Monday, June 4, 2018

நபிமொழிக் கவிதைகள் — 05

நபிமொழிக் கவிதைகள் — 05
18

சத்திய நபிக்கு

சதகா கிடையாது

தாஹா நபிக்கு

தர்மம் கொடுக்க முடியாது



உண்மையின் விளக்கெரிய

எண்ணெய் கொடுத்தவருக்கு

ஓரிறை உண்மைக்குத்

தன்னைக் கொடுத்தவருக்கு

தானம் எப்படிக் கொடுக்க முடியும்?



ஆனால்

அன்பின் அளிப்புக்கு

அனுமதியுண்டு

அல் அமீன் அவர்களுக்கு

அன்பளிப்பு கொடுக்கலாம்

மதியான நபிக்கு

ஹதியா உண்டு



(சதகா என்பது தர்மம். ஹதியா என்பது அன்பளிப்பு. பெருமானார் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒரு நபியின் அந்தஸ்துக்கு உகந்ததல்ல என்பதால் பெருமானார் சதகாவை ஏற்றுக்கொள்வதில்லை. புகாரி, அ:அபூஹுரைரா. 03 – பல நபிமொழிகள்)



19

தர்மம் என்னும் தண்ணீர்

இறைக்கோபத்தை அணைக்கிறது

இறைவனோடு நம்மை இணைக்கிறது

இலகுவாக என்றார்கள்

இறுதிநபி

(திர்மிதி. அ: அனஸ் இப்னு மாலிக். 02 – 664)

20

பதியின் அனுமதியின்றி

பத்தினி செய்யும் தர்மத்தின் பலன்

பாதிபோகும் கணவனுக்கு

மீதி போகும் மனைவிக்கு என

முஸ்தஃபா மொழிந்தார்கள்

(புகாரி, அ:அபூஹுரைரா. 07 – 5360)

21

நீங்கள் போனபின்பு

எங்களில் யார்

உங்களை முதலில்

வந்து சேருவோம்

என்று கேட்டனர்

அண்ணல் நபியின்

அருமை மனைவியர்



உங்களில் யாருக்கு

நீண்ட கைகளோ

அவர்தான் என்றார்

அண்ணல் நபிகள்



கட்சி கட்சியாய்ப் பிரிந்துவிடாமல்

குச்சிகள் வைத்து அளந்து பார்த்தனர்

அன்னையர் தம் அழகுக் கைகளை

அனைவரதையும் விட நீளமாக இருந்தது

அன்னை சவ்தாவின் அன்புக்கைதான்

ஆனாலும் அன்னை ஜைனப்தான் முதலில்

அண்ணல் நபியை மறுமையில் இணைந்திட்ட

அருமை மனைவியானார்



அவர் பிரிந்தபின்தான் புரிந்தது அன்னையர்க்கு

நீளக்கை என்றதன் மர்மம் — அது

நீண்ட கைகளால் கொடுத்திட்ட தர்மம்

(புகாரி, அ: ஆயிஷா. 02 – 1420)

22

ஆண்டவனின் ஆத்திரத்தை

அழிக்கிறது தர்மம்

மோசமான முடிவுதனை

ஒழிக்கிறது தர்மம்

(திர்மிதி, அ: அனஸ் இப்னு மாலிக். 02 – 664)



நன்றி: மக்கள் உரிமை மே 25 — 31, 2018

  நன்றி:பறவையின் தடங்கள்

iDr. A.S.Mohamed Rafee aka Nagore Rumi

President: Global Spiritual Garden

Chenna
 
https://nagoorumi.wordpress.com

No comments: