Wednesday, October 31, 2018
வரலாறு_சொல்லும் உண்மைகள்..
கலீபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியில் நடந்த பல சம்பவங்கள் விழிப்பையும், வியப்பையும் நமக்குக் கற்றுத் தருகிறது..
அதில் ஒரு சில சம்பவங்களை உங்கள் பார்வைக்கு அறிய தருவதில் மகிழ்கிறேன்..
அவசியம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிகழ்வுகள்..
உமர்(ரலி) ஆட்சி காலத்தில் அரசாங்கப் பொறுப்பிலிருந்த அதிகாரிகள் அனைவரும் ஹஜ்ஜுடைய பருவத்தில் வரவழைக்கப் படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது..
அப்படி ஒரு முறை அவர்கள் அழைக்கப்பட்ட போது,
"இவர்களில் யாரைப் பற்றியாவது ஏதாவது முறையீடு யாருக்காவது இருந்தால் பகிரங்கமாக தெரிவிக்கலாம்"
என உமர் அவர்கள் மக்களுக்கு அறிவிப்பு கொடுத்தார்கள்..
அப்போது ஒரு மனிதர் எழுந்து ஒரு அதிகாரியை சுட்டிக் காட்டி
"இவர் காரணமின்றி எனக்கு நூறு கசையடி வழங்கினார்" என முறையிட்டார்..
"எழுந்து வந்து அவரை பழி தீர்த்துக் கொள்ளுங்கள்"
என உமரவர்கள் அவரை அழைத்தார்கள்..
அது சமயம் அங்கிருந்த எகிப்தின் ஆளுனர் அம்ரு இப்னுல் ஆஸ் உமரிடம்,
"இத்தகைய நடவடிக்கையால் அதிகாரிகள் மனம் தளர்ந்து விடுவார்கள் அதனால் தவிர்க்கலாமே" என வேண்டுகோள் விடுத்தார்கள்..
ஆயினும் "பாதிக்கப்பட்டவருக்கு உரியதைப் பெற்றுத் தராமல் என்னால் இருக்க முடியாது."
என உமரவர்கள் உறுதிபடச் சொல்லி விட்டார்கள்..
ஜபுலா இப்னு ஹைஹன் என்பவர் சிரியாவின் ஒரு சிற்றரசராக இருந்தார்..
இவர் முஸ்லிமாக மாறி வந்தவர்.. ஒரு முறை கஃபாவை தவாஃப் செய்து கொண்டிருந்த போது அவருடைய இஹ்ராம் ஆடை பக்கத்தில் வந்து கொண்டிருந்தவரின் கால்களுக்குள் சிக்கி கொண்டது..
கடும் கோபமடைந்த ஜபலா அவரை அறைந்து விட்டார்.. பதிலுக்கு அந்த நபரும் ஒரு அறை கொடுத்து விட்டார்..
இந்த விஷயம் உமரவர்களின் காதுக்கு வந்த போது "நீங்கள் செய்ததற்கான பின் விளைவை அனுபவித்து விட்டீர்கள்" என்று மட்டும் கூறினார்கள்..
"நாங்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா..!?"
என்று ஜபாலா கேட்கவும்..
உமர் அமைதியாக சொன்னார். "ஜாஹிலிய்யத்தில் நாங்களும் இப்படிதான் நினைத்து கொண்டிருந்தோம்.. இஸ்லாம் வந்த பிறகு இங்கு மேடு பள்ளங்கள் எல்லாம் ஒன்றாகி விட்டன."என்றார்கள்..
ஒரு தடவை உமரவர்களை சந்திப்பதற்காக குறைஷித்தலைவர்கள் பலர் வந்திருந்தார்கள்..
எதேச்சையாக அதே சமயத்தில் ஸுஹைப், பிலால்,அம்மார் ஆகியோரும் உமரவர்களை சந்திக்க காத்திருந்தார்கள்..
இவர்கள் ஒரு காலத்தில் குறைக்ஷிகளிடம் அடிமையாக இருந்தவர்கள்..
உமரவர்கள் அவர்களை சந்திப்பதற்கு தான் முதலில் அனுமதி வழங்கினார்கள்..
குறைக்ஷி தலைவர்கள் வெளியே காவல் இருந்தார்கள்..
இதை கண்ட அமர்ந்திருந்த அபூ சுஃப்யான் சொன்னார்..
"இறைவனுடைய ஆற்றலை என்னவென்று சொல்வது.. அடிமைகளுக்கு அரசாங்கத்தின் சன்னி தானத்தில் நுழைவதற்கு அனுமதி கிடைக்கிறது..
நாமோ இங்கு காத்துக் கிடக்கிறோம்.."
உமர் அவர்கள்
நோயுற்ற நேரம் அது.
தேனை அருந்தினால் நோய் குணமாகி விடும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்கள்..
பொதுநிதியில் தான் கலப்பற்ற சுத்தமான தேன் இருந்தது..
அந்த தேனை எடுத்து பயன்படுத்த பொதுமக்களிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை..
இருந்தாலும் மஸ்ஜுதுன் நபவி பள்ளிவாசலுக்கு சென்று மக்களை எல்லாம் ஒன்று கூட்டி,
"பைத்துல்மால் பொதுநிதியிலிருந்து உங்களுக்குரிய தேனை நான் சற்று பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்கின்றீர்களா..?"
என அனுமதி கேட்டார்கள் என்றால் பொதுநிதி மக்களின் பணம் அதை ஆட்சியாளர்கள்
தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது.. என்பதின் அவசியத்தை புரிந்து கொள்வது கண்டிப்பாகிறது..
உமர் அவருடைய ஆட்சியில் சட்டத்திற்கு முன்னால் கண்ணியம் வாய்ந்தவரும், கடைக்கோடியில் உள்ளவரும் சமமாகவே பாவிக்கப்பட்டார்கள்..
பணக்காரன்,ஏழை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என அனைவரும் சரிசமமாக
நடத்தப்பட்டார்கள்..
உபை இப்னு கஅப் அவர்கள் உமர் அவர்களோடு ஏற்பட்ட ஒரு பிரச்சினையில் ஸைத் இப்னு ஸாபித்திடம் ஒரு வழக்கைக் கொண்டு சென்றார்கள்..
இங்கு நாட்டின் கலீபாவாக இருந்த
உமர் அவர்களின் செயல்பாடுகள் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவாக சொல்லித் தருவதை பின்வரும் நிகழ்வுகளின் வழி அறிந்துக் கொள்ளலாம்..
நீதிமன்றத்தில் உமர் அவர்கள் நுழைந்ததும் நீதிபதி ஸைத் அவருக்கு மரியாதை செலுத்தினார்..
உடனே நீதிபதியை பார்த்து உமர் சொன்னார்கள்.
"நீங்கள் இழைக்கும் முதல் அநீதி இதுவாகும்.."என்றார்கள்..
அடுத்து அமீருல் முஃமினீனிடம் (கலீபா) சத்தியம் பெறாமல் அவருக்கு விலக்கு அளியுங்கள் என நீதிபதி ஸைத் கூறவும், கோபம் கொண்ட உமர் அவர்கள்,
"ஒரு சாதாரண மனிதனையும் உமரையும் சரிசமமாக பாவிக்கும் நிலையில் நீங்கள் இல்லையெனில்
நீதிபதி பொறுப்பில் தொடர்வதற்கான தகுதியையே நீங்கள் இழந்து விடுகிறீர்கள்."
என்றார்கள்..
சிந்தித்து சீர்தூக்கி அலசிப் பார்த்தப்
பிறகு தான் எந்த
செயலையும் நடைமுறை படுத்தும் தன்மை உமர் அவர்களிடம் இருந்தது..
வெளித்தோற்றத்தை நம்பி ஒருபோதும் எந்த செயலையும் உமர் அவர்கள் செய்யவில்லை..
ஒரு மனிதனின் புகழும்,செல்வாக்கும் உங்களை மயக்கத்தில் ஆழ்ந்தி விட வேண்டாம்..
ஒரு மனிதனின் தொழுகையையும்,நோன்பையும் பார்க்காதீர்கள்.. அவனுடைய அறிவையும்,
வாய்மையையும் பாருங்கள்..
இந்த உபதேசங்களை உமர்(ரலி)அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்..
காந்தியடிகள் கூட சொன்னார் ஆட்சி என்பது உமரின் ஆட்சி போல அமைய வேண்டும் என்று..
நிர்வாகம் என்பது
இப்படித்தான் விருப்பு,வெறுப்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்..
நாட்டு நிர்வாகமோ, ஊர் நிர்வாகமோ எதுவாக இருந்தாலும் அதிகாரத்தில் உள்ளவர்கள், மற்றும் நம் அனைவருமே நாளை இறைவன் திருமுன்
கொண்டு வரும் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்து இறையச்சத்தோடு
செயல்பட வேண்டும்..
அப்படியான இறை செயல்பாடு அதிகார சிந்தையில் உதித்தால் மட்டுமே நிர்வாகத்தை நேர்மையான திறமையான ஆட்சியை மக்களுக்கு தரும் சிறந்த எண்ணங்களோடு வழி நடாத்திச் செல்ல முடியும்..
சிறு தவறுகளுக்கும் கூட வாய்ப்பேயில்லாத
சிறந்த நிர்வாகமாக
அது அமையவும் வாய்ப்பிருக்கிறது.
பதவி,அதிகாரம்
எல்லாமே பவிசாக பரிமாணிக்க தான் என்றாகி விட்டாலும் இதுவும் ஒரு இறை சோதனை தான்
என்பதை மறந்து
இருந்து விடக்கூடாது..
ஆட்சி அதிகாரத்தில்,
நிர்வாகத்தில் இருப்பவர்கள்
அதிகமதிகம்
அவசியம்
பலமுறை
இதுபற்றி சிந்திக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
எடுக்கப்படும் முடிவுகளும்,
தொடுக்கப்படும் வழக்குகளும்,
கொடுக்கப்படும் வாக்குறுதிகளும், இறைவனுக்கு உவப்பானதாக இருந்தால் இறையருள் என்றென்றும் நம் அனைவருக்கும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்வோம்.
#இன்ஷா_அல்லாஹ்
Saif Saif
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment