Thursday, October 18, 2018

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -2


இரவில் ஓர் உதயம்

டிக்ரித் நகரின் கோட்டையில் இருந்த காவல் அதிகாரிகள் அதைக் கவனித்துவிட்டார்கள். டைக்ரிஸ் ஆற்றை ஒட்டிக் குதிரைகளின் படையொன்று காற்றில் புழுதியைப் பரப்பி வேகவேகமாக வந்து கொண்டிருந்தது.

உடனே ஆளுநருக்குத் தகவல் பறந்தது. ஆளுநரும் அவருடைய சகோதரரும் விரைந்து வந்தனர்.

அந்தப் படையினர் மோஸூல் நகரைச் சேர்ந்தவர்கள், டிக்ரித்துக்கு அருகிலுள்ள ஸெல்ஜுக் நகரின் மன்னர் முஹம்மது இப்னு மாலிக் ஷாவின் பக்தாத் படையினருக்கு எதிராக அவர்கள் போரிட்டிருந்தனர். அப்போரில் மன்னரின் படை வெற்றியைத் தழுவியது. பின்வாங்கிய மோஸூல் தளபதி தம் குதிரைப் படையினருடன் டிக்ரித் நகரை வந்தடைந்திருந்தார். காயங்களுடன் வந்திருந்தவர்களைத் தம் கண்களால் ஆராய்ந்தார் ஆளுநர் நஜ்முத்தீன் ஐயூப். ஸெல்ஜுக் மன்னரால் டிக்ரித் நகருக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர் அவர்.


தென்கிழக்குத் துருக்கியில் தொடங்கி, சளைக்காமல், அலுக்காமல் இராக் வழியாக 1750 கி.மீ. ஓடும் மகாநதி டைக்ரிஸ். அதன் பாதையில் கால் நனைத்தபடி அமர்ந்திருக்கும் நகரங்களில் ஒன்றுதான் டிக்ரித். பிற்காலத்தில் இந்த நகரில்தான் இராக்கின் அதிபர் ஸத்தாம் ஹுஸைன் பிறந்தார். பக்தாத் நகரிலிருந்து வடக்கே 186 கி.மீ., மோஸூல் நகரிலிருந்து தெற்கே 230 கி.மீ., என்று ஏறக்குறைய அவ்விரு பெருநகரங்களின் நடுவில் அமைந்துள்ள டிக்ரித் நகர், இராக்-சிரியாவுக்கு இடையிலான போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்த நகரம். அங்கு வசித்தவர்களுள் பெரும்பான்மையினர் குர்து இனத்தவர்.

குர்து இனத்தைச் சேர்ந்த ஷாதிப்னு மர்வான் என்பவர், தம் இரு மகன்களுடன் அந் நகருக்கு வந்து சேர்ந்து, டிக்ரிதில் குர்தியர் பல்கிப் பெருகிய முன்கதை இங்கு நமக்கு முக்கியம். அதானல் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

குர்துக் குலங்களுள் ஒன்றான அர்-ரவாதியா என்ற குலத்தைச் சேர்ந்தவர் ஷாதி. தாவீன் எனும் நகரம்தான் அவரது பூர்வீகம். அஸ்ஹர்பைஜானின் கொல்லைப்புற எல்லையில் அர்மீனியாவின் டிஃப்லீஸ் நகரின் அருகே அமைந்துள்ள தாவீன், மத்திய கால அர்மீனியாவின் தலைநகரம். அங்கு ஆட்சி புரிந்த ஷத்தாதித் வம்சத்துடன் ஷாதியின் குடும்பத்தினருக்கும் இனத்தினருக்கும் இணக்கமான உறவு இருந்து வந்தது. ஆனால், ஷத்தாதித்தரின் ஆட்சி நீக்கப்பட்டு அரசியல் மாற்றம் நிகழ்ந்ததும், நிலைமை சரியில்லாமல்போய், அங்கிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து நெடும்பயணமாக பக்தாத் வந்து சேர்ந்தார் ஷாதி. பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இப்னு அதீர் என்னும் புகழ் மிக்க வரலாற்றாசிரியர், ‘ஷாதியின் ரவாதியா குலத்தினர் உயர்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்; எக்காலத்திலும் அவர்கள் யாருக்கும் அடிமைப்பட்டுக் கிடந்ததில்லை’ என்று அவர்களது மேன்மையைக் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்.

ஸெல்ஜுக் மன்னர் முஹம்மது இப்னு மாலிக் ஷாவின் ஆளுநர்களுள் ஒருவர் பஹ்ரூஸ் அல்-காதிம். அவர் பக்தாதில் வசித்து வந்தார். அவருடன் ஷாதிப்னு மர்வானுக்கு நட்பு ஏற்பட்டு, வலுவடைந்தது.  ஷாதியின் குணநலன்கள், பஹ்ரூஸுக்கும் பிடித்துப்போயின. டிக்ரித் நகரில் அவருக்கு ஒரு கோட்டையை ஒதுக்கியிருந்தார் மன்னர். ஷாதிக்கு அந்தக் கோட்டையின் நிர்வாகப் பொறுப்பு வழங்கி அனுப்பி வைத்தார் பஹ்ரூஸ். டிக்ரித்துக்கு வந்து சேர்ந்தது ஷாதியின் குடும்பம்.

டிக்ரித் நகரின் உயரமான பகுதியில் டைக்ரிஸ் நதியைப் பார்த்து ரசித்த வண்ணம் மிக வலுவாக நின்றிருந்தது அந் நகரின் கோட்டை. பாரசீகர்கள் பண்டைக் காலத்தில் பாறைகளுக்கு இடையே அந்தக் கோட்டையைக் கட்டி எழுப்பியிருந்தார்கள். ஆயுதக் கிடங்காகவும் எதிரிகளின் நடமாட்டத்தை நோட்டமிடவும் பயன் பட்ட பல நூறாண்டு கால வரலாறு அதற்குச் சொந்தம். உமர் இப்னுல் கத்தாப் (ரலி) கலீஃபாவாக ஆட்சி செலுத்தியபோது, ஹிஜ்ரீ 16ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் கைக்கு வந்து சேர்ந்திருந்தது அக் கோட்டை.

அதன் நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற ஷாதிப்னு மர்வான் தம் திறமையினாலும் சாதுரியத்தினாலும் வேகமாக முன்னேற, கோட்டைக் காவல்படையின் நிரந்தரமான பதவியொன்று அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதில் நீண்ட காலம் நீடிக்க முடியாமல் அடுத்த சில ஆண்டுகளில் அவரது ஆயுள் முடிவற்றது. ஷாதி இறந்த பிறகு அந்தப் பதவியை அவருடைய மூத்த மகன் நஜ்முத்தீன் ஐயூபுக்கு வழங்கினார் பஹ்ரூஸ்.

நேர்மை, தீரம், அறிவு முதிர்ச்சி நிரம்பியிருந்த நஜ்முத்தீனை மன்னருக்கு மிகவும் பிடித்துப்போய், ‘இந் நகரை இனி நீ ஆளவும்’ என்று டிக்ரித்துக்கு ஆளுநராக்கிவிட்டார் அவர். கிடைத்த பதவியில் திறம்பட செயல்பட ஆரம்பித்தார் நஜ்முத்தீன். நகரிலிருந்த கள்வர்களும் கயவர்களும் துரத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு மக்களுக்குப் பாதுகாவல், வர்த்தகர்கள் அச்சமின்றி தொழில் புரிய பாதுகாப்பு என்று செம்மையாக அமைந்தது அவரது நிர்வாகம்.

ஷாதியின் மற்றொரு மகனும் நஜ்முத்தீனின் சகோதரருமான அஸாதுத்தீன் ஷிர்குவும் மன்னரின் கருணைப் பார்வைக்கு இலக்காகத் தவறவில்லை. டிக்ரித் நகரிலும் அதைச் சுற்றிலும் அமைந்திருந்த பகுதிகளிலும் ஷிர்குவுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றிலிருந்து தாராளமாக வளம் வந்து குவிய, அக்கால மதிப்பீட்டில் ஆண்டிற்கு 900 தீனார் வருமானம் ஷிர்குவுக்கு.

இவ்விதம் ஸெல்ஜுக் மன்னரின் ஆளுநர்களாக அச் சகோதரர்கள் வசித்து வந்த அந்நகருக்குத்தான் வந்து சேர்ந்தார், அதே ஸெல்ஜுக் மன்னரின் படைகளிடம் தோற்றுப் பின்வாங்கிய இமாதுத்தீன்.

ஸெல்ஜுக் மன்னர்களின் ஆளுநர்களாகத் திகழ்ந்த துருக்கியர்களின் வழித்தோன்றல்களுள் ஒருவரே இமாதுத்தீன். அவருடைய தந்தைக்கு அப்போதைய ஸெல்ஜுக் மன்னருடன் அமைந்திருந்த நட்பு, அதனால் அவர் பெற்ற ஆட்சி அதிகாரப் பொறுப்பு, இமாதுத்தீனுடைய தந்தையின் கொலை, மன்னரின் மரணம், அதைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்து வாரிசு அரசியல் போர், இமாதுத்தீனின் அரசியல் சார்பு நிலை என்பனவெல்லாம் தனிப் பெரும் அத்தியாயங்கள்.

இங்கு நமக்குத் தேவை ஹிஜ்ரீ 527, கி.பி. 1132ஆம் ஆண்டு அந்த அரசியல் களேபரங்களின் ஒரு பகுதியாக அவர் ஸெல்ஜுக் மன்னரிடம் போரிட்டுத் தப்பி வந்த இந்த நிகழ்வு மட்டுமே.

oOo

ஆளுநர் நஜ்முத்தீனுக்கு இரண்டே வழிகள்தாம் இருந்தன. ஒன்று அவர்களைத் தம் மன்னரிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும்; அல்லது கொல்ல வேண்டும். இரண்டாவது அவர்கள் தப்பிச்செல்ல அனுமதிக்க வேண்டும். அந் நிலையில் அவர் என்ன செய்வார்? மேற்சொன்னதில் இரண்டாவது முடிவை எடுத்தார் நஜ்முத்தீன் ஐயூப். அது காரணம் புரியாத ஆச்சரியம்! பிற்கால வரலாற்று நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டுச் செதுக்கியது போன்ற திருப்புமுனை.

ஏன்தான் அப்படியொரு முடிவை எடுத்தார்?, எந்தத் துணிவில் அதைச் செய்தார்? என்று அனுமானங்களைத்தாம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர ‘இதுதான் காரணம்’ என்று நிச்சயமான கருத்து எதுவும் இல்லை. இயல்பிலேயே தாராள மனம் கொண்டவர் நஜ்முத்தீன் ஐயூபி. அது காரணமா, அல்லது இமாதுத்தீனின் மீது அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை, வரலாற்றில் அவர் பெரும்பங்கு வகிக்கப் போகிறார், சாதிக்கப் போகிறார் என்ற தூரநோக்கு, தீர்க்கதரிசனம் அவருக்கு இருந்ததா என்பதைத் தெளிவாகக் கூற முடியவில்லை. ஆனால் உதவினார் என்பது மட்டும். உண்மை.

அவர்களது காயங்களுக்கு மருந்திட்டு, தேவையான உதவிகள் செய்து, படகுகளையும் அளித்து இமாதுத்தீன் மோஸூலுக்குத் திரும்பிச் செல்ல பேருதவி புரிந்தார் நஜ்முத்தீன். தம் மன்னருக்கு எதிராகப் போர்க் களம் கண்டு, அதில் தோல்வியுற்று ஓடிவந்த இமாதுத்தீனுக்கும் அவர்தம் படையினருக்கும் பேருதவி செய்த ஆளுநர் நஜ்முத்தீன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவரை அவரது பொறுப்பில் தொடரச் செய்தார் பஹ்ரூஸ் என்பது அடுத்த ஆச்சரியம்! ஆனால் அவரது மனத்திற்குள் அந் நிகழ்வின் உறுத்தல் இருந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. பின்னர் வேறொரு நிகழ்வில் அதிகப்படியான பின்விளைவாக அது வந்து விடிந்ததைப் பார்க்கும்போது அப்படித்தான் கருத முடிகிறது.

இந் நிகழ்விற்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் கழிந்திருக்கும். ஒருநாள் அஸாதுத்தீன் ஒரு கொலை செய்தார். கோட்டையின் தளபதி ஒருவன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ய, அவள் எழுப்பிய அபயக்குரலுக்கு ஓடிய அஸாதுத்தீன் ஷிர்கு அவனைக் கொன்றுவிட்டார். பக்தாதுக்கு இவ்விபரம் தெரிய வந்ததும் தளபதிகள் மத்தியில் இது கடும் பின்விளைவை ஏற்படுத்தும் என்பதைப்போல் காரணம் காட்டி, நஜ்முத்தீன்-ஷிர்கு சகோதரர்களின் பதவிகளைப் பறித்து, பொறுப்புகளை விட்டு நீக்கி, 'நீங்கள் இருவரும் உடனே ஊரைவிட்டு அகலவும்'  என்று உத்தரவிட்டார் பஹ்ரூஸ்.

ஆட்சி புரிந்த ஊரையும் ஆண்ட கோட்டையையும் விட்டுவிட்டு சகோதரர்கள் இருவரும் இரவோடு இரவாகத் தம் குடும்பத்தினருடன் ஊரை விட்டு வெளியேறும்படி ஆனது. எங்குச் செல்வது, என்ன செய்வது, எப்படிப் பிழைப்பது என்று திக்கற்றுத் திகைத்தவர்களுக்கு வடக்குத் திசையில் ஒளி தெரிந்தது. மோஸூல் நகர வாசலை அகலத் திறந்து வைத்து, நன்றிக் கடனையும் அன்பையும் நெஞ்சில் சுமந்து, சகோதரர்களை வரவேற்கக் காத்திருந்தார் ஸெங்கி. அடுத்த சில ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுடன் ஜிஹாதை ஆரம்பித்து வைத்து அவர்களது முதுகெலும்பான எடிஸ்ஸா மாகாணத்தை உடைத்துக் கைப்பற்றப்போகும் இமாதுத்தீன் ஸெங்கி.

‘செல்வோம் மோஸுல்’, என்று நஜ்முத்தீன், ஷிர்குவின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடைய சேவகர்களும் கிளம்ப, அந்த இரவில், ஹவ்தாவில் வீலென்று அலறினார் நஜ்முத்தீனின் மனைவி. நிறைமாத சூலியான அவருக்கு அந் நேரம் பார்த்துப் பிரசவ வலி! அத்தனைப் பரபரப்புக்கும் பதட்டத்திற்கும் இடையே, அங்கே அந்த இரவில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. யூஸுஃப் என்று பெயரிட்டுவிட்டு, குழந்தை பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாட இயலாத நிலையில் பெரும் துக்கத்துடன் காட்சியளித்தார் நஜ்முத்தீன்.

அந்தத் துயர முகத்தைப் பார்த்த அவருடைய சேவகர், “ஐயா! தாங்கள் இக் குழந்தையைத் துக்க அறிகுறியாகப் பார்க்கின்றீர்களோ? பாவம், இக் குழந்தை என்ன செய்யும்? தீமையோ நன்மையோ கொண்டுவரும் ஆற்றலற்ற இக் குழந்தையைத் தாங்கள் அவ்விதம் பார்க்க வேண்டாம். நடைபெறும் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டமேயன்றி வேறில்லை. யாரறிவார், பிற்காலத்தில் இக் குழந்தை அல்லாஹ் நாடினால் ஆட்சியில் பெரும் பங்கு வகிக்கும் ஆற்றலுடைய மனிதனாக உருவாகலாம். ஸுல்தானாகலாம், புகழ் மிகப் பெறலாம், உயர்ந்து சாதிக்கலாம்.  இப் பச்சிளங் குழந்தையிடம் வருந்தாதீர்கள். அதற்குத் தங்களின் துக்கம், சோகம், அவலம் எதுவும் தெரியாது” என்று கூறினார். நஜ்முத்தீன் ஐயூபுக்கு அவ் வார்த்தைகள் பெரும் ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்க அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அது ஹிஜ்ரீ 532, கி.பி. 1137ஆம் ஆண்டு. எதிர்வரும் காலம் தங்களுக்காக முக்கியமான இடத்தை ஒதுக்கி வைத்துக்  காத்திருப்பதையும் அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை; அக் குழந்தை யூஸுஃப் பிற்காலத்தில் ஸுல்தான் ஸலாஹுத்தீனாக உருவெடுத்து உலக வரலாற்றில் சாதனை படைக்கப் போகிறது என்பதையும் அறியவில்லை. பச்சிளங் குழந்தை யூஸுஃபின் அழுகையொலிப் பின்னணியுடன் மோஸூலை நோக்கி நகர ஆரம்பித்தது ஐயூபி குடும்பத்தினரின் குழு.

oOo

வளர்வார் ...

-நூருத்தீன்

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர் -1

http://www.satyamargam.com/



No comments: