Wednesday, November 7, 2018

பாட்டும் பாவமும்

மதுரை மருத்துவக்கல்லூரி
என்றாலே பல நினைவுகள்
மனதில் வந்து போகும்.

டாக்டர் பசும்பொன்..எனது
நெருங்கிய நண்பர்.தேவர்
பெருமகனாரின் சொந்தக்காரர்.
பெரிய குளத்தை சார்ந்தவர்.
வக்கீலுக்கு படித்து பின்னர்
மருத்துவம் படிக்க வந்தவர்.
வக்கீல் என்பதால் அரசியல்
செல்வாக்கு உள்ளவர்.


நகைச்சுவையாக உரையாடி
மகிழ்வதில் வல்லவர் என்பதால்
சிஷ்யகோடிகள் அதிகம்.
பழைய சினிமா பாடல்களை
அப்படியே மிகவும் தத்ரூபமாக
பாடுவதில் அவரை எவராலும்
மிஞ்ச முடியாது.இவரை
செல்லமாக “பச்சு” என்றே
நாங்கள் அழைப்பது வழக்கம்.

ஒரு முறை....70 களில்
கல்லூரியில் நடந்த
மருத்துவ துறை பிரிவுபசார
நிகழ்ச்சி ஒன்றில் பாடும்படி
இவரை நண்பர்கள் வற்புறுத்தவே
இவர் பாடுவதற்கு முன் வந்தார்.
அந்த குறிப்பிட்ட துறையைச்
சார்ந்த, நடிகை போன்ற
தோற்ற பொலிவில் இருந்த
துணை பேராசிரியை ஒருவரும்
அன்று அந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டார்.

பச்சு பாடுவதற்கு தயார் ஆனார்.
டிஎம்எஸ் குரலில்..கணீரென்று
தெரித்து விழுந்த அந்த பழைய
பாட்டு...

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே...

நண்பர்கள் கைதட்டல்
அரங்கமே அதிர்ந்தது.
பச்சு கூலாக தொடர்ந்தார்.

மந்திர கண்ணாலே
தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே......!

அப்படியே சுருதி குறையாமல்
அடி பிசகாமல் பச்சு தொடர
அடுத்த ஸ்டெப்...

இந்திர வில் நீயே..
சந்திர ஒளி நீயே...
ஈடில்லா உனையே
என் மனம் நாடுதே...!

அவ்வளவு தான்..
அந்த பெண்மணி விருட்டென
எழுந்து வெளியே போய் விட்டார்.
துறை பேராசிரியர் முறைக்க..
பச்சு ஒரு வழியாக பாட்டை
நிறுத்தினார்.

அந்த துறை சம்பந்தப் பட்ட
பரீட்சையில் அந்த வருடம்
பச்சை போட்டு தள்ளி
விட்டார்கள். அந்த
குறிப்பிட்ட பரீட்சையில்
பாஸ் செய்து வெளியே
வருவதற்குள் பச்சுக்கு
போதும் போதும் என்று
ஆகி விட்டது.
பச்சு...
பிறகு கல்லூரி விழாக்களில்
ஒருபோதும் பாடுவதே இல்லை.


Vavar F Habibullah

No comments: