Tuesday, October 16, 2018

அது_ஒரு_கல்லூரிக்_காலம் ..



வருஷம் 1973
நாகர்கோயில் இந்துக் கல்லூரியில்
படிச்சிட்டிருந்தேன்.
சின்ன வயசிலேயே பளுதூக்குவது
பார் விளையாடுவது
கர்லாக்கட்டை சுத்துவதுன்னு
என் வாழ்க்கை சுத்திகிட்டு இருந்துது.
வீட்டில மாட்டுக்கு கொடுக்குற பருத்திக் கொட்டையில் எனக்கும் ஒரு கப் பருத்திப் பால் கிடைக்கும்.
பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவேன்.
ஆணழகன் போட்டியில் ஜெயிக்கணும்.
வெயிட் லிப்டிங் சாம்பியன் ஆகணும் என்பது லட்சியம்.
காலேஜ்ல வெயிட் லிப்டிங் டீம்ல
நானும் ஒருத்தன்.
வருஷா வருஷம் மதுரையில் நடக்கும்
யூனிவர்சிட்டி போட்டியில கலந்துகிட்டு
வெற்றியோ தோல்வியோ அடைவதுண்டு.
அப்போ மதுரை மருத்துவக் கல்லூரியில்
என் அண்ணன் ஹபிபுல்லாஹ் டாக்டருக்கு படிச்சிட்டுஇருந்தாரு.
நான் மதுரைக்கு போகும்போது வீட்டில் ஏதாவது பண்டம் தருவாங்க.
அதை அண்ணன்கிட்ட கொண்டு கொடுத்து விட்டு அவரது ஹாஸ்டல்லயே
தங்குறது உண்டு.

அண்ணனோட ரூம்மேட்ஸ்க்கு என்னை பார்த்து ஆச்சரியமா இருக்கும்.
" டேய் ... இங்க பாருடா ..
ஹபிபுல்லாக்கு பிரதர் வெயிட் லிப்டர்டா ... யூனிவர்சிட்டி காம்பொடீசனுக்கு வந்திருக்காருடா .."
அப்படின்னு ஒருத்தரோட ஒருத்தர்
சொல்லி சந்தோஷப்படுவாங்க.

அண்ணன் ஹபிபுல்லாஹ் அவங்க வட்டத்தில அப்பவே ஹீரோதான்.

அண்ணனோட படிச்சவங்க
நாகர்கோயில் டாக்டர் சலீம்
கோட்டாறு டாக்டர் ஜபருல்லாஹ் ஆகியோர்.
ஒரு சைக்கிள் வச்சிருந்தாரு.
அதில காலேஜுக்கும் ஹாஸ்டலுக்கும்
போய்வருவாரு.
பார்க்கவே அழகா இருக்கும்.
காலேஜ் ஹாஸ்டல்லதான் எனக்கும் சாப்பாடு.
சூப்பரா இருக்கும்.

பளுதூக்கும் போட்டி மாலை நேரத்தில் நடைபெறும்.
அதன் நடுவர்களில் ஒருவர்
அண்ணனோடு படித்த டாக்டர்
அலெக்சன் தேவசகாயம் .
அவர் மிகச்சிறந்த பாடி பில்டர்.
மதுரை மருத்துக் கல்லூரி
ஆணழகன் பட்டம் பெற்றவர்.
நல்ல வாட்டசாட்டமா ஆளு. மசில்செல்லாம்
அப்படி ஜம்முன்னு இருக்கும்.
அவரோடு இன்னொரு நடுவர் .
கூடவே கபரியேல்னு
இன்னொருத்தர் .
அவர்தான் தலைமை நடுவர்.
அப்பவே ஒலிம்பிக் வரை போயி பதக்கம் வாங்குன ஆளு அவரு.
அதனால இன்டர்நேஷனல் ரூல்ஸ்படிதான் போட்டியை நடத்துவாரு.

அதன் முதல் கட்டம் பாடி வெயிட்டை
துல்லியமா நோட் பண்ணிக்குவாங்க.
ஒரு பெரிய வெயிட் மெஷினை கொண்டு வந்து அதில நம்மை ஏற வச்சு வெயிட் பார்ப்பாங்க.
அங்கேதான் பெரிய மானக்கேடு.
ஜட்டியோட போய் நின்னா ஜட்டியை அவுக்க சொல்லிருவாங்க.
அரைஞாண் கயிறைக்கூட அவுத்துருவாங்க.
அவ்வளவு துல்லியமா வெயிட்டை பாக்குறாங்களாம்.
நான் தலையெழுத்துடான்னு
கையால மறைச்சுகிட்டு ஏறி நின்னேன்.
ஒரு வழியா போட்டியில் ஜெயிக்கவும் செய்தேன்.
டாக்டர் அலெக்ஸ் ரொம்பவே சந்தோஷப்பட்டு பாராட்டினாரு.

ஜெயிச்ச சந்தோஷத்தில அண்ணன்கிட்ட நூறோ இருநூறோ வாங்கிக் கொண்டு மெட்ராஸ் போயிருவேன்.
மெட்ராஸ்ல அண்ணன் ரஹீமுல்லாஹ்
39 அரண்மனைக்காரன் தெருவில
தங்கி இருந்தாரு.
கூடவே நம்ம ஊர்காரங்க நிறையபேரு அங்கே இருந்தாங்க.
குறிப்பா ...
அண்ணனும் நண்பருமான
முஹம்மது மன்னான் ஜமாலி.
ஜமாலியாவில பட்டம் வாங்கின ஆலிம்.
நல்ல கலகலப்பான ஆளு.
அங்கே ஒரு நாலு நாள் நின்னு
ஈகா , தேவி , சபையர் தியேட்டர்களில்
புதுப்படங்களை பார்த்து விட்டு ஊருக்கு வருவேன்.

ஊருக்கு வந்தா பேப்பர்ல நம்ம பேரு போட்டு வந்திருக்கும் செய்தியை வாப்பா
பத்திரமா எடுத்து வச்சிருந்து எங்கிட்ட காட்டி சந்தோஷப்படுவாங்க.

அந்த சந்தோஷமான காலம் முடிஞ்சு
கல்யாணமாகி
அரேபியா போயி
ஊர்ல செட்டிலான பிறகு ஒருநாள்
டாக்டர் அலெக்ஸைப் பார்த்தேன்.
ஆள் ரொம்ப மெலிஞ்சு காணப்பட்டார்.
என்ன இப்படி ஆயிட்டீங்கன்னு கேட்டேன்.
வேலை அதிகம்.
கூடவே புகைப்பழக்கம்.
உடம்பு விட்டுப்போச்சுன்னு வருத்தப்பட்டாரு.
சொந்தமா ஆஸ்பத்திரி வச்சிருக்காரு.
மனநல மருத்துவமனை.

அப்புறம் அவரை பார்க்கும் சந்தர்ப்பம் வரல்லே.
1998 ...
என் வாழ்க்கையில் மறக்க முடியாத வருடம் .
என் அருமை மகள் ஹாஷிமா
ஒருசில நாட்கள் காய்ச்சலில்
எங்களைப் பிரிந்து
இறைவனளவில் சேர்ந்து விட்டது.

தாங்க முடியாத அதிர்ச்சியில்
நானும் என் மனைவியும்
ரொம்பவே அல்லலுற்றோம்.
உறக்கம் வராத அந்த இரவுகளை
இப்போது நினைத்தாலும் உறக்கம் வராது.
ஒரு நாள் இருநாளல்ல
ஒரு மாதம் ஆகியும் நிலமை சீரடையவில்லை.
அப்போதுதான் டாக்டர் அலெக்சின்
ஞாபகம் எனக்கு வந்தது.
என் மனைவியை அழைத்துக் கொண்டு
டாக்டரைப் போய் பார்த்தேன்.

விஷயத்தைக் கேட்டு மிகவும் வருந்தி ஆறுதல் கூறினார்.
மனம் சமாதானமடைவதற்காக
கொஞ்சம் மருந்துகளையும் தந்தார்.
அவையெல்லாம்
ஆழமான உறக்கத்தில் ஆழ்த்தக்கூடிய
மாத்திரைகள்.
அவற்றை உட்கொண்ட பிறகு
உறங்க முடிந்தது.
காலம் காயங்களை ஆற்றும் சக்தி படைத்தது .
எங்கள் மனக்காயங்கள் மருந்திட்டு
குணமாக்க முடியாத காயங்களென்றாலும் மனதை சமாதானமாக்கிக் கொண்டு
வாழ்கிறோம்.

சில தினங்களுக்கு முன்னால்
டாக்டர் அலெக்ஸைப் பற்றி
என் அண்ணன் டாக்டர் ஹபிபுல்லாஹ்
( Vavar F Habibullah )
ஒரு பதிவு போட்டிருந்தார் .
அதைப் பார்த்ததும்
இதை எழுதத் தோன்றியது.

Abu Haashima

                               அண்ணன் ரஹீமுல்லாஹ்வுடன்

டாக்டர் அலெக்ஸ்
                                     டாக்டர் ஹபிபுல்லாஹ்

                                மருத்துவக் கல்லூரி ஹாஸ்டல்


             வலது பக்கம் கடைசியில் நான்Abu Haashima


No comments: