Monday, June 4, 2018

நபிமொழிக் கவிதைகள் — 04


14

’அஸ்ஸாமு அலைக்க’

’சாவு உண்டாகட்டும் உங்களுக்கு’

என்று முகமன் கூறினர்

சாமர்த்திய யூதர்

’வ அலைக்க’

’உங்களுக்கும்’ என்றார்கள்

சத்தியத்தின் தூதர்

(புகாரி, அ:ஆயிஷா. 04 – 2935)




15

உள்ளத்தின் திறவுகோல்

அழுகையாகும்

சொர்க்கத்தின் திறவுகோல்

தொழுகையாகும்

(திர்மிதி. அ: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ். 01 – 04, புகாரி. பல நபிமொழிகள்)



16

என் சமுதாயத்தவருக்கு

சங்கடமாக இருக்காது எனில்

ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும்

பல்லைச் சுத்தம் செய்துகொள்ளச்

சொல்லியிருப்பேன் என்றார்கள்

பல்லிலும் சொல்லிலும் செயலிலும்

சுத்தமான சுந்தர நபி

(முஸ்லிம், அ: அபூஹுரைரா. 01 – 589)



17

மக்கத்து மக்களோடு

கற்களைக் கையில் ஏந்தி

க’அபாவைப் புதுப்பிக்க

கொண்டு சென்றார்

இளைஞர் முஹம்மது



தம்பி மகனே

இடுப்பில் உள்ள இஸார் என்னும்

துண்டை எடுத்துத்

தோளில் போட்டுக்கொள்

கற்கள் உன்னை காயப்படுத்தாதென

பாசமுடன் பகர்ந்தார்

பெரியதந்தை அல் அப்பாஸ்



கடினமான பணிகளுக்கு

கட்டிக்கொள்ளும் துணிகளின்றி

காரியங்கள் ஆற்றுவதே

அந்தக்கால அரேபியரின்

அருவருக்கத்தக்க வழக்கம்



பெரியவரின் சொல்லதற்கு

மரியாதை கொடுத்துவிட

துணியை உருவித் தோளில் போட்ட

மறுகணமே மயக்கமுற்றார்

மருவிலா முழுமதியாம் முஹம்மது



ஆடையின்றி இருந்ததெல்லாம்

அவர் வாழ்வில் ஒருமுறைதான்

அதை அவரும் பார்க்காமல்

நாணத்தால் தடுத்திட்டான்

நல்லபடி நாயனவன்



மானத்தால் உயர்ந்த நபி

நாணத்தால் நினைவிழந்தார்



அச்சம் மடம் நாணம் பயிர்ப்பெல்லாம்

ஆண்களுக்கும் உண்டென்று

அப்பொழுதே காட்டிவிட்டார்

அண்ணல் எம் பெருமகனார்

நன்றி: மக்கள் உரிமை மே 18 — 24, 2018

(புகாரி, அ: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ். 01 – 364)

  நன்றி:பறவையின் தடங்கள்

Dr. A.S.Mohamed Rafee aka Nagore Rumi

President: Global Spiritual Garden

Chennai
 
https://nagoorumi.wordpress.com

No comments: