Thursday, November 1, 2018

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -2


அவர்கள்(ஸஹாபாக்கள்) இஸ்லாம் மார்க்கத்தை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவதில் மட்டற்ற ஆர்வம் கொண்டிருந்தார்கள்.அவர்கள் காட்டிய ஆர்வம்,அல்லாஹ்வையே திருப்தியுறச் செய்யும் அளவுக்குத் தூய்மையானது; மகத்தானது(9:100). எத்தகைய தியாகங்களைச் செய்தால் அல்லாஹ்வுடைய சாந்தியும் வெற்றியும் கிடைக்குமோ அத்தகைய தியாகங்களை முழு மனதோடு செய்தவர்கள்(48:18-19).அந்த தியாகங்களின் காரணமாக உண்மையான விசுவாசிகள்- ஸாதிக்கூன்(59:08) என்ற சிறப்பைப் பெற்றவர்கள்.


பற்பல மேன்மக்களிடம் இருப்பதை விடவும் அதிகமான பொருட்செல்வம் சிலபல கீழ்மக்களிடம் இருப்பதையும் உலகம் கண்டுவருகிறது.இதைக் கொண்டு பெறவேண்டிய சிந்தனைத் தெளிவைப் பெற அறியாத சாதாரண மக்கள்,பெரும் பொருள் சேர்த்துக் குவித்து வைத்திருப்பவர்கள் மட்டும்தாம் பெரிய வெற்றியாளர்கள் போலும் என்று கருதிவிடுகின்றனர். ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்களோ பொருட்பேராசையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட வெற்றியாளர்கள் (முஃப்லிஹூன் 59:9) என்று உலகம் கண்டும் கேட்டும் இராத புதுமையான பாராட்டுப் பத்திரத்தை எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருந்தே பெற்றவர்கள்!

திருத்தோழர்களாம் ஸஹாபா பெருமக்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய இறுதித்தூதர்(ஸல்) அவர்களையும் நம்புவதிலும் நேசிப்பதிலும் எந்தக் குறையையும் கூறிவிட முடியாத அளவுக்கு முழு உறுதி கொண்டிருந்தனர்.அதன் பயனாக அவர்கள் திருக்குர்ஆனையும் திருத்தூதர்(ஸல்) அவர்களின் நிறைமொழிகளையும் பெருமளவில் பாடம் செய்து வைத்திருந்தனர். அந்தப் பாடத்திற்கு எப்படி விளக்கம் பெற வேண்டுமோ அப்படி விளக்கம் பெற்றுக் கொண்டவர்கள்.பெற்ற விளக்கத்திற்கு ஏற்ப அதைத் தூய உணர்வுகளோடு செயற்படுத்தியவர்கள். அதற்கு அடையாளமாக ஒரு சமுதாயத்தை உண்டாக்கி, ஓர் அரசாங்கத்தையே நிறுவுவதில் நேரிடையாகப் பங்குபெற்றவர்கள்.

திருத்தோழர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு சொல்லாலும் செயலாலும் பொருளாலும் எழுத்தாலும் ஏன், மொத்த வாழ்வாலும் மாபெரும் பிரச்சாரப் பணியைச் செய்து வந்த களப்பணியாளர்கள். மறுமையின் உண்மையைப் பற்றி எந்த ஐயப்பாடும் இன்றி அதன் வெற்றிக்காக உழைத்து வந்தவர்கள்.வல்ல அல்லாஹ் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான தனிச் சிறப்புகளாகப் பலவற்றை அருள் செய்திருந்தான்.அப்படி இருந்தும் அவர்கள் தம்மை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தலைவராகவோ, முக்கியத்துவம் மிக்கவராகவோ, மேய்ப்பராகவோ காட்டிக் கொள்ளவில்லை; தன்னலக் குழுக்களை உருவாக்கிக் கொண்டு பிறருக்குத் தவறான வஞ்சகமான வழிகாட்டிகளாக இருந்தபடி சொகுசு வாழ்வு வாழவில்லை.

மொத்தச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஒருவருக்கொருவர் உண்மையான ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்ட அவர்கள், மனிதகுல மேம்பாட்டுக்கும் அரும்பாடுபட்டவர்கள். ஒருநாளைக்குச் சராசரியாக எண்ணூற்று இருபத்து இரண்டு சதுர கிலாமீட்டர் பரப்பளவு என்ற கணக்கில் பத்தாண்டு காலத்திற்குள் சற்றேறத்தாழ முப்பது லட்சம் சதுர கிலாமீட்டர் பரப்புக்கு இஸ்லாம் மார்க்கச் செய்தியையும் பரப்புரை செய்தனர்; அதன் நற்பயனாக இஸ்லாமிய அரசின் எல்லையையும் விரிவுபடுத்தினர்! அத்தகைய ஆற்றல் மிக்க உன்னதமான உழைப்பாளிகள் அவர்கள்.

அற்பச் செய்திகளைப் பெரிதுபடுத்தி, சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தம்முடைய அற்பத்தனமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகளையெல்லாம் தவறாகப் பயன்படுத்தும் மனிதர்களாக இவர்கள் இருந்திருந்தால் இத்தகைய மதிப்பு வாய்ந்த மார்க்கப் பணிகளைச் செய்திருக்க முடியுமா?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்,அறிவோம்)

--- ஏம்பல் தஜம்முல் முகம்மதுYembal Thajammul Mohammad

ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள்-(4)
ஸஹாபாக்கள் என்றால் யார்? அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -1

No comments: