Sunday, June 3, 2018
நபிமொழிக் கவிதைகள் — 02
04
ஃபாத்திமாவுடன் பிணக்கு ஏற்பட்டு
பள்ளிவாசலுக்குச் சென்று
படுத்துக்கொண்டார் கணவர் அலீ
மகளுடன் பிணங்கிக்கொண்ட மருகரை அழைத்துவர
விரைந்தார்கள் பள்ளிக்கு
வித்தியாசமான நபி
மேலெல்லாம் மண்ணாக
மேன்மை அலீ படுத்திருந்தார்
தன் கையால் மண்ணையெல்லாம்
தட்டி விட்டு தட்டி விட்டு
’மண்ணின் தந்தையே’ எழுந்திருங்கள்
என்றுரைத்தார்கள் ’பெண்ணின் தந்தை!
(அதன் தந்தையே, இதன் தந்தையே என்று பட்டப்பெயர் வைப்பது அரேபியர் பழக்கம். உதாரணம்: அபூ ஹுரைரா: ‘பூனையின் தந்தை’, அபூ ஜஹல், ’அறியாமயின் தந்தை’. அதேபோல தூசி படிந்த நிலையில் இருந்த அலீ அவர்களைப் பார்த்து பெருமானார் சொன்னது: அபா துராப்: ’மண்ணின் தந்தை’).
(புகாரி, அ: சஹ்ல் இப்னு ச’அத். 08 – 6204)
05
வீட்டிலிருக்கும்போது வாஞ்சை நபி
என்ன செய்வார்கள் என்று
ஆயிஷாவைக் கேட்டார் அஸ்வத் பின் யஸீத்
அன்னை ஆயிஷா அப்போது சொன்னார்:
வீட்டு வேலைகளை
விருப்பமுடன் செய்வார்கள்
அல்லாஹ்வைத் தொழுவதற்கு
அழைப்பொலி கேட்டுவிட்டால்
விறுவிறுவென வெளியில் செல்வார்கள்
(புகாரி, அ: ஆயிஷா. 07 – 5363)
06
இறைவனுக்காக யுத்தம் செய்
அல்லது ஓர் ஏழைக்கு ஆதரவு நித்தம் செய்
இரண்டும் ஒன்றுதான்
இரவெல்லாம் தொழுது வணங்கு
அல்லது ஓர் ஏழையை ஆதரிக்க இணங்கு
இரண்டும் ஒன்றுதான்
நாளெல்லாம் நோன்பு பிடி
அல்லது ஓர் ஏழைக்குக் கொடு உன் ஆதரவு மடி
இரண்டும் ஒன்றுதான்
(ஏழை அல்லது விதவை என்றும் ஹதீது கூறுகிறது)
(புகாரி, அ: சஃப்வான் இப்னு சுலைம். 08 – 6006)
07
சிறுநீர் கழிக்க வெகுதூரம்
செம்மல் நபி சென்றது ஏன்
சிந்திக்க நமக்கதில் செய்தியுண்டு
தானம் தர்மம் செய்வதைப் போல்
நாணம் கொள்வதும் நபிவழியே
(புகாரி.அ:அல் முகீரா இப்னு ஷு’பா. 04 – 2918; அபூதாவூத், ஜாபிர். 01 – 01, 02)
08
கெட்ட வார்த்தை சொன்னதில்லை
காசிம் நபி
திட்டி யாரும் பார்த்தில்லை
தாஹா நபி
’அவர் நெற்றியில் மண் விழட்டும்’ என்பதுதான்
அதிகபட்ச வசவாகும்
(புகாரி, அ: அனஸ். 08 – 6046)
நன்றி: மக்கள் உரிமை, மே 04 — 10, 2018 இதழ்
பறவையின் தடங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment