகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தாலும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்காக ஐந்தாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்கும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபட்டு வருவதன் காரணமாக இந்த விருதுக்கு முக்கியமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்களின் பணிகள் இன்னும் சிறப்புடன் தொடர எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் இந்த விருது வழங்கி கௌரவித்த சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த விருது அனைத்து நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டர்கள் என அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஊக்கம் ஆகும். இதன் மூலம் இந்த பணிகளில் இன்னும் சிறந்த முறையில் சேவையை அதிகமதிகம் மேற்கொள்ள உதவியாக இருக்கும். ஈமான் அமைப்பு ரத்ததான முகாம், மருத்துவ முகாம், பேச்சாளர் பயிற்சி முகாம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உதவுதல்,  ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்கும் பணியில் தன்னார்வத்துடன் ஈடுபடுவது, மீலாதுப் பெருவிழா, லைலத்துல் கத்ர் புனித இரவு நிகழ்ச்சி, மிஃராஜ் இரவு, பராஅத் இரவு உள்ளிட்ட மார்க்க நிகழ்ச்சிகள், எதிர்பாராத வகையில் உயிரிழப்பவர்களை சொந்த ஊருக்கு அவர்களது உடல்களை கொண்டு செல்வது என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்த அமைப்பு இத்தகைய சிறப்பை பெறுவதற்கு சமூக நோக்கின் அடிப்படையில் இதனை உருவாக்கிய முன்னோடிகள், மார்க்க அறிஞர்கள் மற்றும் உலமா பெருமக்கள், தமிழ் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

இந்த அமைப்பின் பணிகள் இன்னும் சிறப்புடன் இருக்க அனைவரும் தங்களது பிரார்த்தனைகளை செய்திட  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: