Monday, October 22, 2018

பெரிய மகான் ஒருவர்

பெரிய மகான் ஒருவர்
அந்த ஆற்றங்கரையோர கிராமத்திற்கு வந்திருந்தார்.
மக்களெல்லாம் அவரைத் தேடி வந்து
தங்கள் குறைகளைச் சொல்லி நிவாரணம் தேடிக் கொண்டிருந்தார்கள்.
மகான் கொடுத்த ஆன்மீக சிகிச்சையில்
அவர்கள் நலம் பெற்றார்கள்.
வளம் பெற்றார்கள்.
மகானின் மகாத்மியம் பல ஊர்களுக்கும் பரவியது.
பல செல்வந்தர்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து ஏராளமான காணிக்கைகளோடு பெரியவரை தரிசித்து தங்கள் பேராசைகள்
நிறைவேற ஆசிபெற்றுச் சென்றார்கள்.
அந்த ஊரிலேயே ஒரு ஏழை விறகு வெட்டி இருந்தார்.
தினமும் காட்டுக்குள் சென்று விறகுகளை வெட்டி எடுத்து வந்து அன்றாட வாழ்வை கழித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு மகானை சென்று சந்திக்க நேரம் வாய்க்கவில்லை.
ஒருநாள் உடல் நலமில்லாத காரணத்தால் விறகு வெட்டி காட்டிற்கு செல்லவில்லை.
சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை.
காலாற சற்று நடந்துவரச் சென்றவர்
பெரியவரின் வீட்டிற்கு முன்னால் கூடி நின்ற கூட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

மக்களிடம் அவரைப் பற்றி விசாரித்ததில் ...
அவர் மகான் என்பதை அறிந்து கொண்டார்.
கேட்டது கிடைக்கும்.
அவர்சொன்னது பலிக்கும் என்றார்கள் மக்கள்.
விறகு வெட்டியும் கூட்டத்தில் கலந்து பெரியவரை தரிசிக்கக் காத்திருந்தார்.
எல்லோரும்
பணம் , பழம் , பண்டங்களோடு காத்திருக்க
விறகு வெட்டி ஒன்றுமேயில்லாமல் நின்று கொண்டிருந்தார்.
பெரிய பெரிய பணக்காரர்களெல்லாம் பெரியவரை பணிந்து பாக்கியங்களை பெற்றுச் செல்ல விறகு வெட்டியும் தான் ஏழை என்பதை எடுத்துச் சொல்லி தனக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
காணிக்கை எதுவுமே கொண்டு வராத ஒரு பக்கீருக்கும் தான் ஆசி வழங்குவதா என்று எண்ணிக் கொண்ட பெரியவர் சற்றே பெருமையோடும் அலட்சியத்தோடும் ...
"எப்போதும் " அல்லாஹ் " என்று சொல்லிக் கொண்டே இரு. அல்லாஹ் உதவி செய்வான்" என்று சொல்லி அவரை அனுப்பி விட்டார்.
விறகு வெட்டியும் கிடைத்த பரிசை பெரிதாக எண்ணி மகிழ்வோடு சென்று விட்டார்.
எப்போதும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருந்தார்.
மகான் இப்போது ஊரில் பெரிய செல்வந்தராகி விட்டார்.
பல பணியாளர்களோடு வசதியாக வாழ்ந்தார்.
நாட்கள் சென்றன.
ஒருநாள் பெய்த கடும் மழையில் ஆறு கரைபுரண்டு ஓடியது .
ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.
மக்களெல்லாம் அலறியடித்துக்கொண்டு தப்பிச் சென்றார்கள்.
மாளிகையில் படுத்துறங்கிய மகானை மறந்துவிட்டு பணியாளர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
தண்ணீர் தன் மேனியை தழுவுவதை உணர்ந்து
திடுக்கிட்டு கண்விழித்த பெரியவர் திகைத்தார்.
பின்னர் நகைத்தார்.
இறையருள் பெற்ற தன்னை இந்த தண்ணீர் என்ன செய்து விடும் என்ற அலட்சியத்தோடு வீதியில் இறங்கினார்.
தண்ணீர் அவரை இழுத்தது.
" பிஸ்மில்லாஹ் " என்று சொல்லியபடி மகான்
தண்ணீரில் நடக்க ஆரம்பித்தார்.
ஆனால் தண்ணீர் அவரை நடக்க விடவில்லை.
நீச்சல் தெரியாத பெரியவர் தண்ணீரில் மூழ்கினார்.
மூச்சுத் திணறி இறக்கப்போகும் நேரத்தில் ஒருவர் வந்து அவரது தலையைப் பிடித்து
மேலே தூக்கி காப்பாற்றி அக்கரையில் கொண்டு சேர்த்தார்.
தன்னைக் காப்பாற்றிய ஆள் யாரென்று பார்த்த பெரியவர் ஆச்சரியத்தால் வாயைப் பிளந்தார்.
அந்த ஆள்
ஏழை விறகு வெட்டி.
அவர் சர்வ சாதாரணமாக தண்ணீரில் நடந்தும் ஓடியும் சென்று மக்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
வாய் மட்டும் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
எல்லா மக்களையும் கரைசேர்த்துவிட்டு
வந்த விறகு வெட்டியிடம் ...
" தண்ணீரில் நடக்கும் வித்தையை உனக்குக் கற்றுத் தந்த்து யார் ?" என்று கேட்டார் பெரியவர்.
" தாங்கள்தான் " என்றார் விறகு வெட்டி.
" நானா ? நான் எப்போது கற்றுத் தந்தேன் ?"
" நான் உங்களை சந்தித்த போது நீங்கள்தான் எப்போதும் அல்லாஹ் அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டேயிரு. அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவான் என்று சொன்னீர்கள். நான் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் என்னை மட்டுமல்ல. எல்லோரையும் காப்பாற்றினான் " என்றார் விறகு வெட்டி.
பெரியவர் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டார்.
" தான் சொல்லிக் கொடுத்த ஒரு மந்திரம் ஒரு சாமானியனுக்கு வசமாகியிருக்கிறது.
தனக்கு வசமாகமல் போன காரணம் என்ன ?"
என யோசித்தார்.
" தன்னிடம் குடிகொண்டு விட்ட பெருமையும் அலட்சியமும்தான் காரணம் " என்பதை புரிந்து கொண்டு விறகு வெட்டிக்கு அவர் சீடராகி விட்டார்.

/ எவன் உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவனை இறைவன் விரும்புவதில்லை / என்ற உண்மை
அவர் புத்தியில் உறைத்தது.

Abu Haashima

No comments: