Sunday, August 28, 2016
காங்கோ பயணக்குறிப்பு ....! / ராஜா வாவுபிள்ளை
குள்ளமனிதர்கள் (PYGMIES).
ருவன்சூரி மலையடிவாரத்தின் அடர்ந்த காட்டின் நடுவேதான் பெனி நகரம் அமைந்திருக்கிறது. இந்த அடர்ந்த காடுகளில்தான் உலகில் அருகிவரும் மனிதக்குரங்குகள் (Gorilla) அதிகமாக உயிர்வாழ்கின்றன.
இங்கு சுகந்திரத்திற்கு முன்னாலேயே ஐரோப்பியர்கள் பால்ம்பனைத் தோட்டங்களை பயிர்செய்து இருந்தார்கள். எப்போதும் சாரல்போல் தூற்றிக்கொண்டிருக்கும் தூவானம் போன்ற காலச்சூழல் பால்ம்பனை விவசாயத்திற்கு ஏதுவானதாகும். அரசியல் பாதக சூழ்நிலையாலும் பாதுக்காப்பு இல்லாமையாலும் அவர்கள் பணப்பயிராக வளர்த்த பால்ம்பனைத் தோட்டங்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது அவைகள் பராமரிப்பு இல்லாமல் வனப்பயிராகி காணும் இடங்களிலெல்லாம் மண்டிக்கிடந்தன. அவற்றில் ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பால்ம்பனைத் தோட்டத்தைப் பார்வை இடுவதற்காகவே நான் அங்கு சென்றிருந்தேன்.
பாதை எதுவும் இல்லாத அடர்ந்த காட்டின் வழியே ஆங்காங்கே தென்பட்ட காலடித்தடத்தின் வழியாக வாகனம் செலுத்தப்பட்டது. கார்கண்ணாடியில் படர்ந்த இலை தழைகள் வெளியே வெளிச்சத்தைக் கூட பார்க்க முடியாதபடி மறைத்தன. என்னை அழைத்து சென்றவர் உள்ளூர் பிரமுகர் அடிக்கடி அவ்விடத்திற்கு வந்துபோவதால் சிறிதும் தயக்கமின்றி வாகனத்தை செலுத்தினார் நானும் பயமேதும் இல்லாமலே இருந்தேன்.
ஒரு மணிநேர ஆமைவேக நகர்வுக்குப் பின்னர் சிறிது வெளிச்சம் தென்பட்டது. வாகனத்தை நிறுத்திவிட்டு இது ஆப்ரிக்காவின் ஆதிமனிதர்களான குள்ளர்கள் வசிக்கும் கிராமம் என்று சொன்னதும் எனக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ள உடனே பார்க்க வேண்டும் என்றேன்.
என்னை வாகனத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு அவர் முதலில் கீழிறங்கினார். நான் காரில் இருந்த படியே பார்க்கிறேன் சிறு சிறு குழுக்களாக ஆண், பெண், சிறுவர்கள் காட்டுப்புதர்களினுள் இருந்து வெளிப்பட்டு அந்த பிரமுகரை நோக்கி பாட்டுப்பாடி நடனமாடியபடியே ஓடிவந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு என்னையும் வெளியே வரலாம் என்றார். அவர்களை பற்றி முன்னரே கேள்விப்பட்டு இருந்தாலும் நேரில் அதுவும் அவர்களது வசிப்பிடத்திலேயே சென்று பார்க்கப் பார்க்க அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.அவருக்கு ஒரு மன்னனுக்கு தரப்படும் பாரம்பரிய மதிப்பு மரியாதைகள் அவர்களது இனத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது, கூடவே எனக்கும். அவர்களை பார்த்ததும் எனக்கு பயமேதும் தோன்றவில்லை ஆனால் பரிதாபமே மேலோங்கியது.
அவர்களில் நன்குவளர்ந்த ஆணின் உயரம் மூன்று அடிகள்தான், அவர்களின் முன்னால் 5.5 அடி உயரமுள்ள நான் உயர்ந்த மனிதனாகவே நின்றுகொண்டிருந்தேன், பெண்கள் ஆண்களிலிருந்தும் சற்று குறைவான உயரம். உயரத்தில் அனைவரும் ஒரேமாதிரி இருந்தாலும் வயதின் முதிர்ச்சி முகத்தில் தெரிந்து விடுகிறது. ஆடை அணியும் நாகரிகம் அவர்களை வந்து சேரவில்லை. இடுப்பில் உடுப்புக்கு பதிலாக மரப்பட்டையை மிருதுவாக்கி மானத்தை மட்டும் வயதுக்கு வந்தவர்கள் மறைத்திருந்தார்கள்.
அவர்களது வீடுகள் கூ(டை)டுகள் போலத்தான் சிறியவகை வளைந்து கொடுக்கும் மூங்கில் கொண்டு அமைத்து காய்ந்த பெரிய இலைகளால் வேய்ந்து அமைக்கப் பட்டிருந்தது. ஒரு குடும்பம் முழுவதும் இரவில் ஒரு கூடையில் அடைந்து கொள்கிறார்கள், மழைக்காலத்தில் அவர்கள் வளர்க்கும் நாயும் சேர்ந்து கொள்ளும் ஏனென்றால் அவர்கள் விவசாயம் செய்யத்தெரியாதவர்கள் உணவுக்காக சிறிய வனவிலங்குகளை வேட்டையாடியும் தேனை சேகரித்தும் காட்டில் தாமாக விளையும் பழங்களை உண்டும் உயிர் வாழ்பவர்கள். ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி இருப்பதில்லை. இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்தபின்னர் அவ்விடத்தில் தொடர்ந்து குடியிருப்பதில்லை.
பள்ளிப் படிப்போ, மதங்களோ, மதபோ(தை)தங்களோ அவர்களுக்கு இல்லை. இயற்கை அளித்தவற்றை கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து இயற்கையாகவே அழிந்துபோகிறார்கள்.
இன்றைய தினத்தில் உலகில் அருகிவரும் இனங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாகம் 3.
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment